`76.97 ரூபாய்!!’ - வரலாறு காணாத சரிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு!
உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவை விட்டு வெளியேறுவது ஆகியவற்றால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மிகக் குறைந்த அளவுக்குச் சரிந்துள்ளது.
உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழல் ஒருபுறமும், வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் நிலை மறுபுறமும் இருக்க, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மிகக் குறைந்த அளவுக்குச் சரிந்துள்ளது.
கடந்த மார்ச் 4 அன்று, ஒரு அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு 76.17 ரூபாய் என்று முடிந்திருந்த நிலையில், இன்று அதன் மதிப்பு 76.94 ரூபாய் எனத் தொடங்கியது. எனினும், இந்த மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து, சுமார் 1 சதவிகிதம் குறைந்துள்ளதோடு, தற்போது ஒரு அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு 76.98 ரூபாய் என்ற நிலையை அடைந்து, தற்போது 76.97 ரூபாய் என்ற அளவில் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதத்தின் கொரோனா தொற்றின் போது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மிகவும் சரிந்து, 76.91 ரூபாய் மதிப்பைத் தொட்டது.
கடந்த மார்ச் 4 அன்று, சுமார் 7.8 சதவிகிதம் விலை உயர்ந்திருந்த கச்சா எண்ணெய், இன்று திங்கள்கிழமை என்பதால் வர்த்தகம் மீண்டும் திறக்கப்பட்ட போது, சுமார் 127.35 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக, ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைத் தடை செய்வது குறித்து அமெரிக்காவில் விவாதம் நடைபெற்றதையடுத்து, கடந்த வார இறுதியில், கச்சா எண்ணெயின் விலை யாரும் எதிர்பார்த்திராத அளவில் அதிகபட்சமாக 139.13 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
நிதி ஆலோசனை நிறுவனமான மெக்லாய் ஃபைனான்சியர் நிறுவனத்தின் துணைத் தலைவர் இம்ரான் காஸி, `ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளின் புவி அரசியல் பிரச்னைகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதோடு, உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை யாரும் பார்த்திடாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதே போன்ற விலையேற்றம் கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது ஏற்பட்டிருக்கிறது’ எனக் கூறியுள்ளார்.
2022ஆம் ஆண்டு முழுவதும் கச்சா எண்ணெய் விலை சராசரியாக 100 அமெரிக்க டாலர்கள் என நீடித்தால், இந்தியாவின் தற்போதைய நடப்புக் கடன் மதிப்பு, அதன் மொத்த உற்பத்தியில் 3 சதவிகிதமாக உயரலாம் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டிருந்த வெளிநாட்டு முதலீடுகளில் சுமார் 84.1 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக என்.எஸ்.டி.எல் நிறுவனம் தரவுகளை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு குறைவதற்கான காரணங்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலர் தட்டுப்பாடு, வெளிநாட்டு முதலீடுகள் இந்திய வங்கிகளை விட்டு அதிகளவில் வெளியேறுதல், அந்நியச் செலாவணி வர்த்தகம் முதலானவை எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.