திருவண்ணாமலை கார்த்திகை தீபம் : மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது தீப கொப்பரை..
19ஆம் தேதி 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொட்டும் மழையில் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற திரு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. அதையொட்டி தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் கோவில் 5-ஆம் பிரகாரத்தில் சுவாமி பவனி நடைப்பெற்று வருகிறது. முக்கிய விழாவான மகா தீபபெருவிழா நாளை 19-ஆம் நாளை நடைபெற உள்ளது. அதையொட்டி, நாளை அதிகாலை 4 மணிக்கு, அண்ணமலையார் கோவிலின் சுவாமி சன்னதியில் பரணிதீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு, சிவனே மலையாக காட்சி தரும் 2,668 அடி உயர மலை உச்சியின் மீது மகா தீபம் ஏற்றப்படும்.
மகாதீபம் ஏற்றுவதற்காக, 3,500 கிலோ நெய் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தீபம் ஏற்றுவதற்கு தாமிரத்தால் ஆன (செப்பு) உருவான ஐந்தரை அடி உயரமுள்ள புதிய மகா தீப கொப்பரை இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. அதனையும் பக்தர்கள் காணிக்கையாக ஏற்கனவே வழங்கியுள்ளனர். மேலும், மகாதீபம் ஏற்ற திரியாக பயன்படுத்தும் ஆயிரம் மீட்டர் காட்டன் துணியை, உபயதாரர்கள் நேற்று அண்ணாமலையார் கோவிலில் வழங்கினர். அதையொட்டி, தீப திரிக்கு. அண்ணாமலையார் கோயில் 3-ஆம் பிரகாரத்தில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இந்நிலையில், மகாதீப கொப்பரைக்கு அதிகாலை 5.30 மணிக்கு அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அதன் பின்னர் சுமார் 250 கிலோ எடையுள்ள தீபகொப்பரையை, திருப்பணியாளர்கள் தோளில் சுமந்தபடி கொட்டுமழையில் தீப கொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு செல்கின்றனர்.
இந்த தீப கொப்பரை ஆனது பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று அடுக்குகளால் ஆனது தான் என நம்பப்படுகிறது. சிவனும் சக்தியும் ஒன்று என்ற தத்துவதை விளக்கும் வகையில் நாளை கோவில் வளாகத்தில் தீபதரிசன மண்டபம் எதிரில் சுமார் 6 மணி அளவில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி தாண்டவம் ஆடிய பின்னரே மலையின் உச்சியில் உள்ள கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து, மலை உச்சியில் நிலை நிறுத்தப்படும் மகாதீப கொப்பரைக்கு பாரம்பரிய வழக்கப்படி. சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். மேலும், நாளை அதிகாலை நெய் மற்றும் திரி ஆகியவை மலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகாதீபத்திற்கான நெய் காணிக்கையை ஏராளமான பக்தர்கள் கொவிலில் செலுத்தி வருகின்றனர். அதற்காக, நெய் குடகாணிக்கை சிறப்பு பிரிவுகள் திட்டிவாசல், 3-ஆம் பிரகாரத்தில் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக, இந்த ஆண்டும் தீபத்திரு விழாவை நேரில் தரிசிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.