மேலும் அறிய

UP Election 2022: பிரியங்கா காந்தியின் உ.பி. தேர்தல் வியூகங்கள்: வருங்கால அரசியல் பார்வையை மாற்றுமா?

இந்திய விடுதலைக்காக நடத்தப்பட்ட நீண்டகாலப் போராட்டம், ஆங்கிலேயர்களை வெளியேற்றி, அரசியல் விடுதலை பெறும் நோக்கத்துடன் மட்டுமே முன்னெடுக்கப்பட்ட போராட்டமல்ல. அண்ணல் காந்தி மற்றும் பல காங்கிரஸ் தலைவர்களின் சமூகச் சீர்திருத்த நோக்கங்களும் அத்துடன் இணைந்திருந்தன. வெள்ளையர்கள் ஆட்சியை அகற்றிவிட்டு, இந்தியர்களின் ஆட்சியைக் கொண்டுவருவதால் மட்டுமே, நமக்கு உண்மையான ஸ்வராஜ்யம் கிடைத்துவிடாது என்றார் காந்தி.  இந்தியச் சமூகம் தன்னை சீர்திருத்திக் கொள்ளாமல் உண்மையான ஸ்வராஜ்யத்தை அடைய முடியாது என்பது அவரது உறுதியான நம்பிக்கை.

எனவேதான், ஆங்கில ஆட்சியை எதிர்த்து அவர் சத்தியாக்கிரகப் போராட்டங்களை நடத்திய அதே சமயத்தில், சமூக சீர்திருத்த நோக்கங்களான இந்து - முஸ்லீம் ஒற்றுமை, தீண்டாமை, பெண்ணுரிமை, கிராமத் தொழில் மேம்பாடு போன்ற நோக்கங்களுக்காகவும் உழைத்தார். நாளிதழ்களில் கட்டுரைகள், கடிதங்கள், சமூக வழக்கங்களை எதிர்த்தல், உண்ணா விரதம் எனப் பற்பல வழிகள் மூலம் பெரும் சீர்திருத்தங்களை முன்னெடுத்தார். அம்பேத்கர், பெரியார், அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு போன்ற தலைவர்களும், தத்தமது சமூக மேம்பாட்டுக் கொள்கைகளை நிறைவேற்ற உழைத்தார்கள்.

தற்கால அரசியல் சூழல்

ஆனால், சமகால அரசியல் சூழல் முற்றிலுமாக மாறிப் போயுள்ளது. இன்று அதிகாரப் பொறுப்புகளில் இருப்பவர்கள், ஒரு அடையாளத்துக்குக் கூட சீர்திருத்தவாதிகளாகவோ, முற்போக்குக் கொள்கைகளைப் பேசுபவர்களாகவோ இல்லை.  மாறாக, அதிகாரத்தை மட்டுமே தேடிச் செல்வதை தங்கள் வாழ்வின் ஒரே நோக்கமாகக் கொண்டவர்கள். அதை அடைய சமூகத்தில் உள்ள பலவீனங்கள், பிளவுகள் முதலியவற்றைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் அதிகாரத்தை அடையும் பதவி வெறியர்களாக இருக்கிறார்கள். கேட்டால், சமூகச் சீர்திருத்தங்களெல்லாம், தன்னார்வ நிறுவனங்களின் வேலை என்கின்றனர்.

UP Election 2022: பிரியங்கா காந்தியின் உ.பி. தேர்தல் வியூகங்கள்: வருங்கால அரசியல் பார்வையை மாற்றுமா?

தேர்தலைச் சந்தித்து வரும் உத்தரப் பிரதேச மாநிலத்தில், போட்டி கடுமையாக இருக்கிறது. ஆளும் கட்சியான பாஜகவும், பிரதான எதிர்க் கட்சியான சமாஜ்வாதியும், குற்றப் பின்ணணி உள்ள வேட்பாளர்களை நிறுத்துவதாக ஒருவர் இன்னொருவர் மீது குற்றம்சாட்டிப் பேசி வருகிறார்கள். பெரும்பாலும் இருமுனைப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இத்தேர்தலில் வேட்பாளர்கள், சாதி, பணம், அடியாள் பலம் என்னும் அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். முக்கியமான தலைவர்கள், கட்சித் தாவல் விளையாட்டில் இருப்பதை செய்தித்தாள்களின் முதல் பக்கங்களில் பார்க்க முடிகிறது.

காந்தி, இந்திராவை நினைவுபடுத்திய போராட்டங்கள்

இந்த அரசியல் தளத்தின் பின்ணணியில்தான், காங்கிரஸ் இயக்கத்தின் பொதுச் செயலாளரும், உத்தரப்பிரதேச மாநிலப் பொறுப்பாளருமான ப்ரியங்கா காந்தி, 2019ஆம் ஆண்டில் மாநில அரசியலில் காலடி எடுத்து வைத்தார். யோகி ஆதித்யநாத் அரசின் தோல்விகளை மக்கள் முன் வைத்துக் கள அரசியலில், யோகி அரசை எதிர்த்துப் போராடத் தொடங்கினார். அரசை விமர்சிக்கும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுநலச் செயல்பாட்டாளர்கள் மீது வழக்குகள் தொடர்ந்து அவர்களை முடக்குவது போன்ற அடக்குமுறைகளை யோகி அரசு ஏவிக் கொண்டிருந்த காலத்தில், துணிந்து சாலையில் இறங்கிப் போராட்டங்களை முன்னெடுத்தார். ஆயுதம் தாங்கிய அரசின் படைகளின் அடக்குமுறைகளை, தன்னந்தனியராக, நிராயுதபாணியாக அவர் எதிர்கொண்டது, காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்தையும், இந்திரா காந்தியின் அரசியல் போராட்டங்களையும் நினைவுறுத்தியது

கொரோனா காலத்தில், முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில், புலம்பெயர்த் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தோடும், குழந்தைகளோடும், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவு கால்நடையாக நடந்து சென்றது தேசத்தின் மனசாட்சியை உலுக்கியதை நாம் அறிவோம். அப்போது அவர்கள் ஊர் சென்று சேர உதவியாக, ஆயிரம் பேருந்துகளை ப்ரியங்கா உத்தரப் பிரதேச மாநில எல்லையான நொய்டாவுக்கு அனுப்பி வைத்தார். அதைச் சற்றும் எதிர்பார்த்திராத யோகி அரசு, அந்தப் பேருந்துகளுக்கு அனுமதி தராமல் கீழ்த்தரமாக அரசியல் செய்தது. 

தன் மக்கள்நல அரசியலின் தொடர்ச்சியாக, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஏழைகள் குடும்பத்தின் துயரத்தில் பங்கு கொண்டது, கார் ஏற்றிக் கொல்லப்பட்ட உழவர்கள் தரப்பில் நின்றது என மக்களின் மனமறிந்து, அவர்கள் சார்பாகக் களமிறங்கியது அரசியல் விமர்சகர்களால் பாராட்டப்படுகிறது.

UP Election 2022: பிரியங்கா காந்தியின் உ.பி. தேர்தல் வியூகங்கள்: வருங்கால அரசியல் பார்வையை மாற்றுமா?

பெண்களை முன்னிறுத்தி அரசியல்

2017ஆம் ஆண்டு, சமஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ், ஏழு சீட்டுகளை மட்டுமே வென்று படு தோல்வியைச் சந்தித்தது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இல்லாததால், கிராம, தாலூகா அளவில் காங்கிரஸ் கட்சியின் சுவடுகளே இல்லாமல் போயின.  காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களைக் கொடுத்துவிட்டதாக விமர்சனங்களைச் சந்தித்த சமாஜ்வாதிக் கட்சி, அடுத்த தேர்தலில் கூட்டணி  வேண்டாம் என முடிவெடுத்தது.  இதைப் பிரச்சினையாகப் பார்க்காமல், ஒரு வாய்ப்பாகப் பார்த்த ப்ரியங்கா காந்தி, ஒரு புதுமையான அரசியல் அஸ்திரத்துடன் நேரடியாகத் தற்போது களமிறங்கியுள்ளார்.  பெண்களின் பங்களிப்பை முன்னிறுத்தி, தன் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்திய அரசியல் களம் என்பது, ஆண் மேலாதிக்க உலகம். அங்கே பெண்கள் அதிகாரத்துக்கு வர வேண்டுமானால், ஒரு பெருந்தலைவரின் மனைவியாகவோ, மகளாகவோ அல்லது சகோதரியாகவோ இருந்தால்தான் முடியும். அதைத்தாண்டி, பெண்கள் பொதுக்கூட்டங்களில், வரவேற்பு விழாக்களில், பிரச்சாரத்தில் முகமில்லா நபர்களாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். 50% வாக்காளர்களாகிய பெண்களிடம் வாக்கு சேகரிக்கும் காலாட்படைகள்தான் பெண் அரசியல்வாதிகள். 

