Budget Car: 5 லட்சத்துக்கே 7 சீட்டர்- யாரு பெஸ்ட்? அடித்து ஓட்டக்கூடிய வேன் Vs மாடர்ன் அம்சங்கள் கொண்ட கார்
Maruti Suzuki Eeco Vs Renault Triber: இந்திய சந்தையில் மலிவு விலையில் கிடைக்கக் கூடிய, ஈகோ மற்றும் ட்ரைபர் 7 சீட்டர் கார் மாடல்களில் எது சிறந்தது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Maruti Suzuki Eeco Vs Renault Triber: மாருதி சுசூகி ஈகோ மற்றும் ரெனால்ட் ட்ரைபர் கார் மாடல்களின் ஒப்பீடு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
மலிவு விலை 7 சீட்டர்
ஜிஎஸ்டி திருத்தத்தின் விளைவாக இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், பல கார்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இந்த சூழலானது குடும்பத்துடன் பயணிக்க ஏதுவான, பெரிய 7 சீட்டர் கார்களையும் குறைவான விலையில் சொந்தமாக்க வாய்ப்பை வழங்கியுள்ளது. கூடுதலாக பல கார்களின் மீது விழாக்கால சலுகைகளும் அள்ளி வீசப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய சந்தையில் வெறும் 5 லட்சத்துக்கே கிடைக்கக் கூடிய இரண்டு மலிவு விலை கார் மாடல்கள் குறித்தும், அதில் எது சிறந்தது என்பது குறித்தும் இந்த தொகுப்பில் அறியலாம்.
மாருதி ஈகோ Vs ரெனால்ட் ட்ரைபர்
புதிய விலை நிர்ணயத்தின்படி, மாருதி சுசூகி நிறுவனத்தின் ஈகோவின் தொடக்க விலை ரூ.5.21 லட்சத்தில் (எக்ஸ் - ஷோரூம்) தொடங்குகிறது. இதன் மூலம் நாட்டின் மலிவு விலை 7 சீட்டர் என்ற பெருமையை பெறுகிறது. அதேநேரம், ரெனால்ட் ட்ரைபர் கார் மாடலும், வெறும் ரூ.5.76 லட்சத்துகே (எக்ஸ் - ஷோரூம்) விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு கார்களுக்கும் இடையேயான விலை வித்தியாசம் என்பது வெறும் ரூ.55 ஆயிரம் மட்டுமே ஆகும்.
வேன் அடிப்படையிலான ஈகோ காரானது, மலிவு விலையில் நடைமுறைக்கு உகந்த பெரிய குடும்பங்களுக்கான பயன்பாட்டிற்கும், வணிக பயன்பாட்டிற்கும் ஏற்றதாகும். அதேநேரம், ட்ரைபர் காரானது, நவீன காலத்திற்கு ஏற்ப கூடுதல் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த சொகுசு பயணத்திற்கான வாகனமாகும்.
மாருதி ஈகோ Vs ரெனால்ட் ட்ரைபர் - அம்சங்கள் ஒப்பீடு
| அம்சங்கள் | மாருதி சுசூகி ஈகோ | ரெனால்ட் ட்ரைபர் |
| விலை | மிகவும்மலிவு விலை. அடிப்படை வேரியண்டின் விலை ட்ரைபரை காட்டிலும் குறைவு | கூடுதல் விலையாக இருந்தாலும், பணத்திற்கு நிகரான அம்சங்களை கொண்டுள்ளது |
| இருக்கை வசதி | 5 மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 7 சீட்டர் எடிஷன் பூட் ஸ்பேஸ் வசதியை இழக்கிறது | மாடுலர் சீட்டிங்குடன் கூடிய 7 சீட்டர். மூன்றாவது வரிசை இருக்கையை நீக்குவதன் மூலம் பூட்ஸ்பேஸை அதிகரிக்க முடியும் |
| இன்ஜின் | 1197cc, அதிக ஆற்றல் மற்றும் இழுவை திறன் கொண்ட 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் | 999cc, குறைந்த ஆற்றல் மற்றும் இழுவை திறன் கொண்ட 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் |
| மைலேஜ் | பெட்ரோல் எடிஷனில் 19.71 கிமீ மைலேஜும், சிஎன்ஜி எடிஷனில் 26.78 கிமீ மைலேஜும் வழங்குகிறதாம் | பெட்ரோல் எடிஷனில் அதிகபட்சமாக 20 கிமீ வரை மைலேஜ் வழங்குகிறதாம் |
| கம்ஃபர்ட் | அடிப்படை மற்றும் பல பயன்பாட்டிற்கு உகந்தது | மாடர்ன் மற்றும் அதிக சொகுசு வசதிகளை கொண்டது. உதாரணமாக பவர் ஸ்டியரிங் ஆப்ஷனை கொண்டுள்ளது |
| வசதிகள் | அம்சங்கள் என்பது குறைவாகவே உள்ளது. வாங்கும்போது இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆப்ஷன் இல்லை. வாங்கிய பிறகு விருப்பத்தின் பேரில் சேர்த்துக்கொள்ள முடியும். | ஈகோவுடன் ஒப்பிடுகையில் கூடுதல் அம்சங்களை பெற்றுள்ளது. உதாரணமாக இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்க்ரீன், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் உள்ளிட்ட பல |
| பாதுகாப்பு வசதிகள் | பாதுகாப்பில் மோசமான சூழலில் உள்ளது. சர்வதேச பாதுகாப்பு பரிசோதனையில் பெரியவர்களுக்கான பிரிவில் 0 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது | முன்னணியில் இல்லாவிட்டாலும், 2024 விதிகளின்படி சர்வதேச பாதுகாப்பு பரிசோதனையில் 2 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. |
யாருக்கு மாருதி ஈகோ பொருந்தும்?
- மலிவு விலை மற்றும் நடைமுறைக்கு உகந்தது ஆகிய அம்சங்கள் பிரதான தேர்வாக இருந்தால்
- பெரிய குடும்பம் மற்றும் கடுமையான வணிக பயன்பாட்டிற்கான வாகனத்தை நாடுபவர்கள்
- குறைந்த எரிபொருள் செலவிற்கான சிஎன்ஜி ஆப்ஷனை தேடுபவராக இருந்தால்
- அடிப்படை வசதிகள், குறைந்த இண்டீரியர் மற்றும் குறைவான பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும் போதும் என கருதுபவர்களுக்கு மாருதி ஈகோ சரியான தேர்வாக இருக்கும்
யாருக்கு ரெனால்ட் ட்ரைபர் பொருந்தும்
- குடும்ப பயன்பாட்டிற்கு மிகவும் நவீனமான, அம்சங்கள் நிறைந்த வாகனத்தை விரும்புபவர்கள்
- பயணத்தின் போது சிறந்த கம்ஃபர்ட் மற்றும் பாதுகாப்பை எதிர்பார்ப்பவர்கள்
- நல்ல பூட் ஸ்பேஸுடன் கூடிய நெகிழ்வான இருக்கை வசதியை விரும்புபவர்கள்
- ஓட்டுவதற்கு எளிதான கார் வேண்டும், குறிப்பாக பவர் ஸ்டீயரிங் இருந்தால் நல்லது என கருதுபவர்களுக்கு ரெனால்ட் ட்ரைபர் நலல் தேர்வாக இருக்கும்





















