Budget 2024: மத்திய பட்ஜெட்டில், சேலம் விமான நிலையத்தில், இரவில் விமானம் தரையிறங்கும் வசதி செய்யப்படுமா?
2024 மத்திய பட்ஜெட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழில் நடத்தி வருபவர்கள் எதிர்ப்பு.. எதற்கு?
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள கமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூ ஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது. விமான சேவை நிறுத்தப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பியதுடன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் அவர் நேரில் சந்தித்து கோரிக்கை அளித்தார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் முதல் சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கியது.
தற்போது, சேலம் - சென்னை, சென்னை - சேலம், பெங்களூர் - சேலம், சேலம் - கொச்சி, கொச்சி - சேலம், சேலம் - பெங்களூர் விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் சேலம் - சீரடி, சீரடி - சேலம், சேலம் - திருப்பதி, திருப்பதி - சேலம் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு விமான சேவை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், தற்போது நடைபெற்று வரும் விமான சேவை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக கூடுதல் விமான சேவை தொடங்குவதோடு, மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் விமானங்கள் சேர்க்கப்பட்டால் குறைந்த விலையில் விமான டிக்கெட் கிடைப்பதோடு, பொதுமக்கள் அதிக அளவில் பயணம் செய்பவர்கள் என கூறப்படுகிறது.
இதேபோல், சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமானம் தரையிறங்கும் வசதி இல்லாததால் பகலில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. எனவே 2024 மத்திய பட்ஜெட்டில் சேலம் விமான நிலையத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து இரவு நேரத்தில் தரையிறங்கும் வசதி செய்தால் கூடுதலாக விமானங்களை விமான நிறுவனங்கள் இயக்க வாய்ப்புள்ளது. மேலும், சேலம் விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மட்டுமே நிறுத்துவதற்காக இடம் உள்ளது. இதன் காரணமாக தனியார் விமானங்களை சேலம் விமான நிலையத்தில் தரையிறக்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே விரைவில் சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும், சேலம் மாவட்டத்தில் இருந்து ஜவ்வரிசி, மஞ்சள், மாம்பழம், வெள்ளம் போன்ற உணவுப் பொருட்களும், வெள்ளி கொலுசு, வெண்பட்டு, பட்டுப் புடவைகள், ஜவுளிகள், சரடு போன்றவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. எனவே சேலத்தில் இருந்து டர்போ விமானம் என்று சொல்லக்கூடிய சரக்கு விமான சேவை தொடங்கினால் இங்கிருந்து அருகில் உள்ள பெருநகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு. அங்கிருந்து வெளிநாடுகளுக்கு சேலம் மாவட்டத்தின் சிறப்புமிக்க பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு எளிமையாக அமையும் எனவும் இதற்கான அறிவிப்பு 2024 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என சேலம் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழில் நடத்தி வருபவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.