Rishabam Rasi Puthandu Palan: 2024-ஆம் ஆண்டு ரிஷப ராசிக்கான வருட பலன் : இந்த வருடம் ஏற்றமா? மாற்றமா?
New Year Rasi Palan 2024 Rishabam: புத்தாண்டான 2024ம் ஆண்டுக்கான ரிஷப ராசிக்கான பலன்களை கீழே விரிவாக காணலாம்.
அன்பார்ந்த ABP Nadu ரிஷப ராசி வாசகர்களே,
2023 ஆம் ஆண்டு கலவையான பலன்களை அனுபவித்த நீங்கள், 2024 ஆம் ஆண்டு கொடி கட்டி பறக்க போகிறீர்கள். எந்த விஷயங்கள் உங்களுக்கு ஏற்றமாக இருக்கும், எந்த விஷயங்கள் உங்களுக்கு மறைமுக எதிர்ப்பாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.
2023 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் உங்களுக்கு ஓரளவுக்கு சமாளிக்கக்கூடிய சக்தியை கொடுத்திருக்கும். பலன்களை இரண்டாகப் பிரிக்கலாம் வருடத்தின் முதல் மூன்று மாதங்கள் . பின்பு எஞ்சியிருப்பது ஒன்பது மாதங்கள்.
வருடத்தின் முதல் 3 மாதங்கள் :
வருட ஆரம்பமே உங்களுக்கு சில விஷயங்களில் ஏற்றமாக இருக்கப்போகிறது. உதாரணமாக வீடு மனை வாங்க சிறந்த நேரம், புதிதாக வண்டி வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட தூர பிரயாணம் செய்ய வேண்டும் என்று காத்திருந்த உங்களுக்கு இது ஒரு பொன்னான காலம். இருக்கும் இடத்தை விட்டு வெகு தூர பிரயாணம் சுப காரிய செலவு, மனதிற்கு மகிழ்ச்சியான காரியங்கள் என்று வருடத்தின் முதல் மூன்று மாதங்கள் சிறப்பாகவே அமையும். எதிர்பார்த்த பண வரவு தாராளமாக அமையும். திடீரென்று பண வரவு உங்களுக்கு வந்து உங்களை திக்கு முக்காட வைக்க போகிறது.
வருடத்தின் எஞ்சிய 9 மாதங்கள் :
வருடத்தின் மீதமிருக்கும் எஞ்சிய மாதங்கள் எல்லாம் உங்களுக்கு பொன்னான மாதங்களாகவே அமையப் போகிறது. குறிப்பாக திருமணத்திற்காக காத்திருக்கும் உங்களுக்கு திருமண வரன் நல்லபடியாக அமைந்து இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் கூடி வரப்போகிறது. பிள்ளைகள் வழியில் முன்னேற்றம் அடையப் போகிறீர்கள். திருமணம் முடிந்த கையோடு புத்திர பாக்கியத்திற்காக காத்திருந்த உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வீடு தேடி வரப்போகிறது. இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு தொழிலுக்காக செல்ல விரும்புவோர் தாராளமாக செல்லலாம். குறிப்பாக அண்டை மாநிலம், அண்டை நாடு, வெளிநாடு போன்ற இடங்களுக்கு வேலைக்காக நீங்கள் சென்று உங்கள் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
எதிரிகள் உதிரிகளாவார்கள்:
உங்கள் ராசிக்கு லாவாதிபதியான குரு பகவான் உங்கள் ராசியை வந்து அமர்வதால், எண்ணிய எண்ணங்கள் ஈடேற போகிறது. நீண்ட நாட்களாக நடக்காமல் தள்ளிப்போன சுப காரியங்கள் அனைத்தும் நடத்துவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எதிரிகளின் சூழ்ச்சியால் நீங்கள் சிக்கி இருந்த காலம் போய் தற்போது எதிரிகள் உங்களைத் தேடி வந்து மன்னிப்பு கேட்டு உங்களிடம் சரண் அடைவார்கள்
அதிகப்படியான கடன் தொல்லையால் நீங்கள் சிக்கியிருந்த காலத்தில் கடன் காரர்களுக்கு பதில் சொல்லி, நீங்கள் அவமானப்பட்டது, உங்கள் நெஞ்சில் நீங்காத வடுவாக இருந்திருக்கும். தற்போது அந்த நிலை மாறி மலையளவு கடன் இருந்தாலும் கடுகு அளவு சிறிதாக போகும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.
