Crime : பொள்ளாச்சி டூ பாலக்காடு... கட்டைப்பையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு.. போலீசாருக்கு பாராட்டு
மருத்துவமனை முன்பு நின்ற ஒருவர், 2 பெண்கள் மருத்துவமனைக்குள் நுழைந்து சிறிது நேரத்தில் கட்டைப்பையுடன் ஆட்டோவில் சென்றதாக கூறவே போலீசார் உஷாரானார்கள்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்த யூனிஸ் என்பவர் அப்பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி திவ்யபாரதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.இதனிடையே கடந்த ஜூன் 27 ஆம் தேதி பிரசவத்துக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் திவ்ய பாரதியை உறவினர்கள் சேர்த்துள்ளனர். அங்கு ஜூன் 29 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.
தொடர்ந்து தாய்க்கும், சேய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குழந்தையுடன் திவ்ய பாரதி தூங்கியுள்ளார். அவர் நேற்று அதிகாலை 4.50 மணியளவில் எழுந்து பார்த்தபோது அருகில் குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். மேலும் தகவலறிந்து உறவினர்களும் அங்கு வரவே மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போடாட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கபப்ட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்.இதனையடுத்து மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர் உடனடியாக 6 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.
இதற்கிடையில் குழந்தையை கடத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரித்த போது மருத்துவமனை முன்பு நின்ற ஒருவர், 2 பெண்கள் மருத்துவமனைக்குள் நுழைந்து சிறிது நேரத்தில் கட்டைப்பையுடன் ஆட்டோவில் சென்றதாக கூறவே போலீசார் உஷாரானார்கள். மருத்துவமனை பகுதியில் சிசிடிவி கேமரா இல்லாத நிலையில் உடுமலை ரோடு தேர்நிலை பகுதியில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோ ஒன்று வேகமாக செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
மேலும் அவர்கள் உக்கடம் செல்லும் பஸ்ஸில் ஏறுவதும் தெரிய வந்தது. இதனையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில் காணாமல் போன பச்சிளம் குழந்தை கேரள மாநிலம் பாலக்காட்டில் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் குழந்தை காணாமல் போன சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு மீட்ட போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்