TN Budget 2022: மாதம் ரூ. 1000 எங்கே? - குடும்பத்தலைவிகளை ஏமாற்றிய தமிழக பட்ஜெட்...!
மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி, பட்ஜெட் அறிவிப்பின்போதும் நிறைவேற்றப்படாததால் பெண்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி, பட்ஜெட் அறிவிப்பின்போதும் நிறைவேற்றப்படாததால் பெண்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
2022-23ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழுமையான முதல் பட்ஜெட் இதுவாகும். இதில் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து, தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது பெண்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தத் திட்டம் குறித்துப் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ’’மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கும் வாக்குறுதியை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்
கடந்த ஆட்சியினர் நெருக்கடியான நிதி நிலையில் ஆட்சியை விட்டுச் சென்றனர். இதனால் இந்த வாக்குறுதியை முதலாண்டில் நடைமுறைப்படுத்துவது கடினமாக இருந்து வருகிறது.
இருப்பினும், இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய உள்ள பயனாளிகளை, தரவுகளின் அடிப்படையில் கண்டறியும் திட்டத்திற்கான வடிவமைப்புப் பணிகள் முழு முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல்முறையாக திமுக அரசு அமைந்தபோதே இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பயனாளிகளைக் கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை திட்டம் அமலுக்கு வரும் என்று தெரிவித்திருந்தார். இதனால் பட்ஜெட்டின்போது இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பயனாளிகளைக் கண்டறியும் திட்டத்திற்கான வடிவமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அதேபோல நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்திலும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக, சில தரப்பினருக்கு மட்டுமே தள்ளுபடி கிடைக்கும் வகையில் செயல்பட்டதாக எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்