பொன்னான காலம்:
உடல்நிலை சரியில்லாத உங்களுக்கு மருத்துவத்தின் மூலமாகவும் அறுவை சிகிச்சையின் மூலமாகவும் உடல்நிலை தேறி மீண்டு வருவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பிரிவினை நீங்கும். நண்பர்கள் மூலமாக ஆதாயம் உண்டு. குறிப்பாக பார்ட்னர்ஷிப் வகையில் பணத்தை முதலீடு செய்யலாமா என்று நினைத்திருந்த உங்களுக்கு இது ஒரு பொன்னான காலம். வருடத்தின் எஞ்சிய 9 மாதங்களை பயன்படுத்தி தகுந்த இடத்தில் முதலீடு செய்து உங்களின் லாபத்தை இரட்டிப்பாக்கிக் கொள்ளலாம்.
கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது :
திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று கூறிவிட்டு, கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது என்று சொன்னால் அது எப்படி சாத்தியமாகும் என்று நீங்கள் நினைக்கலாம். "ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்" என்ற பாடல் ஒரு சிலருக்கு நன்றாக தெரியும். அந்த கூற்றின்படி லக்னத்தில் கூறு வந்தால் கணவன் மனைவியுடைய சிறு சிறு தொந்தரவுகளை ஏற்படுத்துவார். அதிலிருந்து நீங்கள் மீண்டு வந்து வாழ்க்கையை சுமூகமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக ரிஷப ராசி கணவனோ அல்லது மனைவியோ உங்கள் வாழ்க்கைத் துணையிடம் பேசும்போது, பார்த்து பேசுவது நல்லது. சிறிய வார்த்தை கூட தீ பொறியாத மாறி குடும்பத்தில் சலசலப்பை உண்டாக்கலாம். காலபைரவர் வழிபாடு சிறந்தது.
குலதெய்வ கோயிலும் 9 -ஆம் பாவமும் :
மே மாதத்திற்கு பிறகு உங்களுடைய ராசிக்கு குருபகவான் வந்து அமர்வதால் தடைபட்ட குலதெய்வ வழிபாடு மீண்டும் எடுத்து நடத்துங்கள் வாழ்க்கையில் இதுவரை உங்களுக்கு தடைபட்ட அனைத்தும் எளிதில் கிடைக்கப்போகிறது. ரிஷப ராசிக்கு எட்டாம் இடமான குரு பகவான் சிலருக்கு குல தெய்வங்கள் பூர்வீகத்தை மறையச் செய்ய பண்ணி இருப்பார். அதன்படி குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபடுவது, குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே குலதெய்வத்தின் படங்களை வைத்து 9 வாரங்கள் நெய் தீபம் போட்டு வருவது நல்லது.
தொழிலில் முன்னேற்றம் :
இரவு பகலாக வேலை செய்து உங்கள் தொழிலில் முன்னேற்றம் இல்லை என்று எண்ணிய உங்களுக்கு, இந்த 2024 ஆம் ஆண்டு மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கப் போகிறது. ரிஷப ராசிக்கு பத்தாம் இடத்தில் சனி பயணிப்பதால் தொழிலின் முன்னேற்றம் காணப் போகிறீர்கள். குறிப்பாக பத்தாம் வீட்டு அதிபதி 10ஆம் வீட்டிலேயே பயணிப்பதால் அதுவும் கால புருஷ லக்னத்திற்கு 11ஆம் வீடாக இருப்பதால் ஒரு வேளைக்கு இரண்டு வேலை செய்து அதன் மூலம் நல்ல லாபமீட்ட போகிறீர்கள். உயர் பதவிகள் உங்களைத் தேடி வரும்.
லாப ஸ்தானத்தில் ராகு :
மற்ற கிரகங்கள் ஒரு மடங்கு கொடுத்தால் ராகு பன்மடங்கு கொடுப்பார். அப்படிப்பட்ட ராகு உங்களுடைய ரிஷப ராசிக்கு 11 ஆம் வீட்டில் சென்று கொண்டிருப்பதால் எதிர்பாராத திடீர் தன வரவு உண்டு, குறிப்பாக ரிஷப ராசிக்கு 11 ஆம் வீட்டில் செல்லும் ராகுவின் வீட்டு அதிபதி உங்கள் ராசியிலேயே செல்வதால் எதிர்பாராத தன வரவு, வங்கியின் சேமிப்பு உயர்வது, கேட்ட இடத்தில் உடனே பணம் கிடைப்பது போன்ற மனதிற்கு இனிமையான லாபகரமான சம்பவங்கள் நடைபெறப்போகிறது.
அதிர்ஷ்டமான எண் : 5, 6
அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை
வணங்க வேண்டிய தெய்வம் : குரு பகவான்