மீண்டும் இயக்கத்திற்கு வரும் தலைஞாயிறு சர்க்கரை ஆலை - வேளாண் பட்ஜெட்டுக்கு மயிலாடுதுறை விவசாயிகள் நன்றி
2015ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 56 கோடி ரூபாய் நிதி ஆலை புணரமைப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்த நிலையில் அந்த நிதி இதுநாள் வரை வழங்கப்படவில்லை
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1987 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணியில் இருந்தனர். 23 ஆயிரம் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த ஆலையானது ஒரு டன்னுக்கு 97 கிலோ உற்பத்தி அரவை தந்தது. 1993 ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது.
இந்நிலையில் 1994 ஆம் ஆண்டு ரூபாய் 33 கோடியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கம் பணிகளை முறையாக செய்யவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், ஒரு டன்னுக்கு 59 கிலோ மட்டுமே சர்க்கரை அரவை தந்து நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில், நஷ்டத்தை சந்தித்து வந்த ஆலையை மறுசீரமைப்பு செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 2015 ஆம் ஆண்டில் 56 கோடி ரூபாய் நிதி ஆலை புணரமைப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்தார். ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஆலையை புணரமைப்பதற்கான நிதியை தமிழக அரசு இதுநாள் வரை வழங்கவில்லை.
தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் 2017 ஆம் ஆண்டு ஆலை மூடப்பட்டது. ஆலையில் வேலை செய்த ஊழியர்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டனர். சக்கரை ஆலையை திறக்க கோரி பல்வேறு தொடர் போராட்டங்களை கரும்பு விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் நடத்தினர். இந்நிலையில் தமிழக வேளாண் பட்ஜெட் -இல் தலைஞாயிறு சர்க்கரை ஆலை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூடப்பட்ட இந்த ஆலையை புணரமைக்க அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க வேண்டும். ஆலைக்கு தேவையான கரும்புகளை உற்பத்தி செய்து கொடுப்பதற்கு விவசாயிகள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். டெல்டா மாவட்ட விவசாயிகள் கடந்த 8 ஆண்டுகளாக பட்ட சிரமத்தை போக்கும் வகையில் இந்த ஆலை திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளதால் மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் ஆகிய 4 மாவட்ட விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் தமிழக அரசு என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளர்.