வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை துப்பாக்கி முனையில் வன்கொடுமை செய்த காவலர்.. உ.பியில் பயங்கரம்!
உத்தரப் பிரதேசத்தின் மொரதாபாத் பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவர் கடந்த ஒரு ஆண்டாக பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 26 வயது பெண்ணை வன்கொடுமை செய்து வந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் மொரதாபாத் பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவர் கடந்த ஒரு ஆண்டாக பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 26 வயது பெண்ணை வன்கொடுமை செய்து வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி திருமணமானவர் என்றும், அவருக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவர் உத்தரப் பிரதேசத்தின் பாலியா மாவட்டத்திற்குப் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவப் பணியாளரான பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2019ஆம் ஆண்டு, மற்றொரு ஆணின் மீது பாலியல் வன்கொடுமை வழக்கில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், தற்போது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் காவல்துறை அதிகாரி, கடந்த 2020ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவுவதாகக் கூறி, அவர் வீட்டில் தனியாக இருந்த போது, துப்பாக்கி முனையில் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே கொடுத்த புகாரில், தன்னிடம் போலியான பெயருடன் ஒரு நபர் பழகி, திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளார். அந்த நபரின் அடையாளம் தெரிய வந்தவுடன், அவர் தன்னை மதம் மாறக் கூறுவதாகக் கூறி, முந்தைய வழக்கைப் பதிவு செய்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண். இந்த விசாரணையின் போது, தற்போது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் காவல்துறை அதிகாரி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசி, தான் உதவுவதாகக் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் இந்த விவகாரம் தொடர்பாக உயரதிகாரிகளிடம் புகார் அளிக்க முயன்ற போது, குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி புகார் அளிக்க வேண்டாம் எனக் கூறி, சமாதானம் செய்ததோடு, திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்துள்ளார். அதன்பிறகு, அவரோடு வாழ்ந்து வந்த பாதிக்கப்பட்ட பெண், சமீபத்தில் அந்தக் காவல்துறை அதிகாரி திருமணம் ஆனவர் என்பதும், அவருக்குக் குழந்தை இருப்பதும், அவரது குடும்பம் பேரலி நகரத்தில் வாழ்ந்து வருவதும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, இந்த விவகாரத்தை வெளியில் கூறினால், மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரும் எனப் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டியுள்ளார் காவல் அதிகாரி.
இதுகுறித்து பேட்டியளித்துள்ள மொரதாபாத் காவல்துறை உயரதிகாரி ஒருவர், `வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து எழுத்துப்பூர்வமாகப் புகார் ஒன்றைப் பெற்றுள்ளோம். அவர் காவல்துறை அதிகாரி ஒருவரால் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். எனவே குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியின் மீது சட்டப்பிரிவுகள் 376 (வன்கொடுமை), 506 (கொலை மிரட்டல்), 504 (அமைதி குலைவை தூண்ட கருதி அவமதிப்பு செய்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதோடு, அவர் தற்போது பணியாற்றும் காவல் நிலையத்திலும் அவர் குறித்து தகவல்களை வழங்கியுள்ளோம். மேலும், அவர் மீது துறை சார்ந்த விசாரணை நடைபெறும்’ எனக் கூறியுள்ளார்.