(Source: ECI/ABP News/ABP Majha)
ஆகாசா ஏர்லைன்ஸை துவங்கும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா... சறுக்குமா? சாதிக்குமா?
சில நாட்களுக்கு முன்பு முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலவும் பிரதமர் மோடியும் சந்தித்துக்கொண்டனர். அடுத்த சில நாட்களிலே ஆகாசா விமான நிறுவனத்துக்கான தடையில்லாத சான்றிதழை மத்திய அரசு வழங்கியது
ஒவ்வொரு சமயத்திலும் குறிப்பிட்ட சில துறையை சேர்ந்த செய்திகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கும். ஐடி, பார்மா, டெலிகாம் ரியல் எஸ்டேட் குறிப்பிட்ட துறையை குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியாகின. அந்த வரிசையில் தற்போது விமான போக்குவரத்து மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து தொடர்ந்து செய்திகள் தினமும் வெளியாகி வருகின்றன.
சில நாட்களுக்கு முன்பு முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலவும் பிரதமர் மோடியும் சந்தித்துக்கொண்டனர். அடுத்த சில நாட்களிலே ஆகாசா விமான நிறுவனத்துக்கான தடையில்லாத சான்றிதழை மத்திய அரசு வழங்கியது. இதனால் ஆகாசா விமானம் குறித்து பலரும் பேசி வருகின்றனர். ஆகாசா குறித்தும் நாமும் தெரிந்துகொள்வோம்.
இந்தியாவின் வாரன் பபெட் என அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தொடங்கிய எஸ்என்வி ஏவியேஷன் நிறுவனத்தின் பிராண்ட் பெயர்தான் ஆகாசா. இதில் ராகேஷ் ரூ247.5 கோடியை முதலீடு செய்து 40 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். இதில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி வினய் துபே இணை நிறுவனராக இருக்கிறார். மேலும் இண்டிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஆதித்யா கோஷும் கணிசமான பங்குகளை வைத்திருக்கிறார். இது தவிர ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ, கோ ஏர் (கோ பர்ஸ்ட்) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய பல முக்கிய அதிகாரிகள் இதில் இணைந்திருக்கின்றனர். இதுதவிர பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சிலரும் முதலீடு செய்திருக்கின்றனர் அதனால் இந்த விமான நிறுவனம் மீது எதிர்பார்ப்புகள் உருவாகி இருக்கின்றன.
ULCC என்றால் என்ன?
இந்த நிறுவனம் மிகவும் குறைந்த விலை பிரிவில் (ULCC _ "ultra low-cost carrier" ) செயல்படும். அடுத்தாண்டு கோடை காலத்தில் இந்தியாவில் செயல்பாட்டை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முக்கியமான 30 நகரங்களை இணைக்கிறது. அடுத்த சில மாதங்களில் 20 விமானங்கள் கொண்ட நிறுவனமாக செயல்பாட்டினை தொடங்கும். அடுத்த நான்கு ஆண்டுகளில் 70 விமானங்கள் கொண்ட நிறுவனமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானங்களை பொறுத்தவரை போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய இரு நிறுவனங்கள் முக்கியமானவை. இந்த நிறுவனங்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. ஆனால் எந்த விமானத்தை வாங்குவது என்னும் முடிவை நிறுவனம் எடுக்கவில்லை என தெரிகிறது. ஆகாசாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக ஏர்பஸ் மூத்த அதிகாரி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
இரு துருவ சந்தை
டெலிகாம் துறை இரு துருவ நிறுவனமாக மாறிவிட்டது. மிகப் பெரும்பான்மையான சந்தை ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் நிறுவனத்திடம் உள்ளது. அதேபோல விமான போக்குவரத்து துறையில் இண்டிகோ மற்றும் டாடா குழுமம் ஆகிய இரு நிறுவனங்கள் வசம் 80 சதவீத சந்தை இருக்கிறது. இந்த சூழலில் ஆகாசா என்னும் புதிய நிறுவனம் உருவாகிறது.
ஆகாசாவுக்கு சில சாதகங்களும் உள்ளன. விமானத்துறையில் உள்ள பல முக்கியமான தலைவர்கள் இருப்பதால், தலைமைக்கு பஞ்சமில்லை. தவிர தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூடப்பட்டதால் நூற்றுக்கணக்கான பைலட்கள் மற்றும் பணியாளர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்பதால் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கும் பிரச்சினையில்லை.
சவால் என்ன?
விமான போக்குவரத்தில் 40 சதவீதத்துக்கு மேல் எரிபொருளுக்கு செலவாகிறது. ஆனால் இந்த சூழலில் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எரிபொருள் விலை உயர்ந்திருப்பது ஆகாசாவுக்கு சிக்கலாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் இண்ட்கோவின் நஷ்டம் 5806 கோடி. ஸ்பைஸ்ஜெட் நஷ்டம் 998 கோடி. இந்த சூழலில் ஆகாசா என்பது துணிச்சலான முடிவாகவே பார்க்கப்படுகிறது.
தவிர 2014-ம் ஆண்டு ஏர் ஏசியா இந்தியா தொடங்கப்பட்டது. ஆனால் இன்னமும் அந்த நிறுவனம் பிரேக் ஈவன் நிலையை எட்டவில்லை. விஸ்தாரா நிறுவனமும் இன்னும் லாப பாதைக்கு திரும்பவில்லை. ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களிலும் இண்டிகோ தவிர மற்ற நிறுவனங்கள் லாபத்தை ஈட்டியதில்லை. கோவிட்ட்க்கு முன்பும் கூட விமான போக்குவரத்து துறை பெரும் நஷ்டத்தில்தான் இருந்தது.
விமான போக்குவரத்து துறை குறித்து பலர் நம்பிக்கையற்று உள்ளனர். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த துறைக்கு புதிய நிறுவனம் தேவை. வெற்றி அடைந்தால் எப்படி வெற்றி அடைந்தது என கூறுகிறேன். தோல்வியடைந்தால் எனக்கு எதுவும் தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். தரவுகளின் அடிப்படையில் ரிஸ்க் எடுத்திருக்கிறேன். நம்பிக்கையாக இருக்கிறேன். தோல்விக்கும் தயராக இருக்கிறேன் என ஜுன்ஜுன்வாலா தெரிவித்திருக்கிறார்.
பங்குச்சந்தை முதலீட்டில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தொட்டதெல்லாம் தங்கம்தான். ஆனால் ஆகாசாவின் வெற்றி கண்ணுக்கு தெரிய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். விமான போக்குவரத்து துறையில் மற்றுமொரு நிறுவனமாக மாறுமா அல்லது ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் வெற்றி ஆகாசாவிலும் தொடருமா?