புதுச்சேரி பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் - முழு விவரம் இதோ
அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும் - புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு
புதுச்சேரி: அனைத்து குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ஒன்றிற்கு 300 ரூபாய் வீதம் வருடத்திற்கு மொத்தம் 12 சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 2023-24 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அனைத்து குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ஒன்றிற்கு 300 ரூபாய் வீதம் வருடத்திற்கு மொத்தம் 12 சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும். இதன் மூலம் அரசிற்கு ஆண்டிற்கு 126 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பிறந்தவுடன் 50 ஆயிரம் ரூபாய் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 18 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். உலக தமிழ் மாநாடு புதுச்சேரியில் நடத்த திட்டமுள்ளதாக தெரிவித்த ரங்கசாமி, பால் உற்பத்தியை அதிகரிக்க உயர் ரக கலப்பின பசு 50% மானியத்தில் வழங்கப்படும். சிறிய பால் பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படும். பால் அறவை இயந்திரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார்.
வான்கோழிகள் வளர்ப்பை ஊக்குவிக்க 50% மானியம், ஆட்டு பண்ணை வைக்க 50% மானியம், ஆதிதிராவிடர்களுக்கு 9 லட்சம் ரூபாய் 100% மானியம், பிற வகுப்பினருக்கு 5 லட்சம் ரூபாய் வரை 50% மானியம் என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். மத்திய அரசின் புதிய திட்டமான PM SHRIல் புதுச்சேரியில் 12 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இவை 24 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்தபடி 11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கனிணி விரைவில் வழங்கப்படும். மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில்ல 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை CBSE பாடத்திட்டம் கொண்டு வரப்படும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். மீனவ முதியோருக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு 70-79 வயதுள்ளவர்களுக்கு வழங்கப்படும் 3000 ரூபாய் 3500 ஆக உயர்த்தி வழங்கப்படும் இதன் மூலம் 2000 மீனவர்கள் பயன்பெறுவார்கள் முதல்வர் அறிவித்தார்.
காமராஜர் நிதியுதவி திட்டத்தில் மருத்துவம், பொறியியல், செவிலியர் மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் கலை, அறிவியல், கால்நடை, வேளாண் சட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்றும் புதுச்சேரி அரசின் உள்ளூர் பேருந்துகளில் அட்டவணையின பெண்கள் இலவசமாக பயணம் செய்ய வழிவகை செய்யப்படும், உயர்கல்வி பயிலும் பார்வை திறன் குறைபாடு உடைய 50 மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இலவசமாக மடிக்கணினி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் இந்த ஆண்டு 2000 வீடுகள் கட்டப்படும்.மாநில அரசின் திட்டமான காமராஜர் வீடு கட்டும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனடையாதவர்கள் இதில் பயன்பெறும். இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு 5 லட்சம் ரூபாய், பிற்படுத்தப்பட்டோருக்கு 3.5 லட்சம் ரூபாய் என நிதி உதவி அளிக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட முழுமையான பட்ஜெட் புதுச்சேரி மக்களுக்கு எந்த ஒரு வரியும் இல்லாமல் முழுமையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் காலை 9.45 மணிக்கு, 74 பக்க பட்ஜெட் புத்தகத்தை முதல்வர் ரங்கசாமி உரையாற்ற தொடங்கி, 11.11 மணிக்கு முடித்தார். இதையடுத்து சட்டபேரவையை நாளை காலை 9.30 மணிக்கு பேரவை தலைவர் செல்வம் ஒத்தி வைத்தார்.