May 2025 Car Launches: புதுசா கார் வாங்க திட்டமா? மே மாதம் களமிறங்கும் விதவிதமான மாடல்கள் - EV, கியா டூ டாடா
Upcoming Cars May 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மே மாதத்தில் அறிமுகமாக உள்ள புதிய கார்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

May Car Launch: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மே மாதத்தில் BYD, BMW என பல்வேறு நிறுவனங்களின் கார் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
மே மாதத்தில் அறிமுகமாக உள்ள கார்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தை கடந்த ஏப்ரல் மாதத்தில் புதியதாக பெரிய அறிமுகங்கள் எதுவும் இல்லாமல், அமைதியாக போன நிலையில் மே மாதத்தில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. மிகவும் பிரபலமான எம்பிவி கார் மாடலும் இதில் அடங்கும். அதோடு, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மின்சார கார் மாடலில் முக்கிய அப்டேட் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மே மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாகும் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சந்தைக்கு வரும் புதிய கார்கள்:
1. கியா கிளாவிஸ்:
கியா நிறுவனத்தின் புதிய கிளாவிஸ் கார் மாடல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வரும் 8ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து ஜுன் மாதம் முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலை சுமார் 11 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். தற்போதுள்ள காரென் மாடலிலிருந்து வேறுபடுத்த, கிளாவிஸ் மாடலின் உட்புறம், வெளிப்புறம் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் சைரோஸ் மாடலில் உள்ள 12.3 இன்ச் ஸ்க்ரீன், பனோரமிக் சன்ரூஃப், வெண்டிலேடட் சீட்ஸ் மற்றும் லெவல் 2 ADAS போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. அதேநேரம், இன்ஜினில் பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் காரெனில் உள்ள அதே 1.5 லிட்டர்/பெட்ரோல்/டர்போ பெட்ரோல் இன்ஜின் தொடரும் என கூறப்படுகிறது.
2. டாடா ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட்
டாடா ஆல்ட்ரோஸின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் 21ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் விலை ரூ.6.75 லட்சம் முதல் தொடங்கும் என கூறப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது முதலே ஆல்ட்ரோஸில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது தான் முதல்முறையாக முழு ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் வழங்கப்படுகிறது. வெளிப்புற தோற்றத்தில் சிறிய மாற்றங்கள் மட்டுமின்றி, உட்புறத்தில் புதிய கலர் தீம், சில தொழில்நுட்ப அம்சங்களின் மேம்பாடும் வழங்கப்படலாம். இன்ஜின் ஆப்ஷன்களில் மாற்றமின்றி NA பெட்ரோல், டர்போ-பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் அப்படியே தொடரும் என கூறப்படுகிறது.
3. MG Windsor EV
எம்ஜி நிறுவத்தின் மேம்படுத்தப்பட்ட விண்ட்சர் மின்சார கார் மாடல் மே மாதம் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இதன் விலை ரூ.11.5 லட்சம் முதல் ரூ.15.5 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். 50.6 kWh பேட்டரி மூலம் லாங் ரேஞ்ச் வேரியண்டாக இது இருக்கும் என கூறப்படுகிறது. தற்போதுள்ள மாடல் 38 kWh பேட்டரி மூலம், முழுமையாக சார்ஜ் செய்தால் 332 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவது குறிப்பிடத்தக்கது. இதனை காட்டிலும் மேம்படுத்தப்பட்ட பேட்டரி பேக் மட்டுமின்றி, சில தொழில்நுட்ப மேம்படுத்தல்களும் புதிய காரில் இடம்பெறலாம்.
4. ஃபோல்க்ஸ்வோகன் கால்ஃப் GTI
ஃபோல்க்ஸ்வோகன் கால்ஃப் GTI கார் மாடலின் அறிமுக தேதி வெளியாகாவிட்டாலும், மே மாதத்தில் இந்திய சந்தையில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விலை ரூ.52 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம். எர்ஸ்வைல் போலோ மாடலுக்கு பிறகு இந்தியாவிற்கு வரும் இரண்டாவது GTI எடிஷன் இதுவாகும். இதில் இடம்பெற்றுள்ள 2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 265 PS and 370 Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதர கார் மாடல்கள்:
இதுபோக சில கார்களின் வெளியீடு உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், மெர்சிடிஸ் பென்ஸ் , ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார் தயாரிப்பாளர்களிடமிருந்து சில சாத்தியமான கார் மாடல்களின் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம். இந்த கார் தயாரிப்பாளர்கள் எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்றாலும், கோடை காலத்தை கருத்தில் கொண்டு புதிய கார்கள் பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என கூறப்படுகிறது.





















