Budget 2023: ஒரு ரூபாய் வித்தியாசம் என்ன? மத்திய அரசின் பட்ஜெட்: வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசம் என்ன?
மத்திய அரசின் 2023-24 நிதியாண்டு பட்ஜெட்டிற்கான வருமானம் மற்றும் செலவினத்தை, ஒரு ரூபாயை அடிப்படையாக கொண்டு இந்த தொகுப்பில் அறியலாம்.
வரவு - செலவு இடைவெளி:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து நான்காவது முறையாக கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது, 2023-24 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய அரசின் வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான இடைவெளி 5.9 சதவிகிதமாக இருக்கும் என தெரிவித்தார். நடப்பு நிதியாண்டிற்கான நிதிப்பற்றாக்குறை இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6.4 ஆக தக்கவைக்கப்பட்டு, எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவிற்கு கிடைத்த வருவாய், அதனை செலவிடும் விகிதம் ஆகியவற்றை ஒரு ரூபாயை அடிப்படையாக கொண்டு தற்போது அறியலாம்.
அரசுக்கான வருமானம் என்ன:
மத்திய அரசுக்கு மொத்தமாக ஒரு ரூபாய் வருமானமாக கிடைக்கிறது என்றால், அதில் 34 பைசா கடன் மற்றும் அதுதொடர்பான வழிகளில் கிடைக்கிறது. ஜிஎஸ்டி மற்றும் இதர வரி வருவாய் மூலம் 17 பைசா, வருமான வரி மூலம் 15 பைசா, கார்ப்ரேட் வரி 15 பைசா, மத்திய கலால் வரி பைசா 7 பைசா, சுங்க வரி மூலம் 4 பைசா, வரி அல்லாத வருவாய் மூலம் 6 பைசாவும் மத்திய அரசுக்கு வருவாயாக கிடைக்கிறது. கடன் அல்லாத மூலதன வரவாக 2 பைசாவும் கிடைக்கிறது. இந்த அடிப்படையில் தான், 2023-24 நிதியாண்டில் மத்திய அரசுக்கான ஒவ்வொரு ரூபாய் வருவாயும் கிடைக்கப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
அரசு செலவு செய்வது எப்படி?
அதேநேரம் பல்வேறு வழிகளில் கிடைக்கும் வருவாயை, அரசு வெவ்வேறு வளர்ச்சி பணிகளுக்காக செலவிட்டு வருகிறது. அந்த வகையில் அரசு செய்யும் பெரும் செலவாக ஒவ்வொரு ரூபாயில் இருந்தும் 20 பைசாவை, கடன்களுக்கான வட்டியை திருப்பி செலுத்துவதற்காக செலவு செய்கிறது. ஒட்டுமொத்த வரி வருவாயில் மாநிலங்களின் பங்காக 18 பைசா வழங்கப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்காக 17 பைசாவும், நிதிக்குழுவிற்கு வழங்குவது உள்ளிட்ட வழிகளில் 9 பைசாவும், மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு 9 பைசாவும் செலவு செய்யப்படுகிறது. இதர செலவுகளுக்காக 8 பைசாவும், பாதுகாப்பு மற்றும் மானியங்களுக்காக தலா 8 பைசாவும் ஒதுக்கப்படுகிறது. இறுதியாக ஓய்வூதிய திட்டங்களுக்காக 4 பைசாவும் மத்திய அரசின் ஒவ்வொரு ரூபாய் வருவாயிலும் செலவு செய்யப்படுகிறது, என மத்திய அரசின் 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.