Tata Motors: அட்ரா சக்க..! ப்ரீமியம் கார்களிலும் CNG & ஹைப்ரிட் வேரியண்ட்கள் - டாடாவின் புதிய ப்ளான், ஹாரியர் & சஃபாரி
Tata Motors CNG Hybrid: ப்ரீமியம் கார்களிலும் சிஎன்ஜி மற்றும் ஹைப்ரிட் பவர்ட்ரெயின்களை அறிமுகப்படுத்த, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

Tata Motors CNG Hybrid: பவர்ட்ரெயின் ஆப்ஷன்களை விரிவுபடுத்துவதன் மூலம், விற்பனையை அதிகரிக்க முடியும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நம்புகிறதாம்.
டாடா மோட்டர்ஸின் புதிய ப்ளான்:
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், தனது போர்ட்ஃபோலியோவை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் நோக்கில், மின்சார கார்களை மட்டுமின்றி வேறு சில வாய்ப்புகளையும் நாட தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தனது சிஎன்ஜி எரிபொருள் தேர்வை ப்ரீமியம் கார்களுக்கும் விரிவுபடுத்துவதோடு, அவற்றில் ஹைப்ரிட் ஆப்ஷனையும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த பரிசீலித்து வருகிறதாம். இந்த வகையில் கூடுதல் பவர்ட்ரெயின் ஆப்ஷன்களை வழங்குவதன் மூலம், ப்ராண்டின் விற்பனையையும் உயர்த்த முடியும் என நம்புகிறதாம்.
சிஎன்ஜி ஆப்ஷனை விரிவுபடுத்தும் திட்டம்:
ப்ராண்ட் தரப்பில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் அனைத்து சப்-4 மீட்டர் கார்களிலும் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதில் டியாகோ, டைகோர், பன்ச் மற்றும் நெக்சான் ஆகியவை அடங்கும். ப்ராண்டின் ஒட்டுமொத்த விற்பனையில் சிஎன்ஜி கார்களின் பங்களிப்பு கணிசமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2022 நிதியாண்டில் 3 சதவிகிதமாக இருந்த ப்ராண்டின் சிஎன்ஜி கார்களின் விற்பனை 2023 நிதியாண்டில் 8 சதவிகிதமாக உயர்ந்தது. அதுவே 2024 நிதியாண்டில் 16 சதவிகிதமாக அதிகரித்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் சிஎன்ஜி கார்கள் 21 சதவிகிதம் பங்களிப்பை பெற்றுள்ளன.

ப்ரீமியம் கார்களில் சிஎன்ஜி
சிஎன்ஜி பிரிவில் பெற்று வரும் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் விதமாக தனது பெரிய கார்களிலும் அந்த எரிபொருள் ஆப்ஷனை கொண்டு வர டாடா திட்டமிட்டு வருகிறது. இதில் கர்வ் மற்றும் சியாரா கார்களும் அடங்கும். சந்தையில் ஏற்கனவே 4.3 மீட்டர் செக்மெண்டில் மாருதியின் விக்டோரிஸ் மற்றும் க்ராண்ட் விட்டாரா மாடல்கள் சிஎன்ஜி வேரியண்டை கொண்டுள்ளன. அவற்றிற்கு டாடாவின் சியாரா சிஎன்ஜி வேரியண்ட் நேரடி போட்டியாளராக இருக்கக் கூடும்.

பெரிய கார்களில் ஹைப்ரிட் ஆப்ஷன்:
இன்ஜின் அடிப்படையிலான மற்றும் மின்சார கார்களுக்கு இடையேயான பாலமாக, டாடா ப்ராண்டின் முதன்மையான கார்களான ஹாரியர் மற்றும் சஃபாரியில் ஹைப்ரிட் பவர் ட்ரெயின் ஆப்ஷனை கொண்டு வர பரிசீலனை நடைபெற்று வருகிறதாம். சியாராவையும் இந்த பட்டியலில் இணைக்க ஆலோசிக்கப்படுகிறதாம். சந்தையில் ஏற்படும் தேவைகளை பூர்த்தி செய்ய நிறுவனம் தொழில்நுட்ப ரீதியாக தயாராக இருப்பதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்களான ரெனால்ட், நிசான், ஹுண்டாய், கியா மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனக்கள் இந்த எஸ்யுவி பிரிவில் ஹைப்ரிட் ஆப்ஷனை கொண்டு வர ஏற்கனவே தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன்:
டாடா நிறுவனத்தின் முற்றிலும் புதிய சியாரா கார் மாடல் வரும் நவம்பர் 25ம் தேதி சந்தைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ப்ராண்டின் புதிய 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது, நேட்சுரலி ஆஸ்பிரேடட் மற்றும் டர்போ சார்ஜ்ட் வெர்ஷன்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதே டர்போசார்ஜ்ட் வெர்ஷன் தான் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்பட உள்ள ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களின் பெட்ரோல் எடிஷன்களிலும் இடம்பெற உள்ளதாம். இந்த புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அடிப்படையில் தான், டாடா நிறுவனம் தனது ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை கட்டமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய உமிழ்வு விதிகள்
சிஎன்ஜி விரிவாக்கம் மற்றும் புதிய ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது, வரும் 2027ம் ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ள புதிய உமிழ்வு விதிகளை கருத்தில் கொண்டு, டாடா நிறுவனம் எடுத்த முடிவாக கருதப்படுகிறது. புதிய கடுமையான உமிழ்வு விதிகளால் தங்களது விற்பனை பாதிக்கப்படாமல் இருக்க, இந்த கூடுதல் பவர்ட்ரெயின் விருப்பங்களை டாடா தேர்வு செய்துள்ளது. 2025 நிதியாண்டில், CNG மற்றும் ஹைப்ரிட் வாகனப் பிரிவுகள் முறையே 35% மற்றும் 15.40% வளர்ச்சியை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





