40% இடங்களுக்குப் பெண் வேட்பாளர்கள்

இதுபோன்ற ஆணாதிக்கச் சூழலில், அரசியல் போன்ற கடுமையான துறையின் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மன வலிமையற்றவர்கள் எனக் கருதப்பட்டு, பெண்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இந்தச் சூழலில் வரவிருக்கும் தேர்தலில், உத்தரப்பிரதேசத்தில் 40% இடங்களுக்குப் பெண் வேட்பாளர்கள் என ப்ரியங்கா அறிவித்திருப்பது மிகவும் துணிச்சலான, புதுமையான தேர்தல் அஸ்திரமாகும். இந்தியப் பாராளுமன்றத்தில், பெண்களின் பங்களிப்பு 15% கூட இல்லாத நிலையில், இந்த அணுகுமுறையும் அறிவிப்பும், மிகவும் துணிச்சலான, பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். பெண் கல்வியறிவு கணிசமாக உயர்ந்திருக்கும் இந்த நவீனச் சூழலில், இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டால், அது இந்திய அரசியலையே மாற்றக் கூடிய உத்தியாக இருக்கும்.

UP Election 2022: பிரியங்கா காந்தியின் உ.பி. தேர்தல் வியூகங்கள்: வருங்கால அரசியல் பார்வையை மாற்றுமா? 

வெறுப்பையும் பிரிவினைவாதத்தையும் தேர்தல் உத்தியாக முன்வைத்து நடக்கும் பிற்போக்கு அரசியல் சொல்லாடலில் இருந்து விலகி, காங்கிரஸ் பிரிவினைவாதம் தவிர்த்த மக்கள்நல மேம்பாட்டை முன்னெடுக்கிறது. அதன் பகுதியாக, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கைகளைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் ப்ரியங்கா, தேர்தல் களத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கிவிட்டார் என்கிறார் ஒரு தேர்தல் பார்வையாளர். இந்த அணுகுமுறை, மற்ற அரசியல் கட்சிகளையும் யோசிக்க வைத்திருக்கிறது என்கிறார் அவர்.

வெற்று முழக்கமல்ல

காங்கிரசின் தேர்தல் முழக்கமான, ‘நான் பெண்; என்னால் போரிட முடியும்’ (லட்கி ஹூன்; லட் சக்தி ஹூன்), சில நாட்களிலேயே மிகப் பிரபலமான ஒன்றாக ஆனது. அயிகிரி நந்தினி என்னும் மஹிஷாசுர மர்த்தினி ஸ்லோகம் போலவே உருவாக்கப்பட்ட பிரச்சாரப் பாடல், பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கிறது. பொருளாதார மற்றும் அரசியல் தளங்களில் அதிகாரத்தை அடைவதின் மூலமே பெண்கள், இன்றைய ஆணாதிக்கச் சமூகத் தளைகளில் இருந்து விடுபட்டு முன்னேற முடியும். இதை ப்ரியங்கா மிகத் தெளிவாக உணர்ந்து செயல்படுகிறார். இது வெற்று முழக்கமல்ல, ஒரு சமுதாய சீர்திருத்தப் பார்வை.

40% இடங்களில், பெண் வேட்பாளர்களுக்கு எங்கே செல்வார் என்னும் விமர்சனத்துக்குப் பதில் சொல்லும் விதமாக, அதீதத் துணிச்சலோடு அரசு ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடிய பெண்களை வேட்பாளர்களாக அறிவித்திருக்கிறார். உன்னாவ் கிராமத்தில், பாலியல் வன்முறைக்குள்ளான மகளுக்காக நீதிகேட்டுப் போராடிய ஆஷா சிங், குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய சடஃப் ஜாஃபர், ஆஷா மக்கள்நலப் பணியாளர்களுக்காகப் போராடிய பூனம் பாண்டே போன்றவர்கள் இம்முறை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

ஆக்கபூர்வமான அணுகுமுறை

வேலைவாய்ப்பில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, ஆஷா மக்கள் நலப்பணியாளர்களுக்கான அதிக ஊதியம், கல்லூரி செல்லும் பெண்களுக்கு மொபைல் போன் மற்றும் ஸ்கூட்டர்கள், நேர்மையான அரசுப் பணி நியமனம், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பயிற்சி, சிறு தொழில்களுக்கு உதவி, உழவர்களுக்குக் கடன் தள்ளுபடி எனப் பல முக்கியமான திட்டங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் முன்வைத்திருக்கிறது.  சாதி, மத வெறுப்பரசியலுக்கு மாற்றான ஆக்கபூர்வமான அணுகுமுறை இது என்கிறார் ப்ரியங்கா.

‘உங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறும் வாய்ப்புகள் எவ்வளவு?’ என்னும் கேள்விகள், ப்ரியங்காவைப் பார்த்துக் கேலியாகக் கேட்கப்படுகின்றன. ‘எங்கள் வேட்பாளர்கள் ஜெயிக்கலாம் அல்லது தோற்றுப் போகலாம்.. தோற்றவர்கள் தோல்வியிலிருந்து பாடம் கற்று மீண்டும் வலிமையுடன் எழுந்து வருவார்கள். அடுத்த தேர்தலுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வார்கள். எங்களது இலக்கு, இந்தத் தேர்தல் மட்டுமல்ல. இதைத்தாண்டி நீண்ட கால நோக்கில், பெண்களுக்கான உரிமையை மீட்டெடுக்கும் நோக்கம் கொண்டது’ என்னும் தெளிவான, நேர்மையான பதிலுடன் அக்கேள்விகளை எதிர்கொள்கிறார் ப்ரியங்கா. 

UP Election 2022: பிரியங்கா காந்தியின் உ.பி. தேர்தல் வியூகங்கள்: வருங்கால அரசியல் பார்வையை மாற்றுமா?

உத்தரப் பிரதேசத் தேர்தலில், காங்கிரசின் முதல் வேட்பாளர் முகம் எது என்னும் கேள்விக்கு, ‘என் முகம்தான் எங்கும் தெரிகிறதே’, எனச் சாமர்த்தியமாகப் பதிலளிக்கும் ப்ரியங்கா, அதை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால், தேர்தலில் போட்டியிடும் தன் எண்ணத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார். 

வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை, புதிய சிந்தனை, புதுமையான தேர்தல் பிரச்சார வியூகம் இவற்றின் மூலம், தன்னுடையது மற்ற அரசியல் கட்சிகள் செல்லும் வழக்கமான பாதையல்ல என்பதை ப்ரியங்காவின் அணுகுமுறை காட்டுகிறது. தேர்தல் முடிவுகள் என்னவாக இருந்தாலும், ப்ரியங்காவின் உத்தரப்பிரதேசப் பரிசோதனை, வருங்கால அரசியல் சொல்லாடல்களை மாற்றும் முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும்.

- லக்ஷ்மி ராமச்சந்திரன்,

பொதுச் செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழே படிக்காத கல்வி அமைச்சர் மகன்..! ”இதுதான் உங்க மொழிப்பற்றா?” பொளக்கும் எதிர்க்கட்சிகள்!
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
மோடியின் விமானத்திற்கு தொழில்நுட்ப கோளாறு.. பதறிய பாதுகாப்பு அதிகாரிகள்.. பிரதமருக்கு என்னாச்சு?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
TAHDCO Loan: 100 கோடி டார்கெட்.. கம்மி வட்டியில் கடன்.. பயனாளிகள் யார்?
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Durai Murugan: ”கொலை செய்ய வந்தாலும் மன்னிப்பேன்; ஆனால் இதை..” - கொதித்தெழுந்த அமைச்சர் துரைமுருகன்
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?
Karthigai 2024: பக்தர்களே! நாளை பிறக்கிறது முக்தி தரும் கார்த்திகை - இத்தனை விசேஷங்களா?
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
Embed widget