Tata Motors: வீணாய் போன க்ரேட்டா சம்பவம், பீஸ்ட் மோடில் நெக்ஸான், மஹிந்த்ராவிற்கு டாட்டா சொன்ன டாடா
Tata Motors Car Sale: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செப்டம்பர் மாத கார் விற்பனையில், ஹுண்டாய் மற்றும் மஹிந்த்ராவை பின்னுக்கு தள்ளி டாடா நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

Tata Motors Car Sale: இந்திய ஆட்டோமொபைல் இதுவரை இருந்த அனைத்து சாதனைகளையும், டாடா நெக்ஸானின் விற்பனை செப்டம்பர் மாதத்தில் முறியடித்துள்ளது.
விற்பனையில் 2வது இடம் பிடித்த டாடா மோட்டார்ஸ்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செப்டம்பர் மாத வாகன விற்பனையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மஹிந்த்ரா மற்றும் ஹுண்டாய் ஆகிய நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி டாடா நிறுவனம் இந்த சாதனையை படைத்துள்ளது. வெளியாகியுள்ள தரவுகளின்படி, கடந்த மாதத்தில் 59 ஆயிரத்து 667 கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 41 ஆயிரத்து 63 யூனிட் விற்பனையை காட்டிலும், 45 சதவிகிதம் அதிகம் ஆகும். நிறுவனத்தின் ஏற்றுமதி அளவு குறைவாக இருந்தாலும், உள்நாட்டில் வலுவான விற்பனையை பதிவு செய்துள்ளது. கடந்தமார்ச் மாதத்திற்கு பிறகு மாத விற்பனையில் இரண்டாவது இடத்தை பிடிப்பது டாடா நிறுவனத்திற்கு இதுவே முதல்முறையாகும்.
தடுமாறிய ஹுண்டாய் & மஹிந்த்ரா
இதனிடையே டாடா நிறுவனத்திற்கு கடும் போட்டியாளர்களாக திகழும் மஹிந்த்ரா மற்றும் ஹுண்டாய் நிறுவனங்கள் செப்டம்பர் மாதத்தில் முறையே மூன்று மற்றும் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. காரணம் கடந்த மாதத்தில் மஹிந்த்ரா நிறுவனம் சார்பில் உள்நாட்டில் 56 ஆயிரத்து 223 யூனிட்களும், ஹுண்டாய் நிறுவனம் சார்பில் 51 ஆயிரத்து 547 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. அதேநேரம், இந்த நிறுவனங்கள் முறையே 2 ஆயிரத்து 481 யூனிட்கள் மற்றும் 18 ஆயிரத்து 800 யூனிட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன. ஆனால், டாடா நிறுவனம் வெறும் ஆயிரத்து 240 யூனிட்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. நிறுவனத்திற்கான எண்ணிக்கை அளவு குறைவாக இருந்தாலும், சதவிகிதம் என்பது நல்ல வளர்ச்சியாக பதிவாகியுள்ளது.
விற்பனையில் க்ரேட்டா செய்த சம்பவம்:
ஹுண்டாய் நிறுவனம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விற்பனையை சேர்த்து, கடந்த செப்டம்பரில் 70 ஆயிரத்து 347 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 64 ஆயிரத்து 201 யூனிட்களை காட்டிலும், 10 சதவிகிதம் அதிகமாகும். இதில் உள்நாட்டில் பதிவான 51 ஆயிரத்து 547 யூனிட்கள் விற்பனையில், நிறுவன வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு எஸ்யுவிக்களின் பங்களிப்பு பதிவாகியுள்ளது. குறிப்பாக ஹுண்டாயின் ஆகச்சிறந்த எஸ்யுவி ஆன, க்ரேட்டா இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக கடந்த செப்டம்பரில் மட்டும் 18 ஆயிரத்து 861 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. அதேநேரம், வென்யு காரில் கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவிற்கு 11 ஆயிரத்து 184 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. சந்தையில் வலுவான நிலையில் இருந்து, செப்டம்பர் மாத விற்பனையில் ஹுண்டாய் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் டாடா நெக்ஸான் ஆகும்.
பீஸ்ட் மோடில் டாடா நெக்ஸான்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எந்தவொரு காரும் மாத விற்பனையில் இதுவரை பதிவு செய்திடாத, மிகப்பெரிய விற்பனையை நெக்ஸான் பதிவு செய்துள்ளது. அதன்படி, இந்த கார் மாடலில் இருந்து மட்டும் கடந்த செப்டம்பரில் 22 ஆயிரத்து 500-க்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் தான், புதிய வண்ண விருப்பங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் நெக்ஸான் லைன் - அப்பை டாடா நிறுவனம் மேம்படுத்தியது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக ஜிஎஸ்டி திருத்தத்தின் மூலம் ரூ.1.55 லட்சம் வரை விலையும் குறைந்தது, நெக்ஸான் கார் விற்பனையை அதிகளவில் ஊக்கப்படுத்தியுள்ளது. இதுபோக, மாடர்ன் டிசைன் மற்றும் அம்சங்கள் நிறைந்த கேபினை கொண்ட பஞ்ச், நிறுவனத்தின் முதன்மையான கார் மாடல்களான ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகியவையும் விற்பனையில் அசத்தி வருகின்றன.






















