மேலும் அறிய
Budget 2025 Highlights: தமிழ்நாட்டிற்கு அல்வா... வருமான வரியில் சர்ப்ரைஸ்... பட்ஜெட் 2025-ன் சிறப்பம்சங்கள்...
Budget 2025 Highlights in Tamil: மத்திய பட்ஜெட் 2025-ஐ நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதில், வருமானவரி உச்சவரம்பு அதிகரிப்பு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை பார்க்கலாம்...

மத்திய பட்ஜெட் 2025-ன் சிறப்பம்சங்கள்
Source : PTI
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், இன்று(01.02.25) மத்திய பட்ஜெட் 2025-26-ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்ற சிறம்பம்சங்கள் என்னென்ன என்பதை தற்போது தெரிந்துகொள்ளலாம்.
பட்ஜெட் 2025-ன் சிறப்பம்சங்கள் என்னென்ன.?
- ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளதால், ரூ.1 லட்சம் வரை மாத சம்பளம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.
- வருமான வரி விதிப்பை எளிமையாக்கும் வகையில் புதிய வருமான வரி சட்டம் மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
- சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், கடன் வழங்க ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.20 கோடி கடன் உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது.
- கல்வித்துறையில், ஏஐ திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என கூறியுள்ள மத்திய அமைச்சர், டிஜிட்டல் முறையில் பாடங்கள் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, கிராமப்புற பள்ளிகள் இலவச இணையம், 50,000 பள்ளிகளில் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் 23 ஐஐடி-க்கள் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், அதன் மூலம் 6,500 மாணவர்கள் பயன்பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாநிலங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1.50 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அடுத்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் 10,000 புதிய இடங்கள் ஏற்படுத்தப்படும், அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 மருத்துவ இடங்கள் சேர்க்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் மையங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- காப்பீட்டு துறையில் 74 சதவீதமாக இருந்த அந்நிய முதலீடு 100 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொருட்களை டெலிவரி செய்யும் ஸ்விக்கி, சொமேட்டோ, செப்டோ உள்ளிட்ட டெலிவரி ஊழியர்களுக்கு இலவச காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிப்பு.
- 2047-ம் ஆண்டிற்குள் அணு உலைகள் மூலமாக 100 ஜிகாவாட் மின் உற்பத்தி மற்றும் சிறு, நடுத்தர அணு உலைகள் அமைக்க ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு.
- உயிர் காக்கும் 36 புற்றுநோய் மருந்துகளுக்கு வரி விலக்கு, 82 மருந்துகளுக்கு செஸ் அல்லது மதிப்புக்கூட்டு வரிகளில் ஏதேனும் ஒன்று மட்டும் வசூலிக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிப்பு.
- லித்தியம் பேட்டரிகளுக்கு சுங்கவரி குறைக்கப்படுவதோடு, டிவி பேனல்களுக்கான சுங்க வரி 20 சதவீதம் குறைக்கப்படுவதாகவும் அறிவிப்பு.
- மேம்படுத்தப்பட்ட உதான் திட்டத்தின் மூலம், 120 புதிய வழித்தடங்களில் விமான சேவை தொடங்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
- 5 லட்சம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன பெண்களுக்கு ரூ.2 கோடி கடனுதவி வழங்கப்படும் எனவும் பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மொத்தத்தில், இந்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு பயனளிக்கும் வகையில் எந்தவிதமான் அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. மேலும், தங்கத்தின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தம் விதமாகவும் எந்தவித நடவடிக்கையும் இடம்பெறவில்லை என்பது பொதுமக்களுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு விஷயமாகவே உள்ளது.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















