விவசாயிகளின் 6 பம்பு செட்டுகள்: ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்கள் திருட்டு!
மின் மோட்டருடன் இணைக்கப்பட்டிருந்த காப்பர் வயர் பொருத்தப்பட்ட வயர்கள் திருடு போனது தெரிய வந்தது. 6 பம்ப் செட்டுகளில் இருந்த சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான காப்பர் வயர்கள் திருடுபோனது தெரிய வந்தது
மன்னார்குடி அருகே விவசாயிகளின் பம்பு செட்டுகளில் இருந்த 1.50 லட்ச ரூபாய் மதிப்பிலான காப்பர் ஒயர்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் விவசாயம் மற்றும் கால்நடைகளை வாழ்வாதாரமாகக் கொண்ட பொதுமக்கள் அதிகம் வசிக்கக்கூடிய மாவட்டமாகும். திருவாரூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி நெல் பயிர்கள் பயிரிடப்பட்டு அறுவடை பணிகள் என்பது முடிவடைந்து, கோடை கால பயிர் வகைகளான, மானாவாரி பயிர் வகைகளான பச்சைப் பயிறு உளுந்து மற்றும் பருத்தி உள்ளிட்ட பயிறு வகைகளை விவசாயிகள் பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நெல் கரும்பு நிலக்கடலை எள்ளு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்படுகின்றன. மேலும் மன்னார்குடியில் நிலத்தடி நீரை பம்புசெட் மூலம் எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகள் அதிகமாக வசிக்கக் கூடிய பகுதியாகும். இந்தநிலையில் மன்னார்குடியில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள மோட்டார் பம்பு செட்டில் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்களை மர்ம நபர்கள் திருடி சம்பவம் என்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மகாதேவபட்டினம் கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் ஆழ்துளை கிணறு மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. இங்கு மின் மோட்டார் மூலம் 20க்கும் மேற்பட்ட பம்பு செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் அடிக்கடி மின் தட்டுப்பாடு ஏற்படுவதால் விளைநிலங்களுக்கு தேவையான நீரை முழுமையாக பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில் மகாதேவபட்டினம் கிராமத்தில் நேற்று இரவு வயல் வெளிகளில் இருந்த பம்ப் செட்டுகளில் மின் மோட்டாருடன் இணைக்கப்பட்டிருந்த வயர்களை திருடி அதில் இருந்த காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர். இன்று நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காக வந்த விவசாயி விஷ்ணு என்பவர் தனது சகோதரர் வயலில் இருந்த மின்சார பெட்டி உடைக்கப்பட்டு காப்பர் வயர்கள் துண்டிக்கப்பிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் ஆழ்துளை கிணறு அமைந்துள்ள பகுதியில் சென்று பார்த்த போது ஆழ்துளை கிணற்றில் உள்ள மின் மோட்டருடன் இணைக்கப்பட்டிருந்த காப்பர் வயர் பொருத்தப்பட்ட வயர்கள் திருடு போனது தெரிய வந்தது. இதே போல் அருகில் இருந்த சுமார் 6 பம்ப் செட்டுகளில் இருந்த சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான காப்பர் வயர்கள் திருடு போனது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து விவசாயிகள் அளித்த புகாரையடுத்து காவல்துறையினர் காப்பர் வயர்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.