LIC Net Profit: ஹேப்பி நியூஸ்.. பன்மடங்கு லாபத்தை ஈட்டிய எல்ஐசி.. சந்தோஷத்தில் பங்குதாரர்கள்...!
கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 1,433 கோடி ரூபாய் என்ற நிகர லாபத்தை ஈட்டியிருந்த நிலையில், தற்போது அது பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக இருப்பது லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி). செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 15,952 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஈட்டியுள்ளது எல்ஐசி.
கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 1,433 கோடி ரூபாய் என்ற நிகர லாபத்தை ஈட்டியிருந்த நிலையில், தற்போது அது பன்மடங்கு அதிகரித்துள்ளது.
ஜூன் காலாண்டில், வெறும் 682.9 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஈட்டி இருந்தது எல்ஐசி. முதல் ஆண்டு பிரீமியம், வணிக வளர்ச்சியின் அறிகுறியாக தெரிகிறது. இந்த காலாண்டில் ரூ. 9,124.7 கோடியாக இருக்கிறது. இது ஒரு வருடத்திற்கு முன்பு ரூ. 8198.30 கோடியாக இருந்தது.
நிகர பிரீமியம் வருமானம் ரூ.1.32 லட்சம் கோடியாக இருக்கிறது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.1.04 லட்சம் கோடியாக இருந்தது. காலாண்டு முடிவு வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன்பு, பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகை அல்லது போனஸ் பங்குகளை வழங்க எல்ஐசி நிறுவனம் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தது.
இதை தொடர்ந்து, அக்டோபர் 31 அன்று, ஆரம்ப வர்த்தகத்தில் எல்ஐசி-இன் பங்குகள் 2.5 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் கண்டன. மும்பை பங்குச் சந்தையில் இன்று, எல்ஐசியின் பங்குகள் ரூ.628-க்கு முடிவடைந்தன. இது முந்தைய நாளின் முடிவை காட்டிலும் கிட்டத்தட்ட 1.17 சதவீதம் அதிகமாக இருந்தது. கடந்த சில நாட்களாக பங்குகளின் விலை அதிகரித்தாலும், ஆரம்ப பொதுப் பங்கீட்டினை (ஐபிஓ) அறிவித்த நேரத்தில் இருந்த மதிப்பை இன்னும் எட்டவில்லை.
இந்த ஆண்டு மே மாதத்தில், எல்ஐசியின் பங்குகள் சந்தைகளில் அறிமுகமானது. ஆனால், அதன் பிறகு அதன் பங்குகள் சுமார் 30 சதவீதம் குறைந்தன.
245 தனியார் காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசியமயமாக்கியதன் மூலம் உருவானதே எல்ஐசி. 1956ஆம் ஆண்டு முதல் பாலிசிகளை வெளியிட்டுவரும் இந்நிறுவனம், இந்திய காப்பீட்டு துறையில் 2000ஆம் ஆண்டுகள் வரை ஏகபோக உரிமையை அனுபவித்துவந்தது.
காப்பீட்டு துறையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பிந்தைய 2 ஆண்டுகளை கடந்தும், எல்ஐசி 2021ஆம் ஆண்டு வரை 66 சதவீத சந்தைப் பங்குகளுடன் முதல் இடத்தை வகித்து வருகிறது. இத்தகைய மிகப்பெரிய சந்தைப் பங்கு, இந்தியாவின் முக்கிய காப்பீட்டு நிறுவனமாக எல்.ஐசியை மாற்றியுள்ளது.
500 பில்லியன் டாலர்கள் என்ற மதிப்பீட்டில், அதன் சொத்து மதிப்பு சில நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகும். செயல்பாட்டில் உள்ள கிட்டத்தட்ட 280 மில்லியன் பாலிசிகளுடன், பிரிட்டனின் மொத்த மக்கள்தொகையைவிட 4 மடங்கு அதிகமான பாலிசிகளை எல்ஐசி நிர்வகித்துவருகிறது.
மாநில மற்றும் மத்திய அரசின் பத்திரங்கள் மற்றும் பங்குச் சந்தையில் பெரியளவிலான முதலீடுகளுடன் இந்தியாவின் மிகப்பெரிய அளவில் சொத்துகளை நிர்வகிக்கும் நிறுவனமாகவும் எல்ஐசி உள்ளது.