Zepto Aadit Palicha | 10 நிமிடங்களில் மளிகை டெலிவரி.. அரை பில்லியன் டாலர் மதிப்பு.. அசத்தும் 19 வயது ZEPTO நிறுவனர்..
19 வயதே ஆன ஆதித் பலிச்சா, பிக்பாஸ்கெட், ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட், ஜொமாட்டோவின் ப்ளிங்கிட், டன்ஸோ, அமேசான், ஃப்ளிப்கார்ட் முதலான நிறுவனங்களுக்குப் போட்டியாக தொழில் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

``வாழ்க்கை, விடுதலை, மகிழ்ச்சியை நோக்கிய பயணம், தினமும் 10 கடைகளைத் தொடங்குவது முதலானவை குறித்து நாம் தினமும் நீண்ட உரையாடல்களை மேற்கொள்ளலாம். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்று பார்த்தால், நாங்கள் இதனைக் களத்தில் தினமும் அமல்படுத்தி வருகிறோம். உடன் போட்டியிடும் மூன்று, நான்கு நபர்களுடன் ஒப்பிடுகைகளில், அவர்களுள் ஒருவர் சிறப்பாக செயபடுகிறார் என்றால் அவர் மீது மட்டுமே எங்கள் கவனம் அதிகமாக இருக்கும். பிறரைக் கவனிக்கத் தேவையில்லை.”
இந்த வாக்கியத்தைத் தன் வாழ்க்கையில் பல்வேறு முறை தொழிற்போட்டிகளையும், தொழிலை மேம்படுத்துவதையும், தொழிற்போட்டியில் தொடர்ந்து நீடிப்பது ஆகியவற்றை அனுபவித்து அதன் மூலமாக பட்டறிவு பெற்ற தொழிலதிபர் எவரோ கூறியதைப் போல தோன்றலாம்.
ஆனால் இது அனுபவம் பெற்ற தொழிலதிபர் கூறியது அல்ல. ஸெப்டோ என்ற நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை அதிகாரியுமான 19 வயதே ஆன ஆதித் பலிச்சா கூறியவை இவை. இவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து படிப்பைப் பாதியிலேயே விட்டு, இந்தியாவில் பெரிய டெலிவரி நிறுவனங்களான பிக்பாஸ்கெட், ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட், ஜொமாட்டோ நிறுவனத்தின் ப்ளிங்கிட், கூகுள் நிறுவனத்தின் டன்ஸோ, அமேசான், ஃப்ளிப்கார்ட் முதலான நிறுவனங்களுக்குப் போட்டியாக தொழில் நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

ஆதித் பலிச்சாவின் மூளையில் உதித்த ஐடியா காரணமாக உருவாகியுள்ள ஸெப்டோ நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு அரை பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், மளிகைப் பொருள்களை வெறும் 10 நிமிடங்களில், சில சமயங்களில் வெறும் 5 நிமிடங்களில், டெலிவரி செய்யப்படுவதால் பலராலும் திரும்பிப் பார்க்கப்படுகிறது.
YC என்ற முதலீடு பெற்றுத் தரும் நிறுவனத்தின் ஏலத்தின் போது ஸெப்டோ நிறுவனம் முதல் சுற்றில் சுமார் 60 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈன்றுள்ளது; வெறும் சில மாதங்களிலேயே இதே நிறுவனம் தற்போதைய ஏலத்தின் போது சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாகப் பெற்றுள்ளது.
தனது நிறுவனம் வெறும் 10 நிமிடங்களில் டெலிவரி மேற்கொள்வதில்லை எனத் தனது போட்டியாளர்கள் உருவாக்கும் பொதுக் கண்ணோட்டம் குறித்தும், டெலிவரி ட்ரைவர்களைப் பிற நிறுவனங்கள் தங்களோடு சேர்த்துக் கொள்வது, தற்போது இந்தியாவில் ஆன்லைனில் அதிகளவில் மேற்கொள்ளப்படும் புதிய ஆர்டர்களால் ஏற்படும் சவால்கள் முதலான பல்வேறு விவகாரங்களைக் குறித்தும் சமீபத்தில் தனது கருத்துகளை மிகவும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் 19 வயது தொழிலதிபரான ஆதித் பலிச்சா.
``எங்கள் கொள்கை என்னவென்றால் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பெரும்பாலான போட்டியாளர்கள் இந்தப் போட்டியிலேயே இடம்பெற மாட்டார்கள். நேரடியாக மோதுவதற்காக நமக்கு ஒரே ஒரு போட்டியாளர் மட்டுமே இருப்பார் என நினைக்கிறேன். சந்தைப் போட்டியில் இயல்பாகவே இப்படித்தான் நிகழ்கிறது. மேலும், இவை ஒரு குறுகிய காலத்திற்கான பிரச்னைகள் மட்டுமே. இதனை முதலீட்டாளர்கள் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார் ஆதித் பலிச்சா.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

