மயிலாடுதுறை: விவசாய கூலித் தொழிலாளி கொலை - கணவன் மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..
மயிலாடுதுறை அருகே விவசாய கூலித் தொழிலாளி கொலை வழக்கில் கணவன் மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு கிராமத்தில், விவசாய நிலத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக விவசாய கூலித் தொழிலாளியை வீட்டுக்குள் புகுந்து கட்டை மற்றும் இரும்புப் பைப்பால் தாக்கி கொலை செய்த வழக்கில், கணவன், மனைவி இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
சம்பவத்தில் பின்னணி
மயிலாடுதுறை தாலுக்கா, மணல்மேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தலைஞாயிறு தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் 55 வயதான பன்னீர்செல்வம். அதே தெருவைச் சேர்ந்தவர் 49 வயதான சுசிலா. இருவரும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஆவர். 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 31-ஆம் தேதி, வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாய் தகராறுக்கு பிறகு, சுசிலா மற்றும் அவரது கணவரான லட்சுமணன் (54) ஆகியோர் பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு இது குறித்து கேட்க சென்றுள்ளனர்.
இரும்பு கம்பியால் அடித்து கொலை
அப்போது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த சுசிலா மற்றும் அவரது கணவர் லட்சுமணன் இருவரும் பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு கட்டை மற்றும் இரும்புப் பைப் போன்ற பொருட்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பன்னீர்செல்வம் படுகாயமடைந்து தரையில் மயங்கி விழுந்துள்ளார். அதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கொலை வழக்கு பதிவு
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து, பன்னீர்செல்வத்தின் மனைவி அன்புச்செல்வி, மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், மணல்மேடு போலீஸார் சுசிலா மற்றும் அவரது கணவர் லட்சுமணன் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 307-ன் கீழ் வழக்கு பதியப்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பன்னீர்செல்வம், சிகிச்சை பலனின்றி சில நாட்களில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 302-ன் கீழ் புதிய வழக்கு பதியப்பட்டது.
நீதிமன்ற விசாரணை
இந்த வழக்கு தொடர்பான விசாரணை, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கினை அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜராகி வாதாடி வந்தார். இந்த வழக்கில், அரசுத் தரப்பு சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் வலுவாக இருந்ததை அடுத்து, தாக்குதல் நடந்த விதம், காயங்கள், மற்றும் பாதிக்கப்பட்டவரின் இறப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் சாட்சியங்கள் அமைந்திருந்தன, இவற்றையெல்லாம் நீதிமன்றம் கருத்தில் கொண்டது.
ஆயுள் தண்டனை விதிப்பு
தொடர்ந்து நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில், குற்றம் சாட்டப்பட்ட லட்சுமணன் மற்றும் சுசிலா இருவரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்மானித்தார். கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இந்த வழக்கில் கடுமையான தண்டனை தேவை என்று நீதிமன்றம் கருதியது. அதனையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சத்தியமூர்த்தி, குற்றவாளிகள் லட்சுமணன் மற்றும் சுசிலா ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், இருவரும் தலா ரூ.2000 அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்புக்குப் பிறகு, குற்றவாளிகள் இருவரையும் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்று காவல்துறையினர் அடைத்தனர்.






















