Stroke Awareness: "பக்கவாதம் குறித்து கவலை வேண்டாம்" .. அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் குறித்த முழு விபரம் இதோ..!
பக்கவாதத்தின் விளைவுகள் என்பது முதன்மையாக மூளையில் ரத்த ஓட்டம் தடைபட்ட இடம் மற்றும் மூளை திசுக்களின் பாதிப்பு அளவைப் பொறுத்ததாகும்...
பக்கவாதம் குறித்து கவலை வேண்டாம்; அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் எளிமைபடுத்தப்பட்டுள்ளன.
டாக்டர் ஹரிஹரபிரகாஷ் R, கன்சல்டன்ட் இன்டர்வென்ஷனல் ரேடியாலஜிஸ்ட், ராயல்கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கோயம்புத்தூர்
டாக்டர் சம்பத்குமார் P, கன்சல்டன்ட் இன்டர்வென்ஷனல் ரேடியாலஜிஸ்ட், ராயல்கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கோயம்புத்தூர்
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் 29–ந்தேதி உலக பக்கவாத தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த உலக பக்கவாதம் தினம் இந்தியாவில் அதிகரித்து வரும் பக்கவாத நோயை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.
பக்கவாத நோயானது உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்களை பாதிக்கிறது. நமது மூளையானது உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் மிகவும் அற்புதமான உறுப்பு ஆகும். ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு, மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ரத்த ஓட்டம் இல்லாவிட்டால், உடலின் அந்த பகுதி சரியாக வேலை செய்யாது. பக்கவாதத்தின் விளைவுகள் என்பது முதன்மையாக மூளையில் ரத்த ஓட்டம் தடைபட்ட இடம் மற்றும் மூளை திசுக்களின் பாதிப்பு அளவைப் பொறுத்ததாகும்.
பக்கவாதம் ஒருவரின் அறிவாற்றலை பாதிப்பதோடு, கடுமையான நரம்பியல் செயலிழப்பு மற்றும் இயலாமைக்கு வழிவகுக்கிறது. அத்துடன் ஒரு நோயாளியின் அன்றாட வாழ்க்கை முறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இறப்புக்கான காரணங்களில் பக்கவாதம் மூன்றாவது இடத்திலும், இயலாமைக்கான ஆறாவது முக்கிய காரணமாகவும் உள்ளது. இயலாமை மற்றும் இறப்புக்கு இது ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஆனால் பலருக்கு இது குறித்தும், இதன் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் தெரியவில்லை. பக்கவாதம் 80% வரை தடுக்கக்கூடிய நோய் என்பதை அறிந்தால் நீங்கள் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள். பக்கவாதத்தைத் தடுப்பது என்பது ஆரம்பகால நிலையில் கண்டறிந்து அதற்கு சரியான மருத்துவ சிகிச்சையை அளிப்பதாகும். உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 90.5 சதவீத பக்கவாத நோய்கள் மாற்றியமைக்கக்கூடிய ஆபத்து காரணிகளால் ஏற்படுவதும், 74.2 சதவீத பக்கவாதம் நடத்தை காரணமாக அதாவது புகை பிடித்தல், மோசமான உணவு பழக்கவழக்கம், குறைந்த அளவிலான உடல் செயல்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக ஏற்படுகிறது என்று தெரிய வந்திருக்கிறது.
ஆபத்து காரணிகளை அறிந்து கொள்ளுங்கள்
பக்கவாதம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள உள்ளன. அதிக உடல் பருமன், போதிய உடற்பயிற்சியின்மை, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், புகைபிடித்தல் மற்றும் அதிக மது அருந்துதல் போன்றவற்றால் பக்கவாதம் ஏற்படுகிறது. தைராய்டு நோயினாலும் பக்கவாதம் ஏற்படலாம். ஏட்ரியல் பைப்ரிலேஷன் மற்றும் கார்டியோஎம்போலிக் ஸ்ட்ரோக் ஆகியவை ஹைப்பர் தைராய்டிசத்தால் ஏற்படுகிறது. பெருந்தமனி தடிப்பு மற்றும் பிற இதய ஆபத்து காரணிகள் ஹைப்போ தைராய்டிசத்தால் அதிகரிக்கின்றன. எனவே இதற்கான சாத்தியமான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் டாக்டர் ஹரிஹரபிரகாஷ் வலியுறுத்தி உள்ளார்.
உயர் ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்தம் உடல் முழுவதும் உள்ள ரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது, இதனால் அவை எளிதில் வெடிக்கும் அல்லது அடைபடும் நிலைமைகளை உருவாக்குகிறது. மூளையில் பலவீனமான ரத்த நாளங்கள் பக்கவாதம் ஏற்படும் அதிக ஆபத்தில் உங்களை வைக்கின்றன.
நீரிழிவு நோய் : நீரிழிவு நோய் என்பது பக்கவாதத்திற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. இது பல்வேறு இடங்களில் ரத்த நாளங்களில் நோயியல் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, பெருமூளையில் ரத்த நாளங்களை நேரடியாக பாதிப்பதால் அவை பக்கவாதத்திற்கு வழிவகுக்கின்றன.
உயர் உடல் நிறை குறியீட்டெண்: அதிக உடல் நிறை குறியீட்டெண் (BMI) பக்கவாதத்தை, குறிப்பாக இஸ்கிமிக் பக்கவாதத்திற்கான அபாயத்தை அதிகரிக்கலாம்.
