Bumper to Bumper Insurance: திரும்ப பெறப்பட்டது பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ்..!
புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு முழுமையான காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற்றது சென்னை உயர்நீதிமன்றம்.
புதிய மோட்டர் வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் என்ற இன்சூரன்ஸ் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்தது. ஆனாலும் வாகன விற்பனையாளர்களிடமும், வாடிக்கையாளர்களிடம் பெரிய குழப்பம் நிலவியதால் பம்பர் டூ பம்பர் 5 ஆண்டுகள் இன்சூரன்ஸ் விதியை தற்காலிகாக நிறுத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம். இன்சூரன்ஸ் நிறுவனம் தொடர்ந்த மேல் முறையீட்டில் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இந்நிலையில் அந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு முழுமையான காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற்றது சென்னை உயர்நீதிமன்றம். தற்போதைய சூழலில் இந்த உத்தரவு உகந்ததாகவோ அமல்படுத்த சாத்தியமானதாகவோ இல்லை என்பதால் திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, விபத்து இழப்பீடு வழக்கு ஒன்றில்விசாரணை செய்த நீதிபதி வைத்தியநாதன், செப்டம்பர் 1 முதல் அனைத்து புதிய மோட்டார் வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ் திட்டம் அமல்படுத்த வேண்டும். இந்த இன்சூரன்ஸ் 5 ஆண்டுகளுக்கானதாக இருக்க வேண்டும். செப்டம்பர் 1 முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்குன் அதன் மதிப்புக்கு ஏற்ப 5 ஆண்டுகளுக்கான இன்சூரன்ஸ் தொகை கட்ட வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் இந்த விதியால் குழப்பம் வந்தது.
இந்த விதி அமலுக்கு வந்தால், வாகன உரிமையாளர், டிரைவர், பயணி மற்றும் பயணியோடு பயணிப்பவர் ஆகியோர் இந்த இன்சூரன்ஸின் கீழ் வருவார்கள். விபத்தில் பாதிக்கப்படும் வாகனத்துக்கும், அதனால் பாதிப்பு ஏற்படுபவருக்கும் இந்த காப்பீடு உறுதியாகும். மேலும் தாமதமின்றி வெகு விரைவாக இழப்பீடு கிடைக்கவும் இந்த புதிய விதி உதவும் எனக் கூறப்பட்டது
ஆனால், நீதிமன்றம் திடீரென இன்சூரன்ஸ் தொடர்பான உத்தரவிட்டாலும் இதனை உடனே அமல்படுத்துவது சிக்கலான காரியம் என தெரிவித்தது பொது காப்பீட்டு கவுன்சில். இதனை முறைப்படுத்த தங்களுக்கு 3 மாதங்கள் தேவை என்றும் நீதிமன்றத்தை நாடியது. இதனை விசாரித்த நீதிபதி, தன்னுடைய பழைய அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். முன்னதாக, 5 ஆண்டு இன்சூரன்ஸ் என்ற நீதிமன்ற உத்தரவை உடனடியாக அறிவிப்பாக வெளியிட்டது அரசு போக்குவரத்து துறை. இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் அனுப்பியது போக்குவரத்துத் துறை.
நீதிமன்றமும், அரசும் உடனடி நடவடிக்கை எடுத்துவிட்ட நிலையில் வாகன விற்பனை செய்யுமிடத்திலும், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் குழப்பம் நிலவியது. இந்தக் குழப்பத்தால் ,நேற்று, மாநிலம் முழுவதும் புதிய வாகனப் பதிவு பாதிக்கப்பட்டது மற்றும் காப்பீட்டுத் திட்டத்தில் வாகன ஷோரூம்களில் தெளிவின்மை நிலவியது.