RBI On Kotak Mahindra Bank: ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது.
வங்கித் துறையின் கட்டுப்பாட்டாளரான ரிசர்வ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கிக்கு எதிராக ஒரு சில கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளது. அதன்படி, ஆன்லைன் அல்லது மொபைல் பேங்கிங் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. மேலும், கோடக் வங்கியின் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதையும் தடை செய்ய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
2022 மற்றும் 2003ம் ஆண்டுகளுக்காக ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த நடவடிக்கை விதிமுறைகளை தனது ஐடி கட்டமைப்பில் கடைபிடிக்க கோடக் மஹிந்திரா வங்கி தவறியுள்ளது. மேலும், குறிப்பிட்ட காலத்திற்குள் கோடக் மஹிந்திரா இந்த குறைகளை நீக்க தவறியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, வலுவான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப இடர் மேலாண்மை கட்டமைப்பின் பற்றாக்குறை காரணமாக, கோடக் மஹிந்திராவின் வங்கி அமைப்பு, அதன் ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் பேங்கிங் சேனல்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல செயலிழப்புகளை எதிர்கொண்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இதன் காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதையடுத்து, கோடக் மஹிந்திரா மீது ரிசர்வ் வங்கி இந்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி தெரிவிக்கையில், “ கோடக் மஹிந்திரா வங்கி அதன் வளர்ச்சியுடன் அதன் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை வலுப்படுத்த தவறிவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரிசர்வ் வங்கி சார்பில் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை வலுப்படுத்தவும், இந்த பிரச்சனைகளை சரிசெய்யவும் வங்கியின் உயர் நிர்வாகத்துடன் தொடர்ந்து முயற்சித்தோம். ஆனால், முடிவு திருப்திகரமாக இல்லை.
இதன் காரணமாக, வாடிக்கையாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு, நீண்ட காலமான நிகழ்ந்து வரும் செயலிழப்பை தடுக்கவும், வங்கியின் மீது வணிகக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் முடிவு செய்தோம்" என தெரிவித்திருந்தது.
இந்த தடையால் யார் யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்..?
ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி தடையால் கோடக் மஹிந்திராவின் தற்போதையை வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் சேவைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், வரும் காலத்தின் கோடக் மஹிந்திராவின் வளர்ச்சியை பாதிக்கும். இதற்கு காரணம், கோடக் மஹிந்திரா வங்கியின் ஒரு வாடிக்கையாளர் வங்கிக்கு செல்லாமலே, ஆன்லைன் வாயிலாகவும், மொபைல் சேவை மூலமாகவும் புதிதாக கணக்கு மற்றும் கிரெடிட் கார்டுகளை பெறலாம். அந்த சேவையையே தற்போது ரிசர்வ் வங்கி முடக்கியுள்ளது.
கோடக் மஹிந்திரா சார்பில் என்ன விளக்கம் கொடுக்கப்பட்டது..?
தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை வலுப்படுத்த புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதற்காக, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து, இருப்பு சிக்கல்களை விரைவாக தீர்ப்போம் என்றும் கோடக் மஹிந்திரா வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி தடை - கோடக் வங்கி பங்கு விலை சரிவு:
இந்திய பங்குச்சந்தைகளில் கோடக் மஹிந்திரா வங்கி பங்குகளின் விலை 12 சதவீதம் வரை சரிந்துள்ளது. கோடக் மஹிந்திரா வங்கியின் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க நேற்று ரிசர்வ் வங்கி தடை விதித்தது. இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது.