(Source: ECI/ABP News/ABP Majha)
FM Nirmala Sitharaman: பட்ஜெட் உரையில் தமிழ்நாடு பெயரை ஏன் குறிப்பிடவில்லை ? நிர்மலா சீதாராமன் விளக்கம்
FM Nirmala Sitharaman- Tamil Nadu : 2024- 25 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் உரையில் , தமிழ்நாடு பெயர் குறித்து பேசாதது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
Budeget 2024-25 - Tamilnadu Name: நேற்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024- 25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது முறையான ஆட்சியின், முதல் பட்ஜெட்டாகும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மோடி தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முக்கிய காரணமாக ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், பீகாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் ஆகியோர்களின் கூட்டணி பார்க்கப்படுகிறது.
ஆந்திரா- பீகார் : நிதி
இதையடுத்து பாஜக ஆட்சியை தக்க வைக்க பெரிதும் உதவிய ஆந்திரா, பீகார் மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்து கோரியது. இந்நிலையில் அந்த இரண்டு மாநிலங்களுக்கும் சிறப்பு நிதி ஒதுக்கி மத்திய அரசு சிறப்பாக கவனித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்றைய தினம் ( ஜூலை 23 ) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், “ஆந்திராவின் அமராவதி நகர வளர்ச்சி கட்டமைப்புக்கு ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் மின்சாரம், சாலை, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பீகாருக்கு ரூ.26,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பீகாரில் வெள்ளத் தடுப்பு நிவாரணமாக ரூ.11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பீகாரில் விஷ்ணு போதி, மகா போதி ஆகிய 2 கோயில்கள் அமைக்கப்படும். பீகாரில் 2,400 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய மின் ஆலைகள் அமைக்க ரூ.21,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
”தமிழ்நாட்டின் பெயரே இல்லை”
இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு பெரிதாக புதிய திட்டங்கள் இடம்பெறவில்லை, நிதியமைச்சரின் வழக்கமான தமிழ் நூல் மேற்கோள்கள் கூட இல்லை என பேச்சுகள் எழ ஆரம்பித்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற மாநிலங்களவையின் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, 2 மாநிலங்களுக்கும் மட்டும் சாதகமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. கேரளா, கர்நாடகா மகாராஷ்டிரா பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் சத்தீஸ்கர் , டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு திட்டங்களே இல்லை, தமிழ்நாட்டின் பெயரே இடம் பெறவில்லை. இதுபோன்ற பட்ஜெட்டை பார்த்ததில்லை என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
நிதியமைச்சர் பதில்:
அப்போது நிதியமைச்சர் பதிலளித்ததாவது, பட்ஜெட் உரையின் போது, ஒவ்வொரு மாநிலங்களின் பெயரையும் குறிப்பிட வாய்ப்பு கிடைக்காது. இதற்கு பல உதாரணங்களை என்னால் தெரிவிக்க முடியும். இந்த ஆண்டு பிப்ரவரி பட்ஜெட்டின் போதும், நேற்றைய பட்ஜெட்டின் போதும் நான் அதிக மாநிலங்களின் பெயரைக் குறிப்பிடவில்லை என்பது அனைவருக்கும் தெரியும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.