Skoda Kylaq: கைலாக்கில் சர்ப்ரைஸ் அப்டேட்கள்..! புதிய வேரியண்ட்கள், கம்மி விலை, ப்ரீமியம் அம்சங்கள் - காம்பேக்ட் SUV
Skoda Kylaq New Variants: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கைலாக் கார் மாடலுக்கான புதிய வேரியண்ட்களை ஸ்கோடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Skoda Kylaq New Variants: கைலாக் கார் மாடலில் க்ளாசிக்+ மற்றும் சிக்னேட்சர்+ எனும் இரண்டு புதிய வேரியண்ட்களை ஸ்கோடா நிறுவனம் சந்தைப்படுத்தியுள்ளது.
ஸ்கோடா குஷக்கை விடுங்க.. கைலாக்கை கவனிங்க
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடா நிறுவனம் தனது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட குஷக் மாடலை நேற்று அறிமுகப்படுத்தியது. அதேநேரம், ப்ராண்டின் தொடக்க நிலை காம்பேக்ட் எஸ்யுவி ஆன கைலாக் மாடலில் இரண்டு புதிய வேரியண்ட்களும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. புதிய எண்ட்ரி லெவல் வேரியண்ட் க்ளாசிக்+ எனவும், டாப் ஸ்பெக் ப்ரெஸ்டிஜ்+ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மிட்-ஸ்பெக் வேரியண்ட்களான சிக்னேட்சர் மற்றும் சிக்னேட்சர்+ தற்போது கூடுதல் அம்சங்களை கொண்டிருக்கும் எனவும், புதிய கைலாக் ஸ்போர்ட்லைன் வேரியண்ட் வரும் செப்டம்பர் மாதம் சந்தைப்படுத்தப்படும் என்றும் ஸ்கோடா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்கோடா கைலாக் - அப்டேடட் விலைபட்டியல்
ஸ்கோடா கைலாக் புதியதாக இணைக்கப்பட்ட 2 வேரியண்ட்களுடன் சேர்த்து தற்போது மொத்தம் 6 வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதில் அடிப்படை வேரியண்டை தவிர மற்ற அனைத்துமே மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.
| ஸ்கோடா கைலாக் வேரியண்ட் | மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் (ரூ.லட்சம்) | ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் (ரூ.லட்சம்) |
| க்ளாசிக் | 7.59 | - |
| க்ளாசிக் + (புதிய வேரியண்ட்) | 8.25 | 9.25 |
| சிக்னேட்சர் | 9.43 | 10.43 |
| சிக்னேட்சர்+ | 10.77 | 11.77 |
| ப்ரெஸ்டிஜ் | 11.75 | 12.75 |
| ப்ரெஸ்டிஜ்+ (புதிய வேரியண்ட்) | 11.99 | 12.99 |
ஸ்கோடா கைலாக் க்ளாசிக்+ வேரியண்டின் அம்சங்கள்:
அடிப்படை வேரியண்டான க்ளாசிக் உடன் ஒப்பிடும்போது அதைவிட சற்றே மேலே நிலைநிறுத்தப்பட்டுள்ள புதிய க்ளாசிக் + வேரியண்டில் கூடுதலாக, 16 இன்ச் அலாய் வீல்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோ - டிம்மிங் இன்சைட் ரியர் வியூ மானிட்டர், ஆட்டோமேடிக் வைப்பர்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஸ்டியரிங் மவுண்டட் கன்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. கைலாக் க்ளாசிக் மேனுவல் வேரியண்டின் ரூ.7.59 லட்சம் என்ற விலையை காட்டிலும், புதிய வேரியண்டின் மேனுவல் எடிஷனின் விலை ரூ.66 ஆயிரம் அதிகமாகும். அதேநேரம், கூடுதலாக இதில் ஆட்டோமேடிக் வேரியண்டும் வழங்கப்பட்டுள்ளது.115hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இதில் இடம்பெறுள்ளது. இதன் மூலம் கைலாக்கின் ஆட்டோமேடிக் எடிஷனை முன்பை காட்டிலும் ரூ.85 ஆயிரம் வரையிலான குறைந்த செலவிலேயே அணுகலாம்.

கைலாக் சிக்னேட்சர், சிக்னேட்சர்+ வேரியண்டின் அம்சங்கள்:
கைலாக்கின் மிட்-ஸ்பெக் வேரியண்ட்களான சிக்னேட்சர் மற்றும் சிக்னேட்சர்+ வேரியண்ட்கள் தற்போது கூடுதலாக சில புதிய அம்சங்களை டாப் ஸ்பெக் வேரியண்டான ப்ரெஸ்டீஜிலிருந்து கடனாக பெற்றுள்ளன. அதன்படி, சன்ரூஃப், ரியர் வைப்பர், ஆட்டோ வைப்பர்ஸ், ஆட்டோமெடிக் எடிஷன்களுக்கு பேடல் ஷிஃப்டர்ஸ் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிக்னேட்சர் வேரியண்டின் விலை வரம்பானது முந்தைய ரூ.9.1 - ரூ.10.1 லட்சத்திலிருந்து ரூ.9.43-ரூ.10.43 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேநேரம், சிக்னேட்சர்+வேரியண்டின் விலை வரம்பானது முந்தைய ரூ.10.44 - ரூ.11 44 லட்சத்தில் இருந்து ரூ.10.77 - ரூ.11.77 லட்சமாக அதிகரித்துள்ளது.

கைலாக் ஸ்போர்ட்லைன், ப்ரெஸ்டிஜ்+ வேரியண்ட்கள்:
கைலாக்கின் புதிய ப்ரெஸ்டிஜ் + வேரியண்டை மாறுபடுத்தி காட்டுவதற்காக, முந்தைய டாப் ஸ்பெக் வேரியண்டான ப்ரெஸ்டிஜிலிருந்து 6-வே பவர்ட் முன்புற இருக்கைகள் நீக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக காரின் விலையில் ரூ.24 ஆயிரம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், சில கூடுதல் அம்சங்கள் இணைக்கப்பட்டு இருந்தாலும், அதுபற்றிய தகவல்கள் ஏதும் இன்னும்வெளியாகவில்லை. ப்ரெஸ்டிஜ் + புதிய டாப் வேரியண்டாக இருந்தாலும், அதன் அதிகபட்ச விலை தற்போதும் ரூ.12.99 லட்சமாக தொடர்கிறது.






















