Tata Punch: மார்கெட்டை கலக்கும் சுட்டிப் பையன் - டாடாவிற்கு பஞ்ச் கொடுக்கும் மாருதி, ஹுண்டாய்? மைக்ரோ SUV
Tata Punch Rival: மைக்ரோ எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் டாடா பஞ்ச் கார் மாடலுக்கான போட்டியாளர்களை, இந்திய சந்தையில் களமிறக்க மாருதி மற்றும் ஹுண்டாய் தீவிரம் காட்டி வருகின்றன.

Tata Punch Rival: டாடா பஞ்ச் கார் மாடலுக்கான போட்டியாளர்களை தயார் செய்வதில் மாருதி மற்றும் ஹுண்டாய் வேகமெடுத்துள்ளன.
மார்கெட்டை கலக்கும் சுட்டிப் பையன் - டாடா பஞ்ச்
கடந்த 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டாடா பஞ்சின் இன்ஜின் மற்றும் மின்சார எடிஷனானது, தொடர்ந்து உள்நாட்டில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக திகழ்கிறது. வலுவான பாதுகாப்பு, கச்சிதமான வடிவம், நடைமுறைக்கு உகந்த மாடல் மற்றும் மலிவு விலை ஆகியவற்றால் வாடிக்கையாளர்களுக்கான சிறந்த தேர்வாக உள்ளது. பெட்ரோல், டர்போ பெட்ரோல், சி.என்.ஜி என மொத்தம் 26 ட்ரிம்களில் விற்பனை செய்யப்படும் இந்த காரின் விலை, ரூ.5.59 லட்சத்தில் தொடங்கி ரூ.10.55 லட்சம் வரை நீள்கிறது. மைக்ரோ எஸ்யுவி பிரிவில் பஞ்ச் கார் மாடல் செலுத்தி வரும் ஆதிக்கத்தை தணிக்கும் வகையில், மாருதி சுசூகி மற்றும் ஹுண்டாய் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் காம்பேக்ட் க்ராஸ் ஓவர் மாடல்களை அறிமுகப்படுத்த தீவிரம் காட்டி வருகின்றன. அந்த புதிய எஸ்யுவிக்கள் தொடர்பாக இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஹுண்டாயின் புதிய மின்சார கார் Vs பஞ்ச் EV
அண்மையில் முற்றிலும் மூடி மறைக்கப்பட்ட நிலையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட, ஹுண்டாயின் மின்சார சப்காம்பேக்ட் எஸ்யுவி புகைப்படங்களில் சிக்கியது. இது உள்ளூர் சந்தைக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, பஞ்ச் கார் மாடலுக்கு போட்டியாக களமிறக்கப்பட உள்ளது. கூர்மையான மற்றும் பாக்ஸி தோற்றத்துடன் முன் மற்றும் பின்புறம் இரண்டிலும், பிக்சலேட்டட் வடிவமைப்புடன் கூடிய எல்இடி பகல்நேரங்களில் ஒளிரும் விளக்குகளை தெளிவாக உணர முடிகிறது. இதுபோக டூயல் டோன் டைமண்ட் கட் அலாய் வீல்கள், ப்ளாஸ்டிக் பாடி க்ளாடிங் உடன் கூடிய வீல் ஆர்க்ஸ், ஃபிட்டட் டோர் ஹேண்டில்கள், ப்ளாக் ரூஃப் ரெயில்கள், ப்ளாக்ட்-அவுட் விண்டோ லைன், ஃப்ளாட் டெயில்கேட் மற்றும் ஷார்ட் ஓவர்ஹேங்க்ஸ் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.
மற்றபடி, க்ளோஸ்ட் ஆஃப் க்ரில் முன்பகுதியில் கட்டமைக்கப்பட்ட சார்ஜிங் போர்ட், டிஜிட்டல் காக்பிட், பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா மற்றும் கனெக்டட் கார் டெக் உள்ளிட்ட அம்சங்களும், ஹுண்டாயின் புதிய எஸ்யுவியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி எஸ்யுவி Vs டாடா பஞ்ச்
இன்ஜின் விவரங்கள்:
மாருதி தரப்பில் Y43 என்ற கோட்நேமை கொண்டுள்ள புதிய மைக்ரோ எஸ்யுவி தொடர்பான தகவல்கள் இன்னும் ரகசியமாகவே உள்ளன. அதேநேரம், மைல்ட்-ஹைப்ரிட், EV, சிஎன்ஜி என இந்த காம்பேக்ட் க்ராஸ் ஓவர் ஆனது பலதரப்பட்ட இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என, ப்ராண்ட் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்ஜின் எடிஷனில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் மைல்ட் ஹைப்ரிட் அல்லது 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் ஆப்ஷன்களில் ஒன்று அல்லது இரண்டுமே இடம்பெறலாம் என கூறப்படுகிறது. இதுபோக உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட சீரிஸ் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜினையும், பஞ்சிற்கு போட்டியான தனது புதிய காரில் இணைக்கலாம். ஃப்ராங்க்ஸ் உடன் சேர்ந்து புதிய கார் 2027ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளதாம்.
வடிவமைப்பு விவரங்கள்:
மாருதியின் புதிய காம்பேக்ட் க்ராஸ் ஓவர் ஆனது, எஸ்யுவியின் டிசைன் எலிமெண்ட்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்ட, பாக்ஸி தோற்றத்தை பெறுமாம். ஹார்ட்டெக்ட் ப்ளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு, ஸ்விஃப்ட் மற்றும் அதற்கு இணையான ஹேட்ச்பேக்குகளுடன் நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளதாம். 2026 நிதியாண்டில் எஸ்யுவி பிரிவில் மாருதி சுசூகி நிறுவனம் 19.6 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















