#JusticeforSabiyaSaifi: ட்விட்டரில் ட்ரெண்டாகும் நீதிக்கான குரல்; டெல்லியில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை கொடூரம்..
#Justiceforsabiyasaifi என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. டெல்லியில் நடந்த மிகக்கொடூரமான பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவத்துக்கு நீதி கேட்டு இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டாக்கப்படுகிறது.
#Justiceforsabiyasaifi என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. டெல்லியில் நடந்த மிகக் கொடூரமான பாலியல் பலாத்காரம், கொலை சம்பவத்துக்கு நீதி கேட்டு இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டாக்கப்படுகிறது.
நிர்பயா இந்தப் பெயரை இந்தியா மட்டுமல்ல உலகமே மறக்காது. இந்தியப் பெண்களின் நிலை இதுதான் என்ற உலக ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டச் செய்த சம்பவம். ஆனால், அந்தச் சம்பவம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் வெகுண்டெழ செய்தது. நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இப்போது நமது தேவை தூக்கு தண்டனைகள் அல்ல பாலியல் வன்கொடுமைகளுக்கு ஒரு முற்று. ஆனால், நிர்பயாவுக்குப் பின்னரும் கொடூரங்கள் ஓயவில்லை.
கத்துவா சிறுமி, உன்னாவோ சம்பவங்கள் என நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இந்த முறை டெல்லியைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய மார்பகங்கள் அறுத்தெறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உடல் முழுவதும் 50 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் உள்ளன. ஆனால் காவல்துறை, இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் #justiceforsabiya, #justiceforsabiyasaifi என்ற ஹேஷ்டேக்குகளில் நெட்டிசன்கள் நீதிக்கேட்டு போராடிவருகின்றனர்.
பாதிக்கப்பட்ட இளம் பெண் எத்தனை எத்தனை கனவுகளுடன் காவல் உடையை அணிந்தாரோ தெரியவில்லை. 21 வயதே ஆன அந்த இளம் அதிகாரி பணியில் சேர்ந்து 4 மாதங்கள் தான் ஆகின்றன. டெல்லி காவல்துறையில் அவர் பணியாற்றி வந்தார். கடந்த 27 ஆம் தேதி அவர் வசந்த் விஹாரில் உள்ள தனது வீட்டிற்குப் பணி முடிந்த புறப்பட்டார். ஆனால், அவர் வீட்டுக்கு வரவில்லை. பெற்றோர், உறவினர் இளம் பெண்ணை அவர் பணி செய்யும் இடத்திற்கே சென்று தேடினர். அவர் எங்குமே இல்லை. இதனால் போலீஸில் புகார் கொடுத்தனர். அப்போதுதான் பெண்ணின் சடலம் கிடைத்தது. அந்தப் பெண் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
ஆண் நண்பரின் கைவரிசையா?
இந்தச் சம்பவத்தில் அவரின் ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் ரகசியமாகத் திருமணம் ஆனதாகக் கூறினார். ஆனால் அதை நிரூபிக்க அவரிடம் எந்த சாட்சியும் இல்லை. ஆனால், இளம் பெண் தனக்கு உண்மையாக இல்லாததால் நண்பர்களுடன் இணைந்து கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்ததாக அவர் கூறியுள்ளார். இது உண்மைதானா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அடையாளம், பெற்றோர் விவரம் என எதுவுமே ஊடகங்களில் வெளியிடப்படக் கூடாது என்பது உச்ச நீதிமன்ற உத்தரவு. ஆனால், சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேகில் பெண்ணின் பெயரும் அத்துடன் அவருடைய புகைப்படமும் சேர்த்தே ட்ரெண்டாக்கப்படுகிறது.