‘பணி முடிந்தது; இறைவனடி சேர்கிறோம்’ - தனியார் தங்கும் விடுதியில் கிடந்த 4 சடலங்கள்!திருவண்ணாமலையில் அதிர்ச்சி
உயிரிழந்தவர்கள் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீமகாகால வியாசர், ருக்மணி பிரியா, ஜலந்தரி, ஆகாஷ் குமார் என்பது தெரியவந்தது.
திருவண்ணாமலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கிடந்த 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிவலப்பாதையில் சூரியலிங்கம் அருகில் உள்ள டிவைன் ஃபார்ம் ஹவுஸில் இருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலை சுற்றியுள்ள 14 கி.மீ சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் செயல்படக்கூடிய தனியார் தங்கும் விடுதி, அதாவது டிவைன் ஃபார்ம் ஹவுஸ் என்ற விடுதியில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கணவன், மனைவி, பிள்ளைகள் இரண்டு பேர் என 4 பேர் தங்கும் வகையில் ரூம் இருக்கிறதா என இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைபேசி மூலம் விசாரித்துள்ளனர்.
தொடர்ந்து நேற்று மதியத்திலிருந்து தங்குவதற்காக நேற்று காலையே ஆன்லைன் மூலம் அவர்கள் ரூம் புக் செய்திருக்கிறார்கள். பின்னர் ஒரு மணிக்கு திருவண்ணாமலை வந்திருக்கின்றனர். இறந்து கிடந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அதாவது சென்னையைச் சேர்ந்த 40 வயதான மகாகால வியாசர் தனது மனைவி ருக்மணி, 15 வயதான மகள் ஜலந்தரி, 17 வயதான மகன் ஆகாஷ் ஆகியோருடன் திருவண்ணாமலை வந்துள்ளார்.
நேற்று இரவு வழக்கம்போல் உணவருந்திவிட்டு ரூமுக்குள் சென்றவர்கள் காலை வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த அங்கிருந்தவர்கள் ரூமுக்கு அருகில் சென்று பார்த்துள்ளனர். ஜன்னல் வழியில் பார்த்தபோது அவர்கள் வித்தியாசமாக படுத்திருந்தது போன்று தோன்றியுள்ளது. இதையடுத்து தனியார் விடுதி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசார் உள்பக்கமாக தாழ்பால் போடப்பட்டிருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். இதையடுத்து 4 பேரும் இறந்த நிலையில் கிடந்தனர். தொடர்ந்து 4 பேரின் சடலங்களையும் மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் தங்கள் பணி முடிந்து விட்டதாகவும் இறைவனடி சேர்ந்தவதாகவும் வீடியோ ஒன்றை பதிவு செய்து வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அவர்களின் பூர்வீகம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உடற்கூராய்வின் முடிவில் வெளியான பிறகே இறப்பிற்கான காரணம் குறித்து விரிவான தகவல் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.