சாக்லேட் கொடுத்து 1ம்வகுப்பு மாணவி கடத்தல்...திருவண்ணாமலையில் பரபரப்பு..!
திருவண்ணாமலை பள்ளியில் இருந்த 1ம் வகுப்பு மாணவியை சாக்லேட், பிஸ்கெட் கொடுத்து கடத்திய வாலிபர், அவர் அணிந்திருந்த 2 கிராம் கம்மலை பறித்துக்கொண்டு தப்பினார்.
திருவண்ணாமலை பள்ளியில் இருந்த 1 ம் வகுப்பு மாணவியை சாக்லேட், பிஸ்கட் கொடுத்து கடத்திய வாலிபர் அவர் அணிந்திருந்த 2 கிராம் கம்மலை பறித்துக்கொண்டு தப்பினார்.
திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் முதல் தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது வயது (32). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரிஸ்வானா வயது (30), இவர்களுக்கு மகள் ஷாலிஹா வயது (6) மகள் உள்ளார். ஷாலிஹா நகராட்சி பகுதியில் உள்ள முகல்புறா தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை மகள் ஷாலிஹாவை அவரது தாயார் ரிஸ்வானா பள்ளியில் விட்டு சென்றார். அதன்பின் சிறுமியின் தாயார் மதியம் உணவு கொடுப்பதற்காக பள்ளிக்கு வந்துள்ளார். ஆனால் அங்கு ஷாலிஹா மகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது, சிறுமி ஷாலிஹாவை ஒரு வாலிபர் பைக்கில் வந்து ஷாலிஹாவிடம் பேசிக்கொண்டு இருந்தார் அவர் யார் என்று தெரியவில்லை,ஆனால் சிறிது நேரத்தில் ஷாலிஹாவை பைக்கில் உட்கார வைத்து சென்றுள்ளார் என சிறுமியின் தாயிடம் கூறியுள்ளனர்.
இதற்கிடையில் சிறுமியை கடத்தி சென்றது சிறுமியின் தாயாருக்கு தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மன்னார்குடியில் இருந்து திருவண்ணாமலை வழியாக திருப்பதி சென்று கொண்டிருந்த ரயிலில் சிறுமி ஷாலிஹா அழுதபடி பயணம் செய்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பயணிகள் சிறுமி ஷாலிஹாயிடம் கேட்டுள்ளனர். அப்போது சிறுமி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி ஷாலிஹாவை பயணிகள் மீட்டு காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்த ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு சிறுமியை காவல்துறையினர் அழைத்துச் சென்று தண்ணீர் குடிக்க வைத்து பின்னர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், யார் என்று தெரியாத மர்ம நபர் ஒருவர் எனது பள்ளி அருகே இருந்தார் என்னை அழைத்து சாக்லேட் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுத்தார்.
அதன் பிறகு என்னை அவருடைய பைக்கில் உட்கார வைத்து கொண்டு ரயில் நிலையம் வரை பைக்கில் அழைத்து வந்தார். பின்னர், காதில் அணிந்திருந்த என்னுடைய 2 கிராம் கம்மலை கழற்றி கொண்டு, என்னை ரயிலில் ஏற்றி விட்டுவிட்டு சென்றார். நான் ரயிலில் அழுதபடி வந்ததால், ரயிலில் வந்தவர்கள் என்னை காப்பற்றினர் என்று கூறினார். இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை காவல்துறையினர், சிறுமியை மீட்டு அவரது தாயாரிடம் ஒப்படைத்தனர். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சிறுமியை கடத்திய மர்ம நபரை தேடிவருகின்றனர். சாக்லேட் கொடுத்து சிறுமியை கடத்தி சென்ற சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்