குறைந்த அல்லது போதிய உடற்பயிற்சியின்மை: வழக்கமான உடற்பயிற்சி பக்கவாதத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளையும் இறப்புகளையும் குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புகை பிடித்தல்: புகை பிடிப்பதால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. ஒரு நாளைக்கு 20 சிகரெட்டுகள் புகைப்பவருக்கு, புகைபிடிக்காதவர்களை விட பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு ஆறு மடங்கு அதிகமாக இருக்கிறது. நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால், அதை விட்டுவிடுவது பக்கவாதம் மற்றும் பிற நோய்கள் வராமல் உங்களைப் பாதுகாக்கும்.
மது அருந்துதல்: அதிக ஆல்கஹால் எடுத்துக் கொள்ளும்போது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது.
அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்
பக்கவாதம் யாருக்கும், எந்த வயதிலும், எந்த நேரத்திலும் ஏற்படலாம், மேலும் இது குறித்த எச்சரிக்கைகளை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்கப்படாமல் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் 19 லட்சம் மூளை செல்கள் இறக்கின்றன. "நேரமே மூளை-Time is brain" என்ற சொற்றொடர், பக்கவாதம் எவ்வளவு விரைவாகவும், மீளமுடியாமல் மனித நரம்பு திசுக்களை சேதப்படுத்துகிறது என்பதையும், விரைவான சிகிச்சை தேவைப்படுகிறது என்பதையும் வலியுறுத்துகிறது. பக்கவாதத்திற்கு ஆரம்பகால மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளும்போது அது அவரது வாழ்நாளை அதிகரிக்கச் செய்வதோடு, பக்கவாதத்தின் தன்மையையும் வெகுவாக குறைக்கிறது. பிற உடல்நலப் பிரச்சினைகளைப் போல் இல்லாமல் இது தொடர்பான அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். பக்கவாதத்தை ஒரு தீவிர நோயாக கருத்தில் கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று டாக்டர் சம்பத்குமார் தெரிவித்தார்.
பக்கவாததத்திற்கான சிகிச்சையைப் பெறுவதற்கான மிக முக்கியமான அம்சம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் பின்வரும் அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்.
பக்கவாததின் அறிகுறிகளை BE FAST என எளிதில் நினைவில் வைத்து கொள்ளலாம்
Balance: தடுமாற்றம் - திடீரென தடுமாற்றம் அல்லது ஒருங்கிணைப்பு இழப்பு அல்லது திடீரென தலைச்சுற்றல் ஏற்படுகிறதா?
Eye: கண்கள் - ஒன்று அல்லது இரண்டு கண்களில் இருந்து திடீரென்று பார்ப்பதில் சிரமம் உள்ளதா?
Face: முகம் - முகத்தில் சமச்சீரற்ற தன்மை உள்ளதா அல்லது சீரற்ற புன்னகையை நீங்கள் கவனிக்கிறீர்களா?
Arms: கைகள் - கைகளில் பலவீனம் அல்லது உணர்வின்மை உள்ளதா, மேலும் இரு கைகளையும் சமமாக உயர்த்த முடிகிறதா?
Speech: பேச்சு - பேச்சு மந்தமாக உள்ளதா அல்லது குழப்பமான மன நிலை ஏற்படுகிறதா அல்லது வார்த்தைகளை உருவாக்குவது சிரமம் உள்ளதா?
Time: நேரம் - மேலே உள்ள அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால், அவசர உதவியை அழைக்க வேண்டிய நேரம் இது.
பக்கவாதத்திற்கான சிகிச்சை
நோயாளியை முழுமையாக பரிசோதித்து துவக்க நிலை சிகிச்சையை அளிக்க வேண்டும். அவசரநிலை பக்கவாத குழு உடல் மற்றும் மருத்துவ நரம்பியல் பரிசோதனைகள் மற்றும் இமேஜிங் மதிப்பீடு உட்பட முழு மருத்துவ விவரங்களையும் தெரிவிக்கும். பக்கவாதம் ஏற்பட்ட 4 முதல் 5 மணி நேரத்திற்குள், ரத்த உறைவைக் கரைக்க உதவும் ஒரு மருந்தை நரம்பு வழியாக கொடுக்கலாம். சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக த்ரோம்போலிடிக் மருந்துகள் பயன் அளிக்காத நிலையில், மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி எனப்படும் வடிகுழாய் செயல்முறை ஒரு சிறந்த சிகிச்சை முறையாகும். மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி செயல்முறையும் நேரம் சார்ந்த சிகிச்சை முறையாகும். அறிகுறி தோன்றிய 24 மணி நேரத்திற்குள் இந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். சில சந்தர்ப்பங்களில், நோயாளியின் மூளையின் அழுத்தத்தை குறைக்க அறுவை சிகிச்சையும் தேவைப்படும்.
பக்கவாத நோயானது "அமைதியான அச்சுறுத்தல்" என்று குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் அது திடீரென்று எந்தவித அறிகுறியும் இல்லாமல் தாக்கும் நோய் ஆகும். இது உயிருக்கு ஆபத்தைக்கூட ஏற்படுத்தலாம். ஆனால் அதற்கான காரணங்களை நன்கு புரிந்து, அதன் அறிகுறிகளுக்கு ஏற்ப உடனடி மருத்துவ சிகிச்சை எடுத்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அதன் தாக்கம் வெகுவாக குறையும். பக்கவாதம் தொடர்பான விழிப்புணர்வு மிகவும் அவசியம் ஆகும்; இது ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கிய முதல் படியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )