மத்திய பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும்? பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் சொல்வது என்ன?
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் சமீபத்தில் நேர்காணலில் இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதாகவும், எனினும் அதன் முழு ஆற்றலும் இன்னும் வெளிப்படாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதாகவும், எனினும் அதன் முழு ஆற்றலும் இன்னும் வெளிப்படாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அரசின் நிதிக் கொள்கையில் முன்னேற்றம் இருப்பதாகவும், வங்கிகளின் நிதிக் கொள்கை பணவீக்கத்தின் மீது கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் சார்பில் கடந்த ஜனவரி 25 அன்று உலகப் பொருளாதார மனநிலை குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில் சர்வதேச அளவிலான வளர்ச்சி எதிர்பார்ப்பு விகிதம் சுமார் 0.5 சதவிகிதம் குறைந்து தற்போது 4.4 சதவிகிதமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி எதிர்பார்ப்பு விதிதம் 0.5 சதவிகிதம் குறைந்து, தற்போதைய நிதியாண்டில் 9 சதவிகிதமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
`ஒமிக்ரான் காரணமாகவும், தற்போதைய முதல் காலாண்டில் அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாகவும் வளர்ச்சியின் விகிதம் குறைந்துள்ளது. இதனால் மீட்சி தள்ளிப் போயுள்ளது’ என்று கூறியுள்ளார் கீதா கோபிநாத்.
தொடர்ந்து பேசிய கீதா கோபிநாத், `இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருகிறது. எனினும், அது தற்போது இருக்கும் நிலைக்கும், அதன் ஆற்றலால் அடையக் கூடிய நிலைக்கும் இடைவெளி நீடிக்கிறது. மேலும், மக்களின் நுகர்வுப் பழக்கத்திலும், முதலீடுகளிலும் மீட்பு நடவடிக்கைகள் நிகழ்ந்து வருகின்றன. அதனால் பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவது தெரிகிறது’ எனக் கூறியுள்ளார்.
எனினும், பிற நாடுகளைப் போல இந்தியாவும் சர்வதேச அளவிலும், உள்நாட்டு அளவிலும் பாதிக்கப்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் காரணமாகவும், அதிகரிக்கும் எரிபொருள் விலைகள், அதிக வட்டி விகிதம் முதலானவற்றால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.
மத்திய அரசு தரப்பில் இருந்து பொருளாதார முன்னேற்றத்திற்கான காலியிடம் இருப்பதாகக் கூறுகிறார் கீதா கோபிநாத். பட்ஜெட் ஒதுக்கீட்டின் போது கிராமப்புறப் பணிகளை உறுதி செய்வதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். `சுகாதாரம், கல்வி முதலானவற்றின் மீது அரசு அதிக கவனம் குவிக்க வேண்டும். பள்ளிகள் நீண்ட நாள்களாக மூடப்பட்டிருப்பது, பிற்காலத்தில் விளைவுகளை ஏற்படுத்தும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவற்றோடு கூடுதலாக அரசுத் தரப்பில் இருந்து பொதுக் கட்டமைப்புகளில் முதலீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கீதா கோபிநாத் கூறியுள்ளார்.
அரசின் பொருளாதாரக் கொள்கை ஆதரவாக இருக்கும் அதே வேளையில், வங்கிகளின் பொருளாதாரக் கொள்கை பணவீக்கத்தால் ஏற்படும் சிக்கல்களைக் குறித்த கவனமாக இருக்க வேண்டும். மேலும் மத்திய வங்கியில் இருந்து வட்டி வகிதம் குறித்த எதிர்காலத் திட்டங்கள் தெளிவாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.