Aarudhra Gold Scam: இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது - விரைவில் ஆர்கே சுரேஷை பிடிக்க போலீஸ் நடவடிக்கை
" ரூசோ கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதும், தான் மாட்டிக் கொள்வோம் என்று பயந்த ஆர்.கே.சுரேஷ், துபாய்க்கு தப்பி ஓடிவிட்டார் "
ஆருத்ரா நிதி நிறுவனம்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை , சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில், ஆருத்ரா என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் பணம் போட்டால், மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரும் என கவர்ச்சிகரமான விளம்பரத்தை கொடுத்து , பல ஆயிரம் கோடிகளை பொதுமக்களிடமிருந்து சுருட்டிக் கொண்டு சென்றது. இந்த வழக்கு தற்போது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம், ரூ.2,438 மோசடி செய்ததாக புகார்கள் வந்துள்ளன. இதில் அதிக அளவு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் முதலீடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பாஸ்கர், மோகன்பாபு, பட்டாபிராம் பேச்சு முத்துராஜ் (எ) ரபீக், ஐயப்பன் ஆகிய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து உடனடியாக தமிழக காவல்துறை அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், முக்கிய இயக்குனர்களாக செயல்பட்டு வந்த ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர். சம்பந்தப்பட்ட நபர்கள் தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தும், எப்படியோ இயக்குனர்கள் வெளிநாட்டிற்கு தப்பி ஓடினர்.
திரைப்பட தயாரிப்பாளர்
இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக கடந்த டிசம்பர் மாதம், காஞ்சிபுரம், ஆர்கே கோவில் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகன் ரூசோ என்பவரை கைது செய்தனர். இவர் காஞ்சிபுரத்தில் ஐஏஎஸ் அகாடமி பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். அதேபோல, இவர் 'ஒயிட் ரோஸ்' என்ற திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ரூசோ , காவல் அதிகாரியாகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் காஞ்சிபுரம் பகுதியில் சீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இப்படி பல முகங்களைக் கொண்ட ரூசோ , பல லட்சம் மதிப்புள்ள கார்களில் வலம் வருவதையும், அப்பகுதியில் வாடிக்கையாக வைத்து வந்துள்ளார். திரைப்பட தயாரிப்பாளராக இருந்த இவர், பல முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடன் நெருக்கமாக இருந்த தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை காவல்துறையினர் நோட்டமிட்டு வந்தனர்.
மீண்டும் வேகம் எடுத்த வழக்கு
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய மாதங்களில் தொய்வு ஏற்பட்டது. சமீபத்தில் இந்த வழக்கை கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மோடக், ஐஜி ஆசியம்மாள், எஸ்பி மகேஷ்வரன் ஆகியோர் விசாரணையை தீவிரப்படுத்த துவங்கினர். இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குனரும், பாஜகவில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்த ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குனரான மாலதி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். ஹரீஷ் என்பவர் காவலில் எடுத்தும் காவல்துறையினர் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகர் ஆர்.கே. சுரேஷ் சிக்கியது எப்படி ?
முன்னதாக டிசம்பர் மாதம் கைதான, ரூசோ நடிக்கும் திரைப்படத்தை ஆர்.கே. சுரேஷ் தயாரிப்பதும் சந்தேகத்தை காவல்துறையினருக்கு ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் தன்னை குட்டி பிரபலமாக நினைத்துக் கொண்டு சுற்றி திரிந்த ரூசோவிடம் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் வெளியானது, ஆர்.கே. சுரேஷ் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால், இந்த வழக்கில் இருந்து , தானும் தனது நண்பர்களும் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்பதற்காக, 12 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். மேலும் , இன்னும் சில கோடிகளை செலவு செய்தால், இந்த வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்துவிடலாம் என ஆர் .கே சுரேஷ் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ரூஸோ கைதான தகவலை அறிந்தவுடன், நடிகர் சுரேஷ், துபாய் சென்று தலைமறைவாகியுள்ளார். இந்த வழக்கில் சுரேஷ் சம்பந்தப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளதாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆர்.கே .சுரேஷ் யார் யாரிடம் இந்த பணத்தை கொடுத்து இருக்கிறார், என்ற கோணத்திலும், ரகசிய தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும், சிலர் சிக்குவார்கள் என காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் கார்னர் நோட்டீஸ்
ஹரிஷ் உள்ளிட்ட முக்கிய இயக்குனர்கள் பல பிரமுகர்களை சந்தித்த, சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி காவல்துறையினர் பல ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். ஏற்கனவே ஆருத்ரா கோல்டு நிறுவன உரிமையாளர் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி உஷா ராஜசேகர் ஆகியோர் துபாயில் உள்ளனர். அவர்கள் இருவரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வர, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
லுக் அவுட் நோட்டீஸ்
பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு விசாரணை வளையத்தில் இருக்கும் ஆர்.கே.சுரேஷ் விசாரணையில் இருந்துள்ளார். இருப்பினும், விசாரணையில் இருந்து தப்பிக்க அவர் தலைமறைவாக உள்ளார். அவர் எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை. இது தொடர்பாக ஆர்.கே.சுரேஷுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. போலீஸ் சம்மனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இருப்பினும், இதற்கு உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. போலீசார் சம்மனுக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ஆர்.கே.சுரேஷ் தலைமறைவாக இருக்கும் நிலையில், அவருக்கு எதிராகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். இதன் மூலம் அவரால் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல முடியாது.