Ratan Tata Motors: இந்தியாவின் பேட்மேன் ரத்தன் டாடா - செல்லக் குழந்தையான நானோ, கார் சந்தையில் மேஜிக்
Ratan Tata Motors: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரத்தன் டாடா ஏற்படுத்திய தாக்கம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Ratan Tata Motors: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடுத்தர மக்களுக்காக, நானோ என்ற மலிவு விலை காரை ரத்தன் டாடா அறிமுகம் செய்தார்.
ரத்தன் டாடா மறைவு:
இந்தியாவில் பெரிதும் மதிக்கப்படும் தொழிலதிபரான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய, அவரது மறைவிற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை அவர் எப்படி மேம்படுத்தினார், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரத்தன் டாடா எப்படி தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
டாடா இண்டிகா கார்:
1998ம ஆண்டு நடைபெற்ர ஆட்டோ எக்ஸ்போவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் இண்டிகா காட்சிப்படுத்தப்பட்டது. டாடா மோட்டார்ஸை இந்திய வாகனத் துறையில் ஆழமாக கால் பதிக்கச் செய்ய வேண்டும் என்ற ரத்தன் டாடாவின் கனவிற்கான மிக முக்கிய நடவடிக்கையாகும். அதன் காரணமாகவே இண்டிகா அவரது செல்லப் பிராஜெக்ட் ஆக இருக்க, வடிவமைப்பில் இருந்தே அவர் இந்த பணியில் அதிகம் ஈடுபாடு காட்டினார். டாடா மோட்டார்ஸுக்கு இது ஒரு முக்கிய தருணம் மற்றும் இண்டிகா மலிவு விலையில் வந்தது. பயனாளர்களை கவர்ந்து தேவை கிடுகிடுவென உயர்ந்தது. இந்தியர்கள் குடும்பமாக பயணிப்பதற்கு ஏதுவான காரை உருவாக்க வேண்டும் என்ற ரத்தன் டாடாவின் கனவை இண்டிகா மெய்பித்தது. மேலும் நல்ல இடவசதி, வடிவமைப்பு மற்றும் போட்டியாளர்களை விட குறைவான விலையுடன் சந்தைக்கு வந்து இண்டிகா பெரும் வரவேற்பை பெற்றது.
நானோ கார் திட்டம்:
இண்டிகா கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தையே அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியது.ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ் செயல்வடிவம் பெற்ற மிக முக்கியமான திட்டமாக இது குறிப்பிடப்படுகிறது. இண்டிகாவைத் தொடர்ந்து, நானோ கார் அவரது இதயத்திற்கு நெருக்கமான மற்றொரு திட்டமாகும். இந்தியாவின் மலிவு விலை நான்கு சக்கர வாகனமாக இருக்க வேண்டும், மேலும் இந்திய குடும்பங்களை ஸ்கூட்டரில் இருந்து காருக்கு நகர்த்த வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. மார்ச் 2009 இல் மிகுந்த ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட நானோ காரின் விலை வெறும் 'ரூ.1 லட்சம்' ஆகும். இது எதிர்பார்த்த வெற்றியாக மாறவில்லை என்றாலும், டாடா மோட்டார்ஸ் இன்றைய நிலையை அடைய தேவையான பல கற்பித்தலை வழங்கியது.
ஜாகுவார் லேண்ட் ரோவரை வாங்கிய ரத்தன் டாடா
2008 ஆம் ஆண்டில் ஃபோர்டு மோட்டார் கோ நிறுவனத்திடம் இருந்து பிரிட்டிஷ் சொகுசு கார் பிராண்டுகளான, ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் ஆகியவற்றை 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் வாங்கியதும் ரத்தன் டாடாவின் மிக முக்கிய நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையானது ஆடம்பர பிராண்டிற்கு வெற்றிகரமான திருப்பத்தை ஏற்படுத்தியது, இப்போது டாடாவுக்கு முதுகெலும்பாக JLR உள்ளது. எனவே, இண்டிகா போன்ற தயாரிப்புகள் முதல் லேண்ட் ரோவர் வரை, ரத்தன் டாடா இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஒரு வளமான பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார். கண்ட கனவின்படி, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா மோட்டார்ஸ் தற்போது தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளது.
பேட்மேன் ஆக மாறிய ரத்தன் டாடா
முன்னதாக, கடந்த 1999ம் ஆண்டு ரத்தன் டாடா, தங்களது கார் உற்பத்தி பிரிவை விற்பனை செய்வதற்காக நேரடியாக ஃபோர்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு சென்று இருந்தார். அப்போது, உங்களுக்கு கார்களைப் பற்றி எதுவும் தெரியாது, முதலில் நீங்கள் ஏன் இந்த பணியை எல்லாம் தொடங்குகிறீர்கள்? நாங்கள் அதை வாங்கி உங்களுக்கு நன்மை செய்கிறோம்” என ஃபோர்ட் நிறுவன தலைவரான பில் ஃபோர்ட் கூறியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ரத்தன் டாடா கார் பிரிவை விற்பனை செய்யும் முடிவை கைவிட்டு தாயகம் திரும்பினார்.
காலங்கள் ஓடி 2008ம் ஆண்டு வந்தது. சர்வதேச பொருளாதார மந்த நிலையால், ஃபோர்ட் நிறுவனம் கிட்டத்தட்ட திவால் நிலையை எட்டியது. அப்போது, ஃபோர்ட் நிறுவனம் வசம் இருந்த ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் பிராண்டுகளை, 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கையகப்படுத்தினார். அப்போது, “JLR ஐ வாங்குவதன் மூலம் நீங்கள் எங்களுக்கு ஒரு பெரிய உதவி செய்கிறீர்கள்" என்று ஃபோர்டு தலைவர் டாடாவுக்கு நன்றி தெரிவித்ததாக டாடா குழும நிர்வாகிகள் தெரிவித்தனர்.
டிசி காமிக்கில் பேட்மேன் பிரபலமான சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் என்பதோடு, மிகவும் பணக்காரர் ஆவார். பொதுமக்களுக்கு உதவுவதோடு, குற்றவாளிகள் மற்றும் ஆணவம் பிடித்தவர்களுக்கு தனது சக்திகள் மற்றும் பணத்தின் மூலம் பாடம் கற்பிப்பார். அதுபோலவே, சமூக சேவைகளுக்கு பெயர் போன ரத்தன் டாடா, ஆணவத்தால் ஆடிய ஃபோர்ட் போன்ற நிறுவனங்களுக்கு நல்ல பாடத்தையும் கற்பித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

