Honda Electric Scooter: நவ.27ம் தேதி மின்சாரா ஆக்டிவா ஸ்கூட்டர் அறிமுகம்? டீஸ் செய்த ஹோண்டா நிறுவனம்..!
Honda Electric Scooter: இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், நவம்பர் 27ம் தேதி வெளியாகும் என ஹோண்டா ஸ்கூட்டர் தெரிவித்துள்ளது.
Honda Electric Scooter: வரும் நவம்பர் 27ம் தேதி வெளியாவது ஆக்டிவா ஸ்கூட்டரின், மின்சார எடிஷனாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்:
ஹோண்டா ஸ்கூட்டர்ஸ் நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள, எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டீஸ் செய்துள்ளது. இது மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆக்டிவாவின் மின்சார எடிஷனாக இருக்குமோ என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. முக்கிய அறிவிப்பு நவம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என குறிப்பிடபப்ட்டுள்ள அந்த போஸ்டரில், பிரபலமான ஆக்டிவா பிராண்டின் கீழ் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகையை வலுவாக சுட்டிக்காட்டி, "வாட்ஸ் அஹெட்" என்ற முழக்கம் இடம்பெற்றுள்ளது.
வடிவமைப்பு தொடர்பான தகவல்கள்:
ஹோண்டா நிறுவனம் இந்தியாவிற்கான தனது மின்சார வாகன (EV) திட்டங்களை சீராக முன்னெடுத்து வருகிறது. கடந்த ஆண்டு காப்புரிமை தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் மோட்டார்கள், பேட்டரி பேக்குகள், சார்ஜர்கள் மற்றும் கட்டுப்படுத்திகள் போன்ற முக்கிய EV பாகங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், காப்புரிமைகளில் புதிய ஆக்டிவா எலெக்ட்ரிக் என்னவாக இருக்க முடியும் என்பதற்கான வடிவமைப்பு தொடர்பான தகவல்களும் அடங்கியுள்ளன. இதில் ஃப்ளோர்போர்டின் கீழ் வைக்கப்பட்டுள்ள நிலையான பேட்டரி பேக் மற்றும் பின் சக்கரத்தை இயக்கும் ஹப் மோட்டார் ஆகியவை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஹப் மோட்டார் செட்டப் அதிக பயன்பாட்டு மையமான, இடைப்பட்ட ஸ்கூட்டரைச் சுட்டிக் காட்டினாலும், ஹோண்டாவின் எதிர்கால EVகள், பரந்த பேட்டரி-மாற்று நெட்வொர்க் மூலம் ஆதரிக்கப்படும் ஸ்வாப் பேட்டரிகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
An enthralling journey awaits you. Stay tuned to #ElectrifyYourDreams#Honda #ThePowerOfDreams pic.twitter.com/442sMMGGUA
— Honda 2 Wheelers India (@honda2wheelerin) November 12, 2024
EV இயங்குதளம் மற்றும் உற்பத்தித் திட்டங்கள்
ஹோண்டாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் " பிளாட்ஃபார்ம் ஈ " எனப்படும் புதிய பிரத்யேக பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும். இது வெவ்வேறு பேட்டரி கட்டமைப்புகளுடன் கூடிய மாடல்களின் வரம்பை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்டிவா எலக்ட்ரிக், இந்திய சந்தையில் ஹோண்டாவின் அறிமுக EV ஆக எதிர்பார்க்கப்படுகிறது. இது "மிட்-ரேஞ்ச்" நிலையான-பேட்டரி வடிவமைப்பிற்காக திட்டமிடப்பட்டுள்ளது. மாற்றக்கூடிய பேட்டரி அமைப்புடன் கூடிய இரண்டாவது EV மாடலும் தயாராக உள்ளது. இது இந்தியா முழுவதும் உள்ள பிரத்யேக நிலையங்களில் எளிதாக பேட்டரி பரிமாற்றத்தை அனுமதிக்கிறது.
வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக, கர்நாடகாவில் உள்ள நர்சபுரா ஆலையில் பிரத்யேக "ஃபேக்டரி E" உட்பட குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்புகளில் ஹோண்டா முதலீடு செய்துள்ளது. இந்த ஆலை EV மோட்டார்கள் தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் 1 மில்லியன் யூனிட் உற்பத்தி திறனை எட்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. .
நாடு தழுவிய பேட்டரி- ஸ்வாப் நெட்வொர்க்:
எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹோண்டா பேட்டரி-ஸ்வாப் நிலையங்களின் நெட்வர்க்கை நிறுவ திட்டமிட்டுள்ளது. ஆரம்பத்தில் பெங்களூருவில் தொடங்கப்பட்டு, அடுத்தடுத்த கட்டங்களில் இந்த வசதிகள் தென் மாநிலங்கள் மற்றும் இறுதியில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. தற்போதுள்ள 6,000-க்கும் மேற்பட்ட சேவை மையங்களில் சிலவற்றை EV சேவை மற்றும் ஆதரவிற்காக பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட "வொர்க் ஷாப் E" மையங்களாக மாற்றவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.