திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 37 பேர் கைது
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே காரில் கடத்தி வந்த ரூ.2½ லட்சம் புகையிலை பொருட்களும், திருச்சி மாநகரில் 70 கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் , இது தொடர்பாக 37 பேர் கைது. .
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அரசால் தடைசெய்யபட்ட போதப்பொருள், குட்கா, கஞ்சா, போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கையை காவல்துறையினர் எடுத்து வருகிறார்கள். குறிப்பாக பள்ளி, கல்லூரி அருகே போதைபொருட்களை விற்பனை செய்வதை தடுக்க காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சமயபுரத்தில் இருந்து காரில் புகையிலை பொருட்கள் லால்குடி வழியாக டால்மியாபுரத்துக்கு கடத்தி செல்லப்படுவதாக லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்படி திருச்சி- சிதம்பரம் சாலையில் நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் நேற்று இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சமயபுரத்தை அடுத்த மாடக்குடி பஸ் நிலையம் அருகே ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து புகையிலை பொருட்களையும், காரையும் பறிமுதல் செய்த போலீசார் புகையிலை பொருட்களை கடத்தி வந்த இனாம் சமயபுரம் ஒத்தக்கடை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த சஞ்சீவி மகன் புவனேஸ்வரன் (வயது 27) என்பவரை பிடித்து சமயபுரம் போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும். மேலும் இந்த புகையிலை பொருட்கள் சமயபுரம், லால்குடி, டால்மியாபுரம், திருச்சி, மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என்.காமினி மாநகரில் பல்வேறு பகுதிகளில் புகையிலை பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை குறித்து அதிரடி சோதனை மேற்கொண்டார். அப்போது, கீழப்புலிவார்டு சாலை பகுதியில் ஒரு காரில் ரூ.72 ஆயிரத்து 600 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து கார் உரிமையாளரான லால்குடியை சேர்ந்த ராம்குமார் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள், கார், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பல்வேறு கடைகளில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 70 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனையின் போது, உணவு பாதுகாப்புத்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகே போதைபொருட்கள் விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல்களை 96262 73399 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு தெரிவிக்கலாம் என்று மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசால் தடை செய்யபட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்தாலோ, பதுக்கி வைத்தாலோ சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.