RBI On Gold: இதானா சேதி..! 100 டன் தங்கம் இந்தியா கொண்டுவரப்பட்டது ஏன்? - ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம்
RBI On Gold: அண்மையில் 100 டன் தங்கம் இந்தியா கொண்டு வரப்பட்டது ஏன் என்பது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் விளக்கமளித்துள்ளார்.
RBI On Gold: அண்மையில் 100 டன் தங்கம் இந்தியா கொண்டு வரப்பட்டது தொடர்பாக, பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் பொதுமக்களிடையே நிலவியது.
இந்தியா வந்த 100 டன் தங்கம்:
இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் 100 டன் தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து ஏன் இவ்வளவு தங்கம் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது என்று பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. அதன்படி, ”100 டன் தங்கம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் இந்தியாவிற்கு மேலும் சில டன் தங்கம் கொண்டு வரப்படும்” என்றும் கூறப்பட்டன. இந்நிலையில், சமூக வலைதளங்களில் பரவிய, கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்தியா - தங்கம் வரலாறு:
கடைசியாக 1991-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து தங்கத்தை இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது. அந்த நேரத்தில் இந்தியா அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டது, அத கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதாவது, 1991ம் ஆண்டு மத்திய அரசு தங்கத்தை அடகு வைத்து டாலர்களை திரட்டியது. இந்நிலையில், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, ரிசர்வ் வங்கி சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) சுமார் 200 டன் தங்கத்தை வாங்கியது. தற்போதைய சூழலில் இந்தியப் பொருளாதாரம் வலுவான மற்றும் நம்பகமான நிலையில் இருக்க, தங்கம் ஏன் இந்தியா கொண்டுவரப்பட்டது என்ற கேள்வியும் எழுந்தது.
இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை, தளவாட காரணங்களுக்காக எடுத்துள்ளதாக முன்னணி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்குவதாக சில காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ரிசர்வ் வங்கி சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் தங்கம் வாங்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், “ரிசர்வ் வங்கி தங்கத்தை கையிருப்பின் ஒரு பகுதியாக வாங்குவதாகவும், அதன் அளவு அதிகரித்து வருவதாகவும் சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அவற்றை உள்நாட்டிலேயே சேமிக்கும் திறன் எங்களிடம் உள்ளது. எனவே, இந்தியாவுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள தங்கத்தை மீண்டும் கொண்டு வந்து, நாட்டிலேயே வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வளவுதான். இதிலிருந்து வேறு எந்த அர்த்தமும் வரக்கூடாது” என தெளிவுபடுத்தினார். அதன்படி, ரிசர்வ் வங்கி அண்மையில் இங்கிலாந்தில் இருந்து கொண்டு வந்த தங்கத்தை மும்பையில் உள்ள மின்ட் ரோடு மற்றும் நாக்பூரில் உள்ள பழைய அலுவலகத்தில் வைத்துள்ளது.
ரிசர்வ் வங்கியிடம் எவ்வளவு தங்கம் உள்ளது?
மார்ச் மாத இறுதி நிலவரப்படி, ரிசர்வ் வங்கியிடம் மொத்தம் 822.11 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. இதில் 413.8 டன் தங்கம் வெளிநாடுகளில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி 27.5 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஜனவரி-மார்ச் மாதங்களில் மட்டும் சுமார் ஒன்றரை மடங்கு தங்கத்தை ரிசர்வ் வங்கி வாங்கியுள்ளது. இது கடினமான மற்றும் சவாலான சூழ்நிலைக்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
தங்கம் ஏன் இங்கிலாந்தில் வைக்கப்படுகிறது?
உலக நாடுகளுக்கு தங்கத்தை சேமித்து வைக்க இங்கிலாந்து முதல் தேர்வாக உள்ளது. இந்தியாவும் அதையே செய்கிறது. இந்தியா சுதந்திரத்திற்கு முன்பிருந்தே லண்டனில் தங்கத்தை வைத்துள்ளது. உண்மையில், திருட்டு, இயற்கை பேரழிவு அல்லது அரசியல் நிலையற்ற தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் தங்கத்தை வைத்திருக்கும் போக்கு உள்ளது. இங்கிலாந்து வங்கி வலுவான பாதுகாப்பு அமைப்பு மற்றும் தங்க சேமிப்பை கையாள்வதில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றுள்ளது.