Budget 2023: பட்ஜெட் தாக்கல் எதிரொலி; அமெரிக்க டாலருக்கு நிகராக உயர்ந்த இந்திய ரூபாய் மதிப்பு..!
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து 81.78 ரூபாயாக உள்ளது.
இன்று பட்ஜெட் தாக்கல்
மத்திய அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே நான்கு முறை மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து ஐந்தாவது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய அரசின் பட்ஜெட் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்ய உள்ள இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் இது என்பதால், நடுத்தர மக்களை கவரும் விதமான பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குச்சந்தை நிலவரம்
கடந்த வாரம் முதல் நேற்று வரை இந்திய பங்குச்சந்தையானது பலத்த அடிவாங்கியது. அதாவது, சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும், நிப்ஃடி 18 ஆயிரத்திற்கு கீழும் சரிந்துள்ளது. அந்த வகையில், கடந்த ஆண்டை போலவே இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியான நிலையில், இந்த ஆண்டும் அன்னிய முதலீடுகளானது வெளியேறி வருகின்றது.
இதுவரையில் பங்கு சந்தையில் இருந்து 1.6 பில்லியன் டாலர் அளவுக்கு வெளியேற்றம் கண்டுள்ளதாக தெரிகிறது. பங்கு சந்தைகள் பெரும் சரிவை கண்டு வருவதையடுத்தும், பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையிலும் , முதலீட்டாளர்கள் பெரிதும் குழப்பத்தில் இருந்தனர்.
இவ்வளவு நாட்கள் பங்குச்சந்தை சரிவோடு இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மீண்டது. மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூபாய் மதிப்பு
உலக நாடுகள் வர்த்தகத்தில் எப்போது அமெரிக்கா டாலர் மட்டுமே முக்கிய பங்கு வகிக்கும். இதனால் டாலர் மதிப்பு மீதான ஆதிக்கம் பல நாடுகளை பாதித்தது. குறிப்பாக வளரும் நாடுகளையும், இறக்குமதி செய்யும் நாடுகளையும் கடுமையாக பாதித்தது. கடந்த சில நாட்களாகவே ரூபாய் மதிப்பு சரிவுடனே இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஷிய - உக்ரைன் போரின் தாக்கம், உலகளவில் கடுமையான பணவீக்கம், உலகளவில் கடுமையாக்கப்பட்டு வரும் நாணய நிபந்தனைகள், தொற்றுநோயினால் ஏற்பட்ட நீடித்த விளைவுகள் காரணமாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் இந்த ஆண்டு ஒட்டுமொத்த மந்தநிலையை எதிர்கொள்ளும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உயர்ந்த இந்திய ரூபாய் மதிப்பு:
Rupee rises 10 paise to 81.78 against US dollar in early trade
— Press Trust of India (@PTI_News) February 1, 2023
ஆனால் இன்று மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலாக உள்ள நிலையில் ரூபாய் மதிப்பானது உயர்ந்துள்ளது. அதன்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து 81.78 ரூபாயாக உள்ளது.