திருமணமாகாத ஆண்கள் வாழ்க்கையில் விளையாடிய 20 பெண்கள்.. இப்படி ஒரு கேவலமான சம்பவமா?
மேட்ரிமோனி வலைத்தளங்கள் என்று கூறி திருமணமாகாத ஆண்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டுள்ளனர். மணப்பெண் கிடைக்காமல் பல காலமாக காத்திருக்கும் நபர்கள் குறிவைக்கப்பட்டு அவர்களுக்கு ஏற்ற வரன்களை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலில் திருமணமாகாத ஆண்களை குறிவைத்து நடைபெற்ற திருமண மோசடியில் 20 பெண்கள் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபாலில் உள்ள ததிப்பூரின் மயூர் நகர் மற்றும் ஜோதி நகர் ஆகிய பகுதிகளில் திருமணம் என்ற பெயரில் நாடு முழுவதும் திருமணமாகாத ஆண்களை குறிவைத்து மோசடி நடப்பதாக குவாலியர் குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. இதனை அடிப்படையாக கொண்டு இரு இடங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். இதில் இரண்டு இடங்களில் இருந்தும் 20 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மயூர் நகர் மற்றும் ஜோதி நகர் ஆகிய திருமண தகவல் மையம் நடத்தியதாக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த மோசடியின் மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் திலேஷ்வர் என்ற நபர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது.
இதுதொடர்பாக காவல்துறையினர் அளித்துள்ள தகவலின்படி, “திருமணத்துக்கான மேட்ரிமோனி வலைத்தளங்கள் என்று கூறி திருமணமாகாத ஆண்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டுள்ளனர். மணப்பெண் கிடைக்காமல் பல காலமாக காத்திருக்கும் நபர்கள் குறிவைக்கப்பட்டு அவர்களுக்கு ஏற்ற வரன்களை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளனர். அதன்படி இணையத்திலிருந்து மாடல்கள் மற்றும் கவர்ச்சிகரமான பெண்களின் புகைப்படங்களைப் பதிவிறக்கம் செய்து போலி சுயவிவரங்களை உருவாக்கி திருமண வரன் தேடும் தங்கள் மையத்தில் பதிவு செய்த ஆண்களுக்கு அனுப்பியுள்ளனர். இருவருக்கும் நல்ல பொருத்தம் இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதில் சில பேர் சில மாதங்கள் காத்திருந்த நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். உடனடியான போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்படி குவாலியர் குற்றப்பிரிவு, சைபர் கிரைம், தத்திப்பூர் காவல்துறை ஆகியவை இணைந்து செயல்பட்டு இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
முதலில் மயூர் நகரில் உள்ள மயூர் பிளாசாவுக்குப் பின்னால் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். புனராம் படேல் என்பவரின் மகன் திலேஷ்வர் படேலின் அந்த வீட்டின் முதல் தளத்தில் போலி திருமண தகவல் மையம் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த மடிக்கணினிகள், கணினிகள், பதிவேடுகள், மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அந்த மையத்தில் வேலை பார்த்து வந்த 20 முதல் 25 வயதுக்குட்பட்ட 12 இளம் பெண்கள் ஆண்களிடம் சமூக வலைத்தளங்களில் பேசி பணம் கறக்கும் விஷயத்தில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது. இந்த பணியானது திலேஷ்வர் படேலின் வழிகாட்டுதலில் கஜேந்திர கவுரின் மனைவி ராக்கி கவுர் என்பவர் நடத்தி வந்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆனால் இந்த கைது நடவடிக்கை நடந்த பின்னரும் சம்பந்தப்பட்ட திருமண தகவல் மைய வலைத்தளம் தொடர்ந்து இயங்கி வந்தது. அதன் ஐபி அட்ரஸை வைத்து சோதனையிட்டதில் ஜோதி நகர் பகுதியில் உள்ள துவாரகாதீஷ் கோயிலுக்கு எதிரே இருக்கும் ஒரு பிளாட்டில் 7 பெண்கள் வேலை செய்தது கண்டறியப்பட்டது. இதனை தர்பன் காலனியைச் சேர்ந்த ஆகாஷ் சவுகான் என்பவரின் மனைவி சீதா சவுகான் நடந்தியது தெரிய வந்தது.
இந்த போலி திருமண வலைத்தளத்தில் ஆண்கள் தங்களைப் பற்றிய தகவல்களை பகிர்ந்ததும், அழைப்பு மையங்களில் உள்ள பெண்கள் வருங்கால மணப்பெண்கள் போல் நடித்து தொடர்பு கொள்வார்கள். பின் அவர்களுடன் உரையாடி நம்பிக்கையை வளர்த்து பதிவு கட்டணம் உள்ளிட்ட வகைகளில் பல்வேறு முறை பணம் கேட்டு க்யூ ஆர் கோடுகளை அனுப்புவார்கள். அதிக பணம் பெற்ற நிலையில் சம்பந்தப்பட்ட மணமகனுடனான தொடர்பை துண்டித்து விடுவார்கள்.
இந்த வலைத்தளத்தில் பணியாற்றும் பெண்கள் ஸ்மார்ட்போன் உபயோகிக்காமல் கீபேட் மொபைல் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனால் அவர்களை தொடர்ச்சியாக கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றப்பட்டவர்கள் திணறியுள்ளனர். இந்தக் கும்பல் இதுவரை 1,500க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றி, சுமார் 1.5 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொண்டு வழக்கு தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















