அம்மனுக்கு தாலி காணிக்கை செலுத்தும் சடங்கு.. விருத்தாசலம் அருகே ஒரு விநோத திருவிழா..
குழந்தைகள் நோயின்றி வாழ வேண்டும் எனவும், தங்களின் தாலியை கழற்றி, அதில் குங்குமம், மஞ்சள் மற்றும் பூஜை பொருட்களுடன் பிடாரி அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர்.
அம்மனுக்கு தாலி காணிக்கை செலுத்தும் சடங்கு விருத்தாசலம் அருகே விநோத திருவிழா
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த காணாதுகண்டான் கிராமத்தில் கர்ப்பிணி, குழந்தை பெற்ற பெண்கள் அம்மனுக்கு தாலி காணிக்கை செலுத்தும் வினோத திருவிழா நடந்தது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சின்னபண்டாரங்குப்பம் பிடாரியம்மன் கோவில் சித்திரை பெருவிழா கடந்த 29-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இந்த நிலையில் இந்த பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தாலி காணிக்கை செலுத்தும் விழா, 8-ஆம் நாள் திருவிழாவான காலை வெகு விமரிசையாக நடந்தது.
சின்னபண்டாரங்குப்பம் கிராமத்தின் அருகில் உள்ள, காணாதுகண்டான் கிராமத்திற்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்தது. அப்போது, அக்கிராமத்தில் உள்ள கர்ப்பிணி பெண்கள் சுக பிரசவத்தில் குழந்தை பிறக்க வேண்டும் எனவும், குழந்தை பெற்ற பெண்கள் தங்களின் குழந்தைகள் நோயின்றி வாழ வேண்டும் எனவும், தங்களின் தாலியை கழற்றி, அதில் குங்குமம், மஞ்சள் மற்றும் பூஜை பொருட்களுடன் பிடாரி அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர்.
தாலி காணிக்கை கொடுத்த பெண்கள், அதன் பின், மாங்கல்யம் உள்ள தாலியை அணியாமல் வெறும் மஞ்சள் கயிறை மட்டுமே அணிவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.இந்த கிராம மக்கள் மட்டும் இன்றி, வெளியூர் மற்றும் வெளி நாட்டில் வசிக்கும் பெண்களும் வெளி ஊர் மற்றும் மாவட்டங்களில் வசிக்கும் பெண்கள் என , நீண்ட நாட்களாக குழந்தை இ்ல்லாத பெரும்பாலான பெண்களும் அம்மனுக்கு தாலி காணிக்கை செலுத்தினர். தாலி காணிக்கை செலுத்திய பின்னர், ஆடு, கோழி ஆகியவற்றை வீதி உலா வரும் அம்மன் முன், பலியிடுட்டு நேர்த்தி கடன் செலுத்துவதை வழக்கமாகவும் கொண்டு உள்ளனர்.
இது குறித்து ஊர் மக்கள் கூறுகையில், ”வருடா வருடம் அம்மனை சித்திரை மாதம் எங்களது ஊருக்கு அழைத்து வந்து தாலி காணிக்கை செலுத்துவோம், அம்மனிடம் வேண்டுதல் இருந்தாலும் சரி வேண்டுதல் இல்லை என்றாலும் சரி ஊரில் உள்ள பெண்களுக்கு திருமணம் முடிந்து தலைச்சம் பிள்ளை பிறந்த உடன் தாலியை கழட்டி வைத்து விடுவோம். பின்னர் சித்திரை மாதம் அம்மன் ஊர் வளம் வரும்பொழுது அதனை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்திவிடுவோம், இந்த பழக்கம் எங்களது முன்னோர்கள் காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அம்மனுக்கு தாலி காணிக்கை செலுத்தினால் நாம் வேண்டியது நடைபெறும் என்பது காலம் காலமாக எங்கள் ஊர் மக்களின் நம்பிக்கை ஆகும்” என தெரிவித்தனர்.
கொரோனா ஊரடங்கால் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. இரண்டு வருடங்களுக்கு பின் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது மேலும் இன்று நடந்த திருவிழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தாலி காணிக்கை செலுத்தினர்.