Share Market Today: புதிய உச்சத்தை எட்டி 76,693 புள்ளிகளில் வர்த்தகமான சென்செக்ஸ்; ஏற்றத்தில் ஐடி, வங்கி நிறுவனங்கள்
Share Market Today: மக்களவைத் தேர்தல் முடிவு வெளியான நிலையில் பெரும் சரிவை கண்ட பங்குச் சந்தை, தற்போது ஏற்றத்தை அடைந்துள்ளது
இந்திய பங்குச் சந்தையானது, இதுவரை இல்லாத புதிய உச்சமான, 76,693 புள்ளிகளுக்குச் சென்று வர்த்தகமானதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக ஐடி, வங்கி நிறுவனங்கள் உள்ளிட்டவை பெரும் ஏற்றத்தை கண்டுள்ளன.
பங்குச்சந்தை நிலவரம்:
மக்களவைத் தேர்தலின் முடிவுகளால், இந்திய பங்குச் சந்தையானது மிகப்பெரிய தாக்கத்துக்கு உள்ளானது. தேர்தல் முடிவு வெளியான நாளில் 6,000 புள்ளிகள் வரை வீழ்ச்சியை சென்செக்ஸ் சந்தித்தது.
இதையடுத்து, கடந்த சில தினங்களாக இந்திய பங்குச் சந்தை ஏற்றம் கண்டு வருகிறது. இந்நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,618 புள்ளிகள் ஏற்றத்துடன் 76, 693.36 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி-50, 468 புள்ளிகள் ஏற்றத்துடன் 23, 290.15 புள்ளிகள் ஏற்றத்துடன் வர்த்தகமானது.
லாபமடைந்த நிறுவனங்கள்:
இன்றைய நாளில் நிஃப்டி 50ல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் எஸ்.பி.ஐ லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் டாட்டா கன்ஸ் ப்ராட் ஆகிய நிறுவனங்களை தவிர அனைத்து நிறுவனங்களும் ஏற்றத்துடன் வர்த்தகமானது. குறிப்பாக ஐடி நிறுவனங்களான டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்டவை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. மேலும், ரிலையன்ஸ், எஸ்.பி.ஐ டாட்டா ஸ்டீல், பவர் கிரிட், மாருதி சுசுகி, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
சென்செக்ஸ் 30ல் பட்டியலிட்டப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் இன்று ஏறுமுகத்துடன் வர்த்தகமானது.
ரிசர்வ் வங்கி ஜிடிபி கணிப்பு
இந்நிலையில், பங்குச் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கையில், தேர்தல் முடிவு வெளியான நாளில், தனிப்பெரும்பான்மை கட்சி உருவாகாத நிலை ஏற்பட்டதால் பங்குச்சந்தையானது பெரும் சரிவை சந்தித்தது. ஆனால், பாஜக கூட்டணியுடன் ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால், பங்குச் சந்தை ஏற்றத்துடன் சென்றிருக்கிறது என யூகிக்க முடிகிறது.
இன்று சென்செக்ஸ் 1,720 புள்ளிகளுக்கு மேல் அல்லது 2 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து சாதனை எட்டியது. இந்த உயர்வானது, இன்று இந்திய ரிசர்வ் வங்கி ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பினை 2024-25 ஆம் ஆண்டிற்கான ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பு முந்தைய 7 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாகத் திருத்தியதும் ஏற்றத்துக்கு வழிவகுத்தது என பங்குச் சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பாஜக கட்சியானது தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுக்கவில்லை. இதனால், கூட்டணி கட்சியுடன் பாஜக ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. இதனால், தனிப்பெரும்பான்மை கட்சி ஆட்சியமைக்கும் சூழல் இல்லாத நிலை, இந்த முறை ஏற்பட்டுள்ளது. இதைவைத்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எடுக்கும் முடிவானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடும். எனவே வரும் நாட்களை பொறுத்தே பங்குச் சந்தையின் போக்கு தெரியக்கூடும்.