Bhavish Aggarwal: ‘விருப்பம் இல்லைன்னாலும் இந்திய பொருளாதாரம் முன்னேற உழைக்கணும்’ .. ஓலா CEO-வுக்கு ஒருவாரம் கழித்து கிளம்பிய எதிர்ப்பு..
வாரத்துக்கு அல்லது நாள் ஒன்றுக்கு இத்தனை மணி நேரம் பணி, விடுமுறை எல்லாம் சட்டத்தில் இடம் பெற்றிருந்தாலும் அதனை முறையாக எந்த நிறுவனம் செயல்படுத்துகிறது என கேட்டால் அது கேள்விக்குறி தான்.
இந்திய இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என கருத்து தெரிவித்த இன்போஸிசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்திக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம், ஓலா நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார்.
உழைப்பே உயர்வு என்பது போல உழைப்பில்லாமல் இங்கு எதுவும் இல்லை. ஆனால் இந்த உழைப்பிற்கான நேரம் என்பது ஒவ்வொரு நாடுகளிலும் வித்தியாசமாக உள்ளது. வாரத்துக்கு அல்லது நாள் ஒன்றுக்கு இத்தனை மணி நேரம் பணி, விடுமுறை எல்லாம் சட்டத்தில் இடம் பெற்றிருந்தாலும் அதனை முறையாக எந்த நிறுவனம் செயல்படுத்துகிறது என கேட்டால் அது கேள்விக்குறி தான். அதுமட்டுமல்லாமல் பொருளாதார இழப்பை காரணம் காட்டி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படும் நிலையில், வேலை என்ற ஒன்று இருந்தால் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க இங்கு நிறைய பேர் தயாராகவே உள்ளனர்.
இப்படியான நிலையில், கடந்த வாரம் இன்போஸிசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்த கருத்து ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதாவது, ‘கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா பெற்ற வளர்ச்சியை மீண்டும் பெற, நாட்டின் பணி உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும்” என தெரிவித்தார். அவரின் இந்த கருத்துக்கு தொழிலதிபர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என்ற நிலையில், இப்படி குடும்பத்தினருடனும், தனிப்பட்ட முறையிலும் நேரம் செலவிடாமல் உழைத்தால் உடல்நல பாதிப்புகள் ஏற்பட அதீத வாய்ப்புள்ளது என்றெல்லாம் சரமாரியாக கமெண்டுகள் முன்வைக்கப்பட்டது. உடனே இதற்கு விளக்கம் கொடுத்த நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி, ‘கடின உழைப்பு தான் வெற்றியை கொடுக்கும் என நம்புகிறவர் நாராயண மூர்த்தி. அவர் வாரத்திற்கு 80 முதல் 90 மணி நேரம் வரை உழைப்பதால் குறைவான உழைப்பு என்றால் என்ன என்பது தெரியாதவர். அவர் வேலை நேரம் குறித்து சொன்னபடி தான் வாழ்ந்து வருகிறார்” என தெரிவித்தார்.
இப்படியான நிலையில் ஓலா நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ள கருத்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த கருத்தை கடந்த 27 ஆம் தேதியே தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கருத்து தற்போது தான் வைரலாகியுள்ளது. இதற்கு பலரும் சரமாரியாக பதிலடி கொடுத்து வருகின்றனர். பாவிஷ் அகர்வால் தனது ட்வீட்டில், ‘நமது தாத்தா, பாட்டி தலைமுறையினர் சுதந்திரத்திற்காக போராடினார்கள். நமது பெற்றோர் தலைமுறை அத்தியாவசிய விஷயங்களுக்காக போராடியது. ஆனால் விரும்புகிறமோ இல்லையோ.. நமது தலைமுறை இந்தியாவை மிகப்பெரிய பொருளாதாரமாக உருவாக்க வேண்டும். இதில் எல்லாவிதமான முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இந்த பயணத்தில் பங்களிப்பதை விட சிறந்த திருப்தி இல்லை!” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.