TN weather Report: ”மோன்தா” புயல், சென்னை, காஞ்சி, திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட், மிக கனமழை - வானிலை அறிக்கை
TN weather Montha Cyclone Update: மோன்தா புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் இன்று சென்னை உட்பட4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

TN weather Montha Cyclone Update: வங்கக் கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் சென்னையில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
மிரட்டும் ”மோன்தா” புயல்
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, வங்கக் கடலில் நிவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மோன்தா புயலாக உருவெடுத்துள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது மையம் கொண்டுள்ள புயல், மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறதாம். இது, தொடர்ந்து வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிரப்புயலாக 28-ஆம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ரெட் அலெர்ட்
புயலின் தாக்கமாக இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அடுத்த மூன்று நாட்களுக்கான வானிலை:
28-10-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
29-10-2025 முதல் 01-11-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு:
சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னதுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
27-10-2025 முதல் 30-10-2025 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.





















