India GDP Growth: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என எஸ் & பி கணிப்பு...எதனால், பாதிப்பு என்ன?
நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக குறையும் என எஸ் & பி குளோபல் கணிப்பு வெளியிட்டுள்ளது.
உலக பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என எஸ் & பி குளோபல் நிறுவனம் கணித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி கணிப்பு:
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக ஆய்வு செய்து வரும் எஸ் & பி குளோபல் நிறுவனம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக கணிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நடப்பு நிதியாண்டான 2022- 23 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 7 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு 7. 3 சதவீதமாக இருக்கும் என எஸ் & பி குளோபல் நிறுவனம் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நிதியாண்டில், இந்தியாவின் பணவீக்கம் 6.8 சதவீதமாக இருக்கும் எனவும் கணித்துள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு தேவை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும், அவ்வாறு அதிகரிக்கும் பட்சத்தில் இந்திய பொருளாதாரம் மேலும் வளர்ச்சியடையும் எனவும் தெரிவித்துள்ளது.
கொரோனா - போர் தாக்கம்:
உலகளவில் கொரோனா தாக்கத்தை தொடர்ந்து, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக உலகளவில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. கொரோனா தொற்று சற்று தளர்ந்து வந்த நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் ஏற்பட்டது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொட்களின் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால உலகளவில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தி பணவீக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், உலகளவில் உள்ள மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்த ஆரம்பித்தன. இதனால் பணப்புழக்கம் குறைந்து, பொருளாதார மந்த நிலையில் சிக்க ஆரம்பித்துள்ளன.
குறைவான பாதிப்பில் இந்தியா:
ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் பெரிதும் பாதிக்கப்படவில்லை என கூறலாம். அதற்கான காரணமாக, இந்தியாவில் தேவை இருப்பதே என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர், உலகளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக குறைந்து காணப்படும் என எஸ் & பி குளோபல் நிறுவனம் கணித்துள்ளது.
பல்வேறு கணிப்புகள்:
இந்நிலையில், உலக வங்கியானது இந்தியாவின் நடப்பாண்டு பொருளாதார வளர்ச்சியை 6.5 சதவீதமாக இருக்கும் எனவும் கணித்துள்ளது. ஐ.எம்.எஃப் கணிப்பின் படி 7.4 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக இருக்கும் எனவும் கணித்துள்ளது . ஆசிய வளர்ச்சி வங்கியானது 7.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக இருக்கும் எனவும் குறைத்து கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram