Rs2000 Currency RBI: கையில் இன்னும் ரூ.2000 நோட்டு உள்ளதா? ஆர்.பி.ஐ. உங்களுக்கு வழங்கும் அற்புத வாய்ப்பு!
Rs2000 Currency RBI: நாட்டில் 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் சட்டப்படி செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Rs2000 Currency RBI: 97.26 சதவிகித 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள் விவகாரம்:
கடந்த மே 19 அன்று சுத்தமான கள்ள நோட்டுகளை ஒழிக்கும் முயற்சியாக ரூ.2,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி, புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 97.26 சதவிகிதம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தற்போது தெரிவித்துள்ளது. அதன்படி, மே 19, 2023 நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடி. நவம்பர் 30, 2023 நிலவரப்படி இந்த மதிப்பு ரூ.9,760 கோடியாகக் குறைந்துள்ளது.
97.26% of the Rs 2,000 banknotes in circulation as of May 19, 2023, have returned. The Rs 2,000 banknotes continue to be legal tender: RBI pic.twitter.com/rSxx8hv4By
— ANI (@ANI) December 1, 2023
ரிசர்வ் வங்கி அறிக்கை:
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
- “2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும் மாற்றுவதற்கும் அனைத்து வங்கிக் கிளைகளிலும் செப்டம்பர் 30, 2023 வரை வசதி இருந்தது. பின்னர் இது அக்டோபர் 7, 2023 வரை நீட்டிக்கப்பட்டது. மே 2023 முதல் ரிசர்வ் வங்கியின் 19 வெளியீட்டு அலுவலகங்களிலும் பரிமாற்றத்திற்கான வசதி உள்ளது.
- தற்போது, அக்டோபர் 9, 2023 முதல் RBI வெளியீட்டு அலுவலகங்கள் ரூ. 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு உதவுகின்றன. அங்கு நேரடியாக சென்று தனிநபர் மற்றும் நிறுவனங்கள் சார்பில் தங்களது வங்கிக் கணக்குகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம்.
- நாட்டிலுள்ள தனிநபர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்காக நாட்டிலுள்ள எந்தவொரு தபால் நிலையத்திலிருந்தும் இந்திய ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகங்களுக்கு இந்திய அஞ்சல் வழியாக 2,000 ரூபாய் நோட்டுகளை அனுப்பலாம்.
- 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லத்தக்கதாக தான் உள்ளது”என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முடிந்தது ஜி20 தலைமை பொறுப்பு பதவிக்காலம் - ஓராண்டில் இந்தியா சாதித்தது என்ன?
2000 ரூபாய் நோட்டு வரலாறு:
இந்திய பொருளாதார வரலாற்றில் மிக முக்கிய நடவடிக்கையாக செயல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு திட்டத்தின் மூலம் அனைத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டது. அதன் பின்னர் நாட்டின் நாணயத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நவம்பர் 2016ம் ஆண்டு ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. பொருளாதாரத்தில் மற்ற வகை ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் கிடைத்தவுடன் 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் நிறைவேறியதாக வங்கி கூறியது. எனவே, 2018-19 ஆம் ஆண்டில் ரூ.2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை ஒழுங்குமுறை ஆணையம் நிறுத்தியது.