Budget 2023 Reactions: “இது பட்ஜெட்டே இல்ல.. மளிகைக் கடை பில்” ... மத்திய அரசை கடுமையாக சாடிய சுப்பிரமணிய சுவாமி..!
மத்திய அரசின் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று (31ஆம் தேதி) தொடங்கியது. நாடாளுமன்றத்தின் மரபுப்படி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்த உரை முடிந்ததும் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நாட்டின் 2023-2024ம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையை தாக்கல் செய்தார்.
இந்த ஆட்சியின் கடைசி முழுநேர பட்ஜெட் இதுவாகும். நாட்டின் வரவு செலவு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் ஆண்டுக்கு ஒரு முறை அறிக்கையாக தாக்கல் செய்வார். இதுவே, மத்திய பட்ஜெட் என அழைக்கப்படுகிறது. கூட்டத்தொடரின் முதல் அமர்வு அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வானது மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
Is this a Budget presented today? It is a grocery store shopkeeper’s Bill — A decent Budget should disclose what are the Objectives. If it is GDP growth rate then disclose the level of investment and rate of return; the priorities, the economic strategy, &resource mobilisation.
— Subramanian Swamy (@Swamy39) February 1, 2023
இதனிடையே மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இன்று தாக்கல் செய்யப்பட்டது பட்ஜெட்டா?.. இது ஒரு மளிகைக் கடைக்காரரின் பில்.. ஒரு சராசரியான பட்ஜெட் குறிக்கோள்கள் என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக GDP வளர்ச்சி விகிதம் என்றால் முதலீட்டின் நிலை மற்றும் வருவாய் விகிதத்தின் முன்னுரிமைகள், பொருளாதார உத்தி, மற்றும் வளங்களை திரட்டுதல் பற்றி தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மத்திய அரசின் பட்ஜெட்டில் முன்னேற்ற வழிகள் எதுவும் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமியின் இந்த கருத்து அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.