ROYAL ENFIELD: ராயல் என்ஃபீல்ட் சூப்பர் மீட்டியார் 650 பைக்.. வெளியீட்டு தேதி எப்போ தெரியுமா?
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் சூப்பர் மீட்டியர் 650 (Super Meteor 650) பைக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ள தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த ராயல் என்ஃபீல்ட் சூப்பர் மீட்டியர் 650 மாடல் வாகனம், அண்மையில் இத்தாலியில் நடைபெற்ற EICMA 2022 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. பின்பு, கடந்த மாதம் கோவாவில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் சார்பில் நடைபெற்ற 2022 ரைடர் மேனியா நிகழ்ச்சி மூலம் சூப்பர் மீட்டியர் 650 ரக வாகனம் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மட்டும், சூப்பர் மீட்டியர் 650 வாகனத்திற்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டு, அதற்கான கட்டணமாக ரூ.10,000 வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், சூப்பர் மீட்டியர் 650 வாகனம் வரும் ஜனவரி 10ம் தேதி, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் மீட்டியார் 650 வடிவமைப்பு:
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் 650cc இன்ஜினின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை வாகனம்தான் சூப்பர் மீட்டியார் 650. இதன் சேசிஸ் போன்றவற்றில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், USD போர்க், முழுமையாக எல்இடி முகப்பு விளக்கு, டிரிப்பர் நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்களை கொண்ட முதல் ராயல் என்ஃபீல்ட் வாகனம் எனும் பெருமையையும் இது பெற்றுள்ளது. தொடக்கத்தில் செலஸ்டியல் ரெட் மற்றும் செலஸ்டியல் ப்ளூ எனும் இரண்டு நிறங்களில் சூப்பர் மீட்டியர் 650 பைக் விற்பனைக்கு வர உள்ளது. 241 கிலோ எடை கொண்டதன் மூலம், அதிக எடைகொண்ட ராயல் என்பீல்ட் வாகனம் இதுதான் என கருதப்படுகிறது.
சூப்பர் மீட்டியார் 650 சிறப்பம்சங்கள்:
இதில் உள்ள 648cc பாரலல்லெல் டிவின் இன்ஜின் காரணமாக, 47 குதிரைத்திறனும், 52 Nm இழுவிசை சக்தியையும் சூப்பர் மீடியர் 650 பைக் பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் 15.7 லிட்டர் எரிபொருளை நிரப்ப முடியும் எனவும், லிட்டருக்கு 25 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும்போது இதன் விலை ரூ.3.5 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.