TOP 10 SUVs May: என்ன இருக்கு இந்த காரில்? மே மாதத்தில் வாங்கி குவிக்கப்பட்ட எஸ்யுவிகள் - டான்ஸ் ஆடும் டாடா
TOP 10 SUVs May 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த மே மாதத்தில் விற்பனையில் அசத்திய எஸ்யுவிகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

TOP 10 SUVs May 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த மே மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களில் பிரேஸ்ஸா மற்றும் கிரேட்ட முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.
மே மாதத்தில் எஸ்யுவி விற்பனை:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவி பிரிவு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதற்கு உதாரணமாக கடந்த மாதத்தில் எஸ்யுவி பிரிவு விற்பனையில் பெரும்பாலான மாடல்கள் கடந்த ஆண்டு விற்பனையை காட்டிலும் சீரிய உயர்வை சந்தித்துள்ளன. இந்த பட்டியலில் மாருதியின் பிரேஸ்ஸா கார் மாடல் விற்பனை 15 ஆயிரத்து 500 யூனிட்களை கடந்து, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 10 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஹுண்டாய் கிரேட்டா கார் மாடலானது உள்நாட்டு சந்தையில் 14 ஆயிரத்து 860 யூனிட்கள் விற்பனையை எட்டியுள்ளது. மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் கடும் போட்டி இருந்தபோதிலும், அதனை சமாளித்து ஒரு சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதேநேரம், இந்த காரின் பிரதான போட்டியாளர்களில் ஒன்றான, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்து 14 ஆயிரத்து 400 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.
டான்ஸ் ஆடும் டாடா:
மாருதியின் மற்றொரு மாடலான ஃப்ரான்க்ஸ் கார் மாடல், 7 சதவிகித வளர்ச்சியுடன் 13 ஆயிரத்து 584 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் மாடலின் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. அதன்படி, 30 சதவிகித விற்பனை சரிந்து 13 ஆயிரத்து 133 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. அதேநேரம், அந்நிறுவனத்தின் நெக்சான் 14 சதவிகித வளர்ச்சியை கண்டு 13 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. மஹிந்திராவின் ஆஃப் ரோட் எஸ்யுவி ஆன தார் மாடல், கடந்த ஆண்டை காட்டிலும் 81 சதவிகிதம் அதிகரித்து 10 ஆயிரத்து 389 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.
மே மாத கார் விற்பனை - டாப் 10
| கார் மாடல் | மே 2025 விற்பனை | மே 2024 விற்பனை |
| மாருதி சுசூகி பிரேஸ்ஸா (10%) | 15,566 | 14186 |
| ஹுண்டாய் கிரேட்டா (1%) | 14,860 | 14662 |
| மஹிந்திரா ஸ்கார்ப்பியோ (5%) | 14,401 | 13717 |
| மாருதி சுசூகி ஃப்ரான்க்ஸ் (7%) | 13,584 | 12681 |
| டாடா பஞ்ச் (-31%) | 13,133 | 18949 |
| டாடா நெக்ஸான் (14 %) | 13,096 | 11457 |
| மஹிந்திரா தார் (81%) | 10,389 | 5750 |
| கியா சோனெட் (8%) | 8,054 | 7433 |
| மஹிந்திரா XUV 3XO (-20%) | 7,952 | 10000 |
| டொயோட்டா ஹைரைடர் (94%) | 7,573 | 3906 |
பிரேஸ்ஸா ஆதிக்கம் செலுத்துவது எப்படி?
மாருதி சுசூகியின் பிரேஸ்ஸா கார் மாடல் பல்வேறு காரணங்களால் இந்திய சந்தையில் காம்பேக்ட் எஸ்யுவி செக்மெண்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதற்கு மலிவு விலை, மாருதியின் வலுவான பிராண்டிம் மீதான நம்பகத்தன்மை, நடைமுறைக்கு உகந்த வடிவமைப்பு மற்றும் பராமரிப்பு செலவு குறைவு காரணமாக வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படுகிறது. இந்தியாவில் நீண்ட காலமாக சந்தையில் உள்ள காம்பேக்ட் எஸ்யுவி ஆன பிரேஸ்ஸா, அட்டகாசமான ஸ்டைல் மற்றும் அம்சங்களின் கலவையாக உள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்:
பாதுகாப்பு அம்சங்களிலும் பிரேஸ்ஸா கார் மாடல் கவனம் ஈர்க்கிறது. அதன்படி, 6 ஏர் பேக்குகள், EBS உடன் கூடிய ABS, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்ஸ், 360 டிகிரி கேமரா ஆகியவை ஸ்டேண்டர்ட் அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன. டாப் எண்ட் வேரியண்டில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ரியர் வியூ கேமரா போன்ற அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
விலை, மைலேஜ்:
பிரேஸ்ஸாவின் விலை (ஆன் - ரோட்) சென்னையில் ரூ.8.69 லட்சத்தில் தொடங்கி ரூ.14.14 லட்சம் வரை நீள்கிறது. சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களில் மொத்தம் 14 வேரியண்ட்களில் இந்த கார் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு 19.8 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. அதேநேரம், சிஎன்ஜி எடிஷனானது ஒரு கிலோவிற்கு 25.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் விரும்புவது ஏன்?
விசாலமான மற்றும் இடவசதி மிகுந்த 5 சீட்டர் கார் மாடலாக இருப்பதோடு, அம்சங்கள் நிறைந்த நடைமுறைக்கு உகந்த, எரிபொருள் திறன் மிகுந்த ஆப்ஷனாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் இந்த காரை அதிகம் விரும்புகின்றனர். ரியர் ஏசி வெண்ட்கள், USB C சார்ஜிங் போன்ற வசதிகள் மிகவும் அம்சங்கள் நிறைந்த வாகனமாக இதை மாற்றுகிறது. சிஎன்ஜி ஆப்ஷனும் இருப்பதால், எரிபொருள் செலவை கவனத்தில் கொள்பவர்களுக்கு பிரதான தேர்வாக பிரேஸ்ஸா கார் மாடல் விளங்குகிறது.





















