ஆண் குழந்தைகளுக்கான அசத்தல் திட்டம்; மாதம் ரூ.1000 செலுத்தினால் ரூ.5 லட்சம் வரை மெச்சூரிட்டி தொகை!
இந்திய அரசின் தபால் துறையின் மூலம் பொன்மகன் சேமிப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளதால், பணப்பாதுகாப்பு குறித்து எந்த அச்சமும் இல்லை.
தபால் நிலையங்களில் மாதம் ரூ.1000 செலுத்திவந்தால் 15 ஆண்டுகளில் ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமாக மெச்சூரிட்டித் தொகையை பெற முடியும். எனவே ஆண் குழந்தைகள் வைத்துள்ள நபர்கள் உடனடியாக இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றுக்கொள்ளுங்கள்.
கொரோனா பல வழிகளில் நமக்கு சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்று கூறலாம். குறிப்பாக நம்முடைய பணத்தை எப்படி முதலீடு செய்வது? வருங்காலத்தில் நம்முடைய குழந்தைகளுக்கு நாம் என்ன சேமித்து வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் யோசிக்கத்தொடங்கி விட்டனர். இதற்காக வங்கிகளுக்குச் செல்வதோடு தபால் நிலையங்களுக்குச் செல்லக்கூடிய நிலை அதிகளவில் உள்ளது. இதற்காகவே அனைத்துத் தரப்பட்ட மக்களையும் கருத்தில் கொண்டு தபால் அலுவலகங்களில் மாதாந்திர வருமானத் திட்டம், முதியோர்களுக்கான திட்டம், பென்ஷன் திட்டம் போன்றவை உள்ளன. அதிலும் பெண் குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்ட பொன்மகள் திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில்தான், ஆண் குழந்தைகளுக்கும் இதுபோன்ற திட்டங்கள் உள்ளதா? என பெற்றோர்கள் பலர் விசாரிக்கத்தொடங்கினர். இதற்காவே தான், மத்திய அரசு பெண் குழந்தைகளுக்கு உள்ளது போல் ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டம் ஒன்றை ஆரம்பித்துவிட்டது. ஆனால் PPF என்ற பெயரில் தபால் அலுவலகங்களில் இன்றளவும் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.
அனைத்துத் தரப்பட்ட மக்களையும் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் பெற்றோர்கள் தங்களது ஆண் குழந்தைகளுக்காக சேமிப்பைத்தொடங்க என்ன செய்யவேண்டும்? என்னென்ன சலுகைகள் இதில் உள்ளன? வட்டி விகிதம் என்ன? என்பது குறித்து இங்கே அறிந்துகொள்வோம்.. ஆண் குழந்தைகளுக்கான அஞ்சல் அலுவலக சேமிப்புத்திட்டம் தான் பொன்மகன் அதாவது PPF. இத்திட்டம் ஏற்கனவே உள்ள சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தினைப்போலவே ஆண்டுக்கு 12 முறை பணம் கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும். அதோடு குறைந்த பட்சம் ரூபாய் 500 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யும் நடைமுறைகள் உள்ளன. மேலும் 15 ஆண்டுகால இத்திட்டத்தினை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளவும், அந்த சேமிப்புக்கணக்கினை டிரான்ஸ்பர் செய்யும் வசதியும் உள்ளது.
தபால் நிலையத்தில் எப்படி கணக்கு துவங்க வேண்டும்?
தங்களுடைய மகன்களின் எதிர்காலத்தைக்கருத்தில் கொண்டு பெற்றோர்கள் ஆரம்பிக்கும் இந்த பொன் மகன் சேமிப்புத்திட்டத்தை தொடங்குவதற்கு முன்னதாக , குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், ஆதார் இருந்தால் ஆதார் அடையாள அட்டை மற்றும் 2 புகைப்படங்கள், அதே போன்று தாய் அல்லது தந்தையின் ஆதார் நகல் மற்றும இரண்டு புகைப்படங்களைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அஞ்சல் அலுவலகத்தில் தரப்படும் விண்ணப்பத்தைப் பதிவு செய்து பணத்தினைக் கட்டி இக்கணக்கினை இப்படி எளிமையாகத் தொடங்கிவிடலாம். ஒருவேளை குழந்தைகளுக்கு 10 வயதிற்கு மேல் இருந்தால் அவர்கள் பெயரிலேயே கணக்கினைத்தொடங்கலாம்.
இதில் மாதம் ரூபாய் செலுத்தி வந்தால் 15 ஆண்டுகளில் மெசூரிட்டித்தொகையாக ரூபாய் 5லட்சத்து 27 ஆயிரத்து 446 வரை பெறமுடியும். இதன் மூலம் ஆண் குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம் போன்றவற்றிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
வட்டி விகிதம் மற்றும் கடன்தொகை பெறமுடியுமா?
அனைத்து வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் உள்ள சேமிப்புத்திட்டத்திற்கான வட்டி என்பது சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடும். அதேபோன்று இத்திட்டத்திலும் உள்ளது. தற்போது இதன் வட்டிவிகிதம் 7.6 சதவீதமாக உள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்த 5 ஆண்டுகளுக்குப்பிறகு, அவசர காலங்களில் இதன் மூலம் கடன் வசதி பெறும் நடைமுறையும் உள்ளது.
குறிப்பாக இந்திய அரசின் தபால் துறையின் மூலம் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளதால் இதன் பாதுகாப்பில் எந்த அச்சமும் கொள்ளத்தேவையில்லை. மேலும் இதில் பல்வேறு வசதிகள் இருப்பதால் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் இத்திட்டம் நல்ல வரவேற்பைப்பெற்றுவருகிறது என்பதுதான் நிதர்சன உண்மை.