Bisleri: பிஸ்லெரி நிறுவனத்தை டாடா கைப்பற்ற முக்கிய காரணம் இவர்தான்.. யார் இந்த ஜெயந்தி சவுகான்?
இந்தியாவின் மிகப்பெரிய மினரல் வாட்டர் விற்பனை நிறுவனமான பிஸ்லெரியை, டாடா நிறுவனம் விலைக்கு வாங்க முக்கிய காரணமான ஜெயந்தி சவுகான் யார் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
இத்தாலியை சேர்ந்த தொழிலதிபரால் 1965ஆம் ஆண்டு மும்பையில் பிஸ்லெரி நிறுவனம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, 1969ஆம் ஆண்டு பார்லே குழுமத்தின் ஜெயந்திலால் சவுகான் அதனை விலைக்கு வாங்கினார். கோலா வகை குளிர் பானங்கள் மற்றும் மினரல் வாட்டர் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வந்த அந்நிறுவனம், Thums up, Gold spot, Limca ஆகிய குளிர்பான பிராண்டுகளை, அமெரிக்காவை சேர்ந்த கோக கோலா நிறுவனத்திற்கு 1993ஆம் ஆண்டில் விற்றது. அதைத்தொடர்ந்து பிஸ்லெரி நிறுவனம் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகிறது. தற்போது பிஸ்லெரி நிறுவனத்துக்கு 122 ஆலைகள், 4,500 விநியோகஸ்தர்கள் மற்றும் 5,000 லாரிகள் என மிகப்பெரிய கட்டமைப்பாக உருவெடுத்துள்ளது. 2021ஆம் ஆண்டில் ரூ.95 கோடியையும், 2020ஆம் ஆண்டில் ரூ.100 கோடியையும் லாபமாக பதிவு செய்த நிலையில், 2023ஆம் நிதியாண்டில் பிஸ்லெரி நிறுவனம் ரூ.220 கோடியை லாபம் ஈட்டும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன.
டாடா வசம் செல்லும் பிஸ்லெரி நிறுவனம்:
இந்நிலையில் தான், பிஸ்லெரி நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான ரமேஷ் சவுகான்(82) வயது முதிர்ச்சியால் பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து, தனது மகள் ஜெயந்தி சவுகான் வியாபாரத்தில் கவனம் செலுத்த விரும்பாததால், பிஸ்லெரியை அடுத்த கட்ட விரிவாக்கத்திற்கு கொண்டு செல்ல தனக்கு வாரிசு இல்லை என்றும் கூறி இருந்தார். அதைதொடர்ந்தே, சுமார் ரூ.7,000 கோடிக்கு பிஸ்லெரி நிறுவனத்தை டாடா நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த ஜெயந்தி சவுகான்:
ரமேஷ் சவுகானின் ஒரே மகளான ஜெயந்தி சவுகான், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஃபேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் அண்ட் மெர்ச்சண்டைசிங் பயின்றதோடு, லண்டனில் ஃபேஷன் ஸ்டைலிங் மற்றும் போட்டோகிராபியும் பயின்றுள்ளார். மேலும், லண்டன் பல்கலைக்கழகத்தில் ஓரியண்டல் அண்ட் ஆஃப்ரிக்கன் ஸ்டடீஸ் (SOAS)-ல் அரபியில் பட்டம் பெற்றுள்ளார். 24 வயதில் பிஸ்லெரி நிறுவனத்தில் பயணத்தை தொடங்கிய, 37 வயதான ஜெயந்தி தற்போது அந்நிறுவனத்தின் துணைத்தலைவராக செயல்பட்டு வருகிறார்.
பிஸ்லெரியில் ஜெயந்தியின் பங்களிப்பு:
டெல்லி ஆலையில் நிறுவனத்தை ஆட்டோமேஷன் முறையில் மேம்படுத்துவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக வலுவான அணிகளை உருவாக்க, HR, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற துறைகளில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டார். 2011-ம் ஆண்டு மும்பை அலுவலகத்தில் பொறுப்பேற்றார். ஹிமாலாயா பிரிவிலிருந்து வேதிகா நேச்சுரல் மினரல் வாட்டர், ஃபிஸி ஃப்ரூட் டிரிங்க்ஸ் மற்றும் பிஸ்லெரி ஹேண்ட் ப்யூரிஃபையர் ஆகியவற்றின் செயல்பாடுகளை நெறிப்படுத்திய பெருமையும் ஜெயந்தி சவுகானையே சேரும்.
மறுத்த ஜெயந்தி சவுகான்:
இந்நிலையில் தான், வயது முதிர்வு காரணமாக பிஸ்லெரி நிர்வாகத்தில் ரமேஷ் சவுகானால் முழுமையாக ஈடுபட முடியாததை தொடர்ந்து, ஜெயந்தி அப்பணிகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிஸ்லெரி நிறுவனத்தைப் பார்த்துக் கொள்வதில் விருப்பம் இல்லை என ஜெயந்தி சவுகான் திட்டவட்டமாக கூறியுள்ளார். அதைதொடர்ந்தே, பிஸ்லெரி நிறுவனத்தை டாடா நிறுவனத்திற்கும் விற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.