மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்களே.. யாருக்கு அமைச்சர் நீங்கள்.. இந்த நாட்டுக்கா ? பாஜக நிர்வாகிகளுக்கா ?
மாண்புமிகு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் அவர்களுக்கு வணக்கம்..
இந்திய திருநாட்டின் மக்கள் தொகை 140 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இத்தனை கோடி மக்களை நிர்வாகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள இந்த நாட்டின் அமைச்சரவையில் 77 பேர் அமைச்சர்களாக பதவி வகித்து வருகின்றனர். தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் பொறுப்பில் இருக்கும் திரு.முருகன் அவர்களே நீங்கள் 76 -வது இடத்தில் இருக்கின்றீர்கள்..
2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி அமைச்சராக நீங்கள் பதவியேற்றுக்கொண்டபோது எடுத்துக்கொண்ட உறுதிமொழியை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். “இந்த நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு உட்பட்டு அச்சமும்,விருப்பு வெறுப்பை விலக்கி பலதரப்பட்ட மக்களுக்கும் நேர்மையானதை செய்வேன்.யாருக்கும் ஆதரவாகவோ ஒரு சார்பாகவோ,சட்டத்திற்கு புறம்பாகவோ செயல்படமாட்டேன்.என் கவனத்திற்கு வரும் எந்தவொரு விஷயத்தையும் எந்த ஒரு மனிதனுடனும் அல்லது மனிதர்களுடனும் நேரடியாகவோ,மறைமுகவோ தொடர்புகொள்ளவோ வெளிப்படுத்தவோ மாட்டேன்”
என கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொண்டீர்கள்.
இதை உங்களுக்கு ஞாபகப்படுத்தவேண்டிய நிலைக்கு என்னை தள்ளிவிட்டீர்கள்.அதனால் உங்களது உறுதிமொழியை உங்களுக்கே கூறவேண்டியதாகிவிட்டது.
சரி,விஷயத்திற்கு வருகிறேன்..தமிழகத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்துகிறது.அதில் பங்கெடுத்த இரண்டு குழந்தைகள் நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவையாக நடித்து காட்டுகின்றனர்.15-01-21 ம் தேதி ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.
குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சி பிரதமர் மோதியின் மாண்பை குறைப்பது போன்று உள்ளதெனக்கூறி தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியினர் மத்தியில் அந்த வீடியோ காட்சிகள் கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது.ஒரு அரசியல் கட்சியாக அதன் நிர்வாகிகள் கோபப்பட்டது நியாயமும் கூட. ஆனால் ஒரு அமைச்சராக நீங்களே நேரடியாக அதைக்குறித்து மாநிலத்தலைவர் அண்ணாமலையிடம் விசாரித்து,உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென கூறினீர்கள் அல்லவா ! அது தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இதுவரை இந்தியாவில், தொலைக்காட்சி நிகழ்ச்சி சார்ந்த பிரச்சனை அதுவும் அது அரசியலாக மாறும் தருணத்தில்,சம்பந்தப்பட்ட துறையில் எந்தவொரு புகாரும் பதிவு செய்யப்படுவதற்கு முன் இப்படி எல்லாம் வெளிப்படையாக நடவடிக்கை பாயும் என்று எந்த அமைச்சரும் உறுதியளித்தது இல்லை. எத்தனையோ பேர் இதற்கு முன்பாக Ministry of Information and Broadcasting அமைச்சராக இருந்துள்ளனர்.
ஆனால் ஒருவரும் இப்படி செய்தது இல்லை.இந்த நாட்டில் இப்படியொரு வினோதம் இதுவரை நடந்ததில்லை Cable Television Networks Act, 1995 "Rule 6 1(d) -யின் படி ஆபாசமான,அரைகுறை உண்மைகளோடு, அவதூறு செய்யும் நோக்கத்தில்,வேண்டுமென்றே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டால் நடவடிக்கை எடுப்பதற்காக,2018-ம் ஆண்டு, மத்திய அரசால் inter-ministerial committee அமைக்கப்பட்டது.அதன்படியே Electronic Media Monitoring Centre செயல்பட்டுவருகிறது.
உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை, சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்,சட்டத்துறை, நுகர்வோர் நலன் மற்றும் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தை உள்ளடக்கிய inter-ministerial committee தன்னிச்சையாக கூட எதையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இயலும்..
பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் குறித்து புகார் தெரிவிக்க Indian Broadcasting Foundation அமைப்பு இருக்கிறது. அதில் Broadcasting Content Complaints Council செயல்படுகிறது. ஏதேனும் புகாரோ,ஆட்சேபனையோ இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் Indian Broadcasting Foundation -ல் புகார் தெரிவிப்பது தான் வழக்கம்..நடைமுறையில் இருப்பதுவும் அதுவே. ஆனால்,தமிழக பாஜக-வினர் Indian Broadcasting Foundation -ல் எந்த புகாரும் இப்போது வரை கொடுக்கவில்லை.
மாறாக,,தமிழக பிஜேபியின் ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல்குமார் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பு அதிகாரிக்கு ஜனவரி 17-ம் தேதி காலை 8.40 மணிக்கு புகார்மனுவை அனுப்புகிறார்.அந்த மனுவின் இணைப்பை அமைச்சரான உங்களுக்கும்,மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கும் அனுப்பி இருப்பதாக அந்த மனுவிலேயே குறிப்பிட்டுள்ளார்.
அதாவது,ஜனவரி 16-ம் தேதி இரவு 8.55 மணிக்கு தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையிடம் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென நீங்கள் உறுதியளித்த 12 மணிநேரத்திற்கு பிறகு புகார்மனு அனுப்பப்படுகிறது.
அன்று மாலையே அதாவது புகார் மனு அனுப்பட்ட 17-ம் தேதி மாலை 6 மணிக்கு சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிக்கு விளக்கம் கேட்டு Ministry of Information and Broadcasting சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
யாருக்கும் ஆதரவாகவோ ஒரு சார்பாகவோ,சட்டத்திற்கு புறம்பாகவோ செயல்படமாட்டேன் என்று நீங்கள் எடுத்திருக்கும் உறுதிமொழிக்கு எதிரானதாக உங்களுக்கு இது தோன்றவில்லையா
மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.முருகன் அவர்களே ?
"என் கவனத்திற்கு வரும் எந்தவொரு விஷயத்தையும் எந்த ஒரு மனிதனுடனும் அல்லது மனிதர்களுடனும் நேரடியாகவோ,மறைமுகவோ தொடர்புகொள்ளவோ வெளிப்படுத்தவோ மாட்டேன்" என்ற வாக்குறுதிகளை மீறி, புகாரே பெறப்படாத ஒரு பிரச்சனை குறித்து ஒரு தினத்திற்கு முன்பாகவே நடவடிக்கை எடுக்கப்படுமென பிஜேபியின் மாநிலத்தலைவரிடம் உறுதி கொடுத்துள்ளீர்களே சட்டப்படி இது சரியான செயலா ? நியாயமா என்று யோசித்து பாருங்கள் ?சரி...அந்த குழந்தைகள் நிகழ்ச்சியில் பேசியதில் என்ன தவறென்று நினைக்கிறீர்கள் ?
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கருப்பு பணத்தை மீட்டுவிட்டதா மத்திய அரசு? புழக்கத்தில் இருந்த 99.31% பணம் திரும்ப வந்துவிட்டதை ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தி விட்டதை மறந்துவிட்டீர்களா? வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப்பணத்தை மீட்டு வருவோம் என்று கூறினார்களே இதுவரை ஒரே ஒரு ரூபாய் மீட்கப்பட்டுள்ளதா ? நீங்களே சொல்லுங்கள் !லாபத்தில் இருக்கும் நிறுவனங்கள் விற்கப்படுவதாக குழந்தைகள் நடித்திருந்தது உண்மைக்கு மாறான தகவலா என்ன? இந்தியா டுடே-வின் SO SORRY கார்ட்டூன் வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். உலக அளவில் அரசியல் தலைவர்களை பகடி/நையாண்டி செய்வது தொலைக்காட்சிகளில் நடைமுறையில் இருக்கும் ஒன்று தானே..
தமிழகத்தில், முதலமைச்சர் முக ஸ்டாலினை மற்றும் பல அரசியல் தலைவர்களை எத்தனையோ Youtube பதிவர்கள் எவ்வளவோ நக்கல் நையாண்டி செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
உண்மைகள் அவதூறாக தெரிகிறதென்றால் !
அது யாருடைய தவறு ?
சரி ஒரு வாதத்திற்கு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் அந்த குழந்தைகள் உண்மைக்கு மாறாக உள்நோக்கத்தோடு நடிக்க வைக்கப்பட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம்..
சட்டப்படி தானே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சாதாரண நிகழ்ச்சிக்கு இந்த நாட்டின் அமைச்சரான நீங்களே இறங்கிவருவது ஒருதலைப்பட்சமான நடவடிக்கை இல்லையா திரு.முருகன் அவர்களே !
2020-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி திருச்சியில் பாலக்கரை மண்டல செயலாளர் விஜயரகு என்பவர் வெட்டிக்கொலை செய்யப்படுகிறார். இறந்தவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் அப்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் பொறுப்பில் இருந்த நீங்கள் இறந்தவரின் வீட்டிற்கு சென்றீர்கள்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நீங்கள் விஜயரகுவின் கொலைக்கான காரணம் லவ் ஜிகாத் என கொஞ்சம் கூட ஆதாரமே இல்லாமல் ஒரு குற்றச்சாட்டை கூறினீர்கள்.
உங்களின் குற்றச்சாட்டை தமிழக காவல்துறை முழுமையாக மறுத்தது. ஆனாலும் தமிழக பாஜகவின் அரசியலுக்கு உதவும் என்ற காரணத்தால் தான் நீங்கள் அப்படி கூறினீர்கள் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். அதை இப்போது ஞாபகப்படுத்துவதற்கு காரணம்... வேறொன்றுமில்லை...
தமிழக பிஜேபியின் அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அமைச்சர் பொறுப்பில் இருக்கும் நீங்களே தானாக முன்வந்து உதவி செய்வது நளினமான செயலா என்பதை யோசித்து பாருங்கள் திரு.முருகன் அவர்களே! நீங்கள் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சராக பதவியேற்ற சில வாரங்களில் மீடியாக்களை 6 மாதத்தில் கட்டுப்படுத்திவிடலாம்.சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் நம்ம முருகன் ஜி தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். திரு.அண்ணாமலை கூறியதைப்போல நீங்கள் ஒருநாளும் செயல்படமாட்டீர்கள் என்று நூறு சதவிகிதம் நம்புகிறேன். இந்த நாட்டின் குடிமகனின் அடிப்படை ஜீவாதார உரிமைகளில் ஒன்று கருத்துரிமை. அதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும்
அமைச்சர் பொறுப்பில் இருக்கக்கூடிய உங்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் இருக்கிறது.
Ministry of Information and Broadcasting சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிக்கு அனுப்பியுள்ள நோட்டீஸிற்கு அவர்கள் பதில் தரலாம். அல்லது சட்டப்படி அந்த விவகாரத்தை அணுகலாம். ஆனால்,யாரையோ திருப்திப்படுத்த,யாரையோ சமாதானப்படுத்த ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகத்துறையின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய முக்கிய பொறுப்பில் இருக்கும் நீங்களே அதை அச்சுறுத்த முயலாதீர்கள்...
அது சட்டப்படியும் சரியல்ல..
நீங்கள் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல...
- B.R.அரவிந்தாக்ஷன், ஊடகவியலாளர்
(இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்களாகும். Abpநாடு-இன் கருத்துக்களாகாது - ஆசிரியர